ரணில்,பொன்சேகா,சந்திரிக்கா யார் ஆண்டாலும் தமிழ்மக்களுக்கு விடிவு ஏற்படாது

15.8.13

அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அரசியலமைப்பில் இருக்கின்ற அதிகாரங்களும் பிடுங்கி எடுக்கப்பட்டு வரும் நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக சிந்திக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் அ.நிக்ஸன் தெரிவித்தார்.
சட்ட ஆட்சி, ஜனநாயகம் இல்லாத ஒரு சூழலில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பேசுவது எந்தளவிற்கு சாத்தியமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அமெரிக்க மூத்த ஊடகவியலாளரும் தகவல் அறியும் சட்டத்தை உருவாக்கும் நிபுணரும் சட்டத்தரணியுமான கேவின் குலோட்பேக் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக இராஜதந்திரிகளுடன் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் நிக்ஸன் இவ்வாறு கூறினார்.
கொழும்பு இதழியல் கல்லூரியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகளும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்கினால் மீளிணக்க செயற்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது.
மீளிணக்கமும் தகவல் அறியும் உமைச் சட்டமும் என்ற தலைப்பில் உரையாற்றிய நிக்ஸன் இந்த சட்டத்தை உருவாக்க ஊடக அமைப்புகள் எடுத்த முயற்சிகள், தோல்விகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
கருத்து வெளியிடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இல்லாத நிலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படுகின்றது. தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் ஆரம்பத்துடன் ஊடக சுதந்திரம் ஊடக ஜனநாயகம் மீறல் செயற்பாடுகளும் தோற்றம் பெற்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு 18 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஓரளவுக்கேனும் அரச நிறுவனங்களை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கும் 17ஆவது திருத்தச்சட்டம் அழிக்கப்பட்டு 18 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
1987இல் நாடாளுமன்றம் அங்கீகரித்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு தற்போது நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே அதிகாரங்கள், சலுகைகளை தட்டிப்பறிக்கும் சட்ட ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்த அரசாங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளும்? மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை மாற்றிவிடடால் இலங்கையில் அமைதி நிலவும் என்று சர்வதேச நாடுகள் எதிர்ப்பார்க்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க, சரத்பொன்சேகா, ஏன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் புதிய அரசாங்கம் பதவியேற்றாலும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படமாட்டாது.
மாறாக சிங்கள மக்களுக்கு அந்த ஆட்சி மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கலாம் சர்வதேச நாடுகளின் அரசியல் பொருளாதார நலன்களுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் வடக்கு கிழக்கில் தற்போதுள்ள இராணுவ கட்டமைப்பில் சிறு மாற்றங்கள் கூட ஏற்படாது.
பௌத்த தேசியவாத சிந்தனையுள்ள இலங்கை அரசு என்ற கட்டமைப்பில். மாற்றங்கள் எற்படுத்தப்பட வேண்டும். அதற்கு சர்வதேச நாடுகள் உதவியளிக்க வேண்டும். அவ்வாறான ஒரு சூழலில்தான் மீளிணக்கத்தை காணலாம்.
GTN

0 கருத்துக்கள் :