மெட்ராஸ்கபே. தமிழர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை

22.8.13

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் தமிழினத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்துவதாகவும் தயாரிக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியீடு செய்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்த வேண்டாம் என்று யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கி உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டாம் என்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசிடம் மிகவும் விநயமாக நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் கபே திரைப்படத்தை இயக்கி நடித்த ஜோன் ஆபிரகாம் தனது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள முற்படவேண்டும். இந்திய அரசின் சதியாலும் சிறிலங்கா அரசாங்கத்தினதும் படைகளினதும் ஈவிரக்கமற்ற செயற்பாட்டாலும் பல இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளமையை அனைத்து உலகமும் அறியும். ஜோன் ஆபிரகாமும் இதனை அறியாமல் இருக்கமாட்டார். எனவே, தமிழர்களின்; தியாகங்களைக் கொச்சைப்படுத்த உலகிலுள்ள எந்தவொரு நபரும் முற்படவேண்டாம். மாறாக கொச்சைப்படுத்த முற்படுவதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்கின்ற துரோகமாகும் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகப் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள மெட்டராஸ் கபே திரைப்படம் தொடர்பில் இன்று புதன்கிழமை மதியம் அவசர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள குடாநாட்டு மக்கள் பேரவை அந்த அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.


அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேசிய இராணுவம். அதன் தலைவர் பிரபாகரன் அவர்கள் உலகிலுள்ள ஒவ்வொரு தமிழ் மக்களாலும் நேசிக்கப்படுகின்றார். அவர் இன்னும் மரணிக்கவில்லை. சில காரணங்களின் நிமித்தம் மறைவாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் தமிழ் மக்கள் முன்பாக வருவார். இறுதி யுத்தத்தில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளையும் துரோகங்களையும் தேசியத் தலைவரின் வாயாலேயே உலகம் விரைவில் அறியும்.

தேசியத் தலைவரோ அவரால் வழிநடத்தப்பட்ட புலிகளோ உலகிலுள்ள எந்தவொரு இனத்தையோ தனி நபரையோ கொலை செய்ய முற்படவில்லை. உலகிலுள்ள அனைத்து இனங்களையும் நேசித்து வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள். புதிய நிலங்களைப் பிடிப்பதற்கோ இல்லாத ஒன்றைப் பெறுவதற்கோ புலிகள் போராட்டம் நடத்தவில்லை. தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தேசத்தில் வாழ்வதற்கே புலிகள் போராட்டம் நடத்தினார்கள்.
தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலங்களை சிங்களப் படைகள் அபகரித்து தமிழினத்தை கருவறுக்க முற்பட்டது. இதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைத்தது. அமைதிப் படை என்ற பெயரில் சிறிலங்காப் படைகளுக்கு உதவியாக தனது படைகளை ஈழத்திற்கு அனுப்பிய இந்தியா ஈழத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியது. இந்தக் காரணத்தாலேயே இந்தியப் படைகளுக்கு எதிராக தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
எமது போராட்டத்திற்கு தமிழக முன்னாள் முதலமைச்சரும் தமிழர் தமது மனங்களில் இன்றும் போற்றப்படுபவருமாகிய எம்.ஜி.ஆர் அவர்கள் பூரண உதவியை வழங்கினார். இந்த நிலையில் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கும் தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரனை கொலையாளியாக சித்தரிப்பதற்கும் யாருக்கும் உரிமையில்லை. அவ்வாறு ஒரு ஆவணப்படம் வெளிவருமாயின் அதனால் தமிழகத்திலும் உலகெங்கும் பல அசம்பாவிதங்கள் ஏற்படலாம். எனவே, இந்தப் படத்தை வெளியீடு செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது.
ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. போராட்ட காலத்தை விட தற்போதைய காலத்திலேயே தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். நில ஆக்கிரமிப்பு, கலை கலாசார சீரழிவு, போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான சிறிலங்காப் படையினரதும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களினதும் பாலியல் வல்லுறவுகள், இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற்றப்படாமை, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு தமிழ் மக்கள் முகம்கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஈழத் தமிழ் மக்களுக்கு சாதகமாக தமிழகம், கர்நாடகா உட்பட இந்தியா முழுவதும் குரல்கொடுத்து வருகின்ற தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவும் புலிகள் தொடர்பாகவும் விரும்பத்தகாத கருத்துக்களை விதைத்து மக்களை திசை திருப்புவதற்காகவே மெட்ராஸ் கபே என்ற திரைப்படம் தயாரிக்கபட்டிருக்கின்றது என்றே யாழ். குடாநாட்டு மக்கள் கருதுகின்றனர்.
ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்தியாவில் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், திரையுலகினர், தமிழின ஆதரவாளர்கள், வாகன சாரதிகள் போன்ற சகல துறையினரும் அண்மையில் கிளர்ந்தெழுந்தமை இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, புலிகள் கொலைகாரர்கள் என்றும் பிரபாகரன் இந்தியாவின் பிரதமரையே கொலை செய்தவர் என்றும் உண்மைக்கு மாறான கருத்துக்களை மேற்படி மக்கள், மாணவர்கள் மற்றும் துறைசார்ந்தோரிடம் எடுத்துச் செல்வதற்கு திரைப்படம் ஒன்றே ஒரே வழி என்று உணர்ந்த இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் சேர்ந்து திட்டமிட்ட சதி முயற்சியே மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தின் இயக்கமாகும் என்றே யாழ்.குடாநாட்டு மக்கள் கருதுகின்றனர்.
எனவே, உண்மைக்கு மாறாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை வெளியிட்டு தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி தனது வாழ்க்கையையும் கறைபடுத்திக்கொள்ள இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முற்படக்கூடாது. இந்த திரைப்படத்தை வெளியிட்டு உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டாம் என்றும் அசம்பாவிதங்கள் ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்றும் தமிழக அரசிடம் மிகவும் விநயமாக நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ்.குடாநாட்டு மக்கள் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :