சிறிலங்கா அரசு அதிகாரங்களைத் தர மறுத்தால்...? - அடுத்தகட்டம்

12.8.13

மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை தரமாட்டேன் என்று கூறுவதற்கு, சிறிலங்கா அதிபருக்கு சட்டரீதியாக எந்த அதிகாரமும் கிடையாது என்று வடக்கு மாகாணசபைக்கான தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்றும் இந்த அதிகாரங்களைத் தன்னிடமிருந்து பறித்து விட முடியாது என்றும் வடக்கு மாகாணசபை முதல்வராக விக்னேஸ்வரன் தெரிவானால், 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக அவருடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

இதுகுறித்து முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிடுகையில்,
“காணி, காவல்துறை அதிகாரங்களை தரமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கூறுவதற்கு சட்டரீதியாக எந்த அதிகாரமும் கிடையாது.

ஏனென்றால் இப்போதுள்ள மாகாணசபைச் சட்டத்தில் காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த அதிகாரங்கள் இருக்கும் உரித்துக்களே தவிர, அவர் தரப்போகும் அதிகாரமல்ல.
அவர் என்ன காரணத்துக்காக அவ்வாறு கூறினார் என்று சொல்ல முடியாது.
ஒருவேளை சிங்கள மக்களை தன் பக்கம் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை.
தற்போதைய சட்டத்தின் படி அந்த அதிகாரங்கள் எங்களுக்குரியது.
சிறிலங்கா அதிபர் எங்களைப் பேச்சுக்கு அழைத்திருப்பதையிட்டு நாங்கள் மகிழ்வடைகிறோம். வரவேற்கிறோம்.
பேச்சுக்கு எங்களை அழைத்திருக்கும் சிறிலங்கா அதிபரின் மனோநிலையை பல சந்தர்ப்பங்களில் புரிந்து கொள்வது சிரமமாகவுள்ளது.

விடுதலைப் புலிகள் இருக்கும்போது 13பிளஸ் பிளஸ் என்று கூறினார். பின்னர் 13 என்று கூறினார். தற்போது 13 ஐ முற்றாக அகற்றிவிட வேண்டும் அதன் ஏற்பாடுகளை இல்லாது ஒழிக்க முயன்று வருகிறார்.
ஆகவே, நாங்கள் பேச்சுக்களை வரவேற்கின்றோம். அதே சமயத்தில் எவ்வாறு அந்த பேச்சு அமையப்போகிறது, எதற்காக அழைக்கவிருக்கிறார் என்பது எங்களுக்கு புரியாத புதிராவேயுள்ளது.

ஏனென்றால், இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அதிபர் பேசியதில் எந்தப் பயனும் கிடைக்கவில்லையென்பதை நாங்கள் மறந்து விடக்கூடாது.
தான் பேசுவதற்கு தயாராகவுள்ளேன் என சிறிலங்கா அதிபர் கூறுவதைக் கொண்டு நாங்கள் எந்த தீர்மானத்தையும் கணித்து விட முடியாது.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அதிபர் சார்பில் அவரது கட்சி 18 தடவைகளுக்கு மேல் பேசியுள்ளது. எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
ஆகவே சிறிலங்கா அதிபர் என்னுடன் என்ன பேசுவார் எதைக்கூறப் போகிறார் என்பது பற்றி என்னால் ஆருடம் கூற முடியாது.
தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு மாகாணசபைத் தேர்தலை ஒரு தீர்வாகக் கொள்ள முடியாது.
அது தீர்வை நோக்கி செல்லும் ஒரு வழியே தவிர, எந்தளவுக்கு இந்த வழியில் பயணம் செய்யலாம் என்பது எமது உடனடித் தேவைகளிலேயே தங்கியுள்ளது.

எமது தீர்வைப் பெறுவது வடக்கு, கிழக்கு மக்கள் புலம்பெயர் சமூகம் இந்தியா, அனைத்துலக சமூகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் என்பது வடக்கு மக்களின் ஏகோபித்த எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமையும்.
வடக்கு மாகாணசபையிலுள்ள 36 ஆசனங்களில் 32 ஆசனங்களை நாம் பெறுவோமாயின், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக எங்களுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள், எங்கள் எண்ணத்தை வரவேற்கின்றார்கள் எனப் புரிந்து கொள்ள முடியும்.
மக்களின் பேராதரவு கிடைக்குமானால், சிறிலங்கா அரசுடன் பேரம் பேசும் அந்தஸ்து எமக்கு கிடைக்கிறது என்று கொள்ளலாம்.
அந்த அந்தஸ்தை பெற்றால்தான் எதிர்காலத்தில் நாம் அரசுடன் பேசிக் கொள்ள முடியும். அனைத்துலகத்துக்கு எடுத்துக் கூற முடியும்.

எனவே மாகாணசபைத் தேர்தல் என்பது ஓர் தீர்வாக அமையாது, தீர்வை நோக்கி நகர அடிகோலியாக அமைய முடியுமென நம்புகின்றோம்.
மாகாணசபை முறை வடக்கில் கொண்டு வரப்படுகின்ற போது, காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முடியுமா, முடியுமானால் எந்தளவுக்கு முடியும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதேவேளை, காணி, காவல்துறை அதிகாரங்கள் ஏற்கனவே சட்டத்தில் இருக்கின்ற விடயம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

ஏனென்றால், அரசின் எண்ணம் எது என்பதை அதனுடன் பேசிய பின்பே தெரிந்து கொள்ள முடியும்.
அதிகாரங்களைத் தரமாட்டோமென சிறிலங்கா அரசாங்கம் கூறுவதால் அனைத்துலக அளவில் பேரம் பேசும் நிலை உருவாகுமா என்பது அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பொறுத்தே தீர்மானிக்க முடியும்.

மக்களால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை எவரும் எதுவும் சொல்ல முடியாது.
காணி, காவல்துறை அதிகாரங்களை சட்டத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தாலும் அது இன்னும் செய்யப்படவில்லை.
எங்களுக்கென்று ஒரு மாகாணசபை இல்லாததால், மேற்படி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துங்கள் என்று நாம் கோரிக்கை விட முடியாதுள்ளது.

எங்களுக்கென்று ஒரு மாகாணசபை உருவாக்கப்பட்ட பின்னர் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுக் கொள்வோமாயின் அதிகாரங்களை தர முடியாது என அரசாங்கம் சொல்ல முடியாது.
நாங்கள் கேட்பதைத் தான் அவர்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய மறுப்பார்களானால் நாங்கள் அனைத்துலக அளவில் நடவடிக்கை எடுப்பது குறித்து யோசிக்க வேண்டி வரும்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் அரசாங்கம் செயற்பட்டால், பேரம் பேசுவதற்கு நாங்கள் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
இவையெல்லாம் அரசாங்கத்தின் கையில் தான் தங்கியுள்ளது.
விடுதலைப் புலிகள் வலிமையுடன் இருக்கும்போது அவர்கள் மக்களுடைய ஆதரவைப் பெற்றிருந்தார்களா, இல்லையா என்ற சந்தேகமும் மயக்கமும் அனைத்துலகத்துக்கும், உலக நாடுகளுக்கும் காணப்பட்டது.

அவர்கள் ஆயுததாரிகளாக இருப்பதால் தான், தமிழ்மக்களின் தலைமைத்துவத்தை எடுத்துள்ளனர், ஆயுதம் இல்லையாயின், அவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது, எதையும் செய்ய முடியாது என்ற மயக்க நிலையில் அனைத்துலகம் இருந்தது.
ஆனால், இன்று மக்களுடைய ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெறுமாயின் அது ஜனநாயக முறையாகி விடும்.

எனவே, நாங்கள் ஜனநாயக முறையின்படி பேச முற்படுகின்ற போது, எமது உரிமைகளை கேட்க முற்படுகிற போது, அனைத்துலக நாடுகள் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் மக்களுடைய ஆதரவு எங்களுக்கு உள்ளது. அது எப்பொழுதும் எம் பக்கமேயுள்ளது என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இந்த செல்வாக்கை குறைக்கவே அரசாங்கமும் இராணுவமும் தலையீடு செய்து வருகின்றன.
இராணுவத்தின் இந்த தலையீடு குறித்து அண்மையில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.
இராணுவம் வடக்கில் எவ்வாறு நடந்து கொள்கிறது என்பது பற்றி யாருக்கும் மயக்க நிலை இருக்காது. அது மக்கள் எல்லோருக்கும் தெரியும்.

எனவே இராணுவமோ பிறரோ எவ்வாறு நடந்து கொண்டாலும் நடைபெறப் போகின்ற வடமாகாணசபைத் தேர்தலில் பயமின்றி மக்கள் வாக்களிக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு.
அதை மக்கள் செய்வார்கள் என்றும் நாம் நினைக்கின்றோம்.

இந்த தேர்தலுக்கு ஒத்தாசையாக வெளிநாட்டு பார்வையாளர்களும் கண்காணிப்பாளர்களும் உறுதுணையாக நிற்பார்கள் என நம்புகின்றோம்.” என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :