இலங்கையில் இருந்து துணிச்சலான ஒரு குரல்.ஆனந்தி

16.8.13


யுத்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உலகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கையே என விடுதலைப்புலிகளது முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்தார். இந்த மாதம் இலங்கைக்கு வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கணக்கு காட்டுவதற்கு மஹிந்தராஜபக்ஸ முற்பட்டுள்ளார். இவ்வாறான பல குழுக்களை நாங்கள் கண்டுவிட்டோம். அவற்றின் விசாரணை அறிக்கைகள் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்துள்ளதாகவும் அனந்தி மேலும் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை நான் சந்திக்கவுள்ளேன். அப்போது இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் பொதுமக்கள்; விவகாரம் தொடர்பாக நான் எடுத்துக்கூறுவேன். ஏனெனில் அச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்களுள் நானும் ஒருத்தி என அவர் தெரிவித்தார். அத்துடன் எனது கணவரையும் அவ்வாறே இழந்துள்ளேன். சிறைகளிலுள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். காணாமல் போனோர் பற்றிய தகவல்கள் பகிரப்படவேண்டும். முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைந்து வாழ வழி வகைகள் செய்யப்பட வேண்டும். குடும்பத்தலைவர்களை இழந்த நிலையில் பெண்களை தலைமையாக கொண்டுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இம்மாகாணசபையினால் இவை எதனையும் செய்ய முடியாதென்பதை நான் அறிந்துள்ளேன். நாங்கள் பலர் சேர்ந்து குரல் எழுப்பி செயற்பட்டு வரும் சூழல் அங்கீகாரம் பெறவேண்;டும். அதற்காகவே நான் கூட்டமைப்பின் சார்பில் மாகாணசபை தேர்தலில் குதித்துள்ளேன். இந்த மண்ணையும் போராளிகளையும் அவர்களது தியாகத்தையும் நன்றியுடன் நினைவு கூரும் எமது மக்கள் கட்டாயமாக எனக்கு வாக்களிப்பார்கள். அந்த நம்பிக்கை எனக்குண்டு. முள்ளிவாய்க்காலில் இருந்து கணவரையும் பிரிந்து வெறுமனே ஒரு சொப்பிங் பை பொதியுடன் அகதியாக மூன்று பெண் குழந்தைகள் சகிதம் வெளியே வந்த என்னை இந்த மக்களும் புலம்பெயர் உறவுகளுமே தாங்கிப்பிடித்தனர். அவர்கள் எனக்கு இனியும் கைகொடுப்பார்கள். மாகாணசபை மூலமாக நான் குரல் எழுப்பி வரும் தரப்புகளிற்கு ஒன்றுமே செய்யமுடியாதென்பதை நான் புரிந்துள்ளேன். ஆனாலும் புலம்பெயர் உறவுகள் மற்றும் சர்வதேசத்தின் துணையுடன் அவர்களிற்கு என்னாலியன்றதை செய்வேன். வெற்றி பெற்றாலும் சரி தோற்றுப்போனாலும் சரி நான் அவர்களிற்கு இயன்ற வரை குரல் எழுப்பிக் கொண்டிருப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :