நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை! வெலிவேரியவில் சிங்களக் குரல்

10.8.13

வெலிவேரியாவில் இருந்து ஒளிபரப்பான சிங்கள மக்கள் மீதான தாக்குதல் காட்சிகளில் இருந்து நான் ஒப்பிட்டு பார்க்கையில் வடக்கில் புலிகளுடனான இராணுவத்தின் போர் எப்படியானதாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.
என்னால் தூங்க முடியவில்லை. சொல்லிவைத்தாற் போல இரண்டு நாளுமே காலை மூன்று மணிக்கே எழுந்துவிட்டேன். முதல் முறையாக எதற்காக எழுந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அது இன்று எனக்கு மிகத் தெளிவாக தெரிகிறது.
நிராயுதபாணிகளான வெலிவேரிய மக்களை நோக்கி ஓரணியாக இராணுவ படைகளும் ஆயுத வாகனங்களும் நகரும் காட்சிகள் என்னை வருத்துகிறது.
வெலிவேரியவில் இருந்து ஒளிபரப்பான சிங்கள மக்கள் மீதான தாக்குதல் காட்சிகளில் இருந்து நான் ஒப்பிட்டு பார்க்கையில் வடக்கில் புலிகளுடனான சிங்கள இராணுவத்தின் போர் எப்படியானதாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.
ஆகஸ்ட் 1-ம் தேதி கொழும்பு அருகே உள்ள வெலிவேரியவில் தண்ணீருக்காக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் பற்றிய தனது கட்டுரையில் சிங்கள பெண் பத்திரிகையாளர் நமினி விஜயதாச இப்படி எழுதி இருக்கிறார்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதர்களைக் கடித்த கதையாக மாறிவிட்டது இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள்.
வெலிவேரிவில் ரப்பர் பொருட்கள் கையுறைகள் தயாரிக்கும் ஹேலிஸ் என்ற நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மாசுபபடுவதாக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க பசில் ராஜபக்ச தலைமையில் புத்த பிக்குகள், அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் ஆணையம் ஆகியவையோடு ஹேலிஸ் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இதில் அந்த மக்கள், 'நிலத்தடி நீரை மாசுபடுத்தும் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்பட வேண்டும். எங்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட வேண்டும், அதற்கு அரசே தன் செலவை ஏற்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைத்தது.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து போராட்டமாக மாறியது. இராணுவம் திடீரென போராட்​டக்காரர்களை நெருக்கிக்கொண்டே வந்து கடுமையான எச்சரிக்கை விடுத்தது.
இராணுவ அதிகாரி, 'உங்கள் பிரச்னை தெரிகிறது. மாயாஜாலம் செய்து உங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. கலைந்து போங்கள். ஐந்து நிமிடம் தருகிறேன். இல்லையேல் துரத்த வேண்டியது வரும்.
இராணுவத்தின் நடவடிக்கைகளை பத்திரிகையாளர்கள் படம் எடுக்கக் கூடாது’ என்று எச்சரிக்கை விட்டார்.
போராட்டக்காரர்களில் ஒருவர்,
 'நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை’ என்று இராணுவத்தை நோக்கி கத்துகிறார். அதற்கு இராணுவ அதிகாரி, 'அதனால்தான் உங்களிடம் பேசிக்கொண்டு உள்ளோம்’ என்று சொல்லியபடி அடிக்கத் தொடங்குகிறார்.

சிங்கள மக்கள் கத்திக்கொண்டும் கதறிக்கொண்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடுகிறார்கள். இராணுவம் தாக்குகிறது.
உயிருக்கு அஞ்சி மக்கள் ஆங்காங்கே இருந்த வீடுகளிலும் கடைகளிலும் தேவலாயத்திலும் மறைந்து கொள்கிறார்கள்.
அவர்களை நோக்கி இராணுவத்தினர் சுட்டுக்கொண்டே ஓடுகின்றனர். இந்தத் தாக்குதலில் பலரும் காயம் அடைந்தார்கள். சிலர் மரணம் அடைகிறார்கள்.
சர்வாதிகாரத்தின் வடிவம் தன் சொந்த மக்கள் மீதே பாயும் நிலைக்குதான் கொண்டு வந்துவிடும் என்பதை இன்றே சாதாரண சிங்கள மக்கள் புரியத் தொடங்கியுள்ளனர்.
நாங்கள் கேட்டது தண்ணீர் வண்டிகளை, அவர்கள் அனுப்பியது இராணுவ வண்டிகளை’ என்ற வெலிவேரிவைச் சேர்ந்த சிங்களப் பெண்ணின் வார்த்தைகளே இன்றைய இலங்கையின் யதார்த்தம்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பேசும் போது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையில் இன்றும் நாட்டைப் பிளவுபடுத்தி எல்லைகளை வகுக்க முற்படுவோரின் கனவுகள் நிறைவேற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்கிறார்.
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞான சார தேரரரோ, ''நான்தான் வெலிவெரியாவுக்கு இராணுவத்தை அனுப்பினேன்'' என்கிறார்.
இதுவரை தமிழர்களைப் பதம் பார்த்த இராணுவம் இப்போது சிங்களவர் பக்கமாகவும் திரும்ப ஆரம்பித்துள்ளது.

0 கருத்துக்கள் :