வேலூரிலிருந்து சென்னைக்கு 97 நிமிடங்களில் வந்த இதயம்

27.8.13

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டன.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேதன்னஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (22). பெற்றோரை இழந்த இவரை பாட்டி மேச்சேரியம்மா வளர்த்தார்.

திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குபேந்திரன் கடந்த 24ம் தேதி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், குபேந்திரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தனர். இதையடுத்து குபேந்திரனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்களை தானம் செய்ய சித்தப்பா நடராஜ் சம்மதம் தெரிவித்தார்.

அதன்படி, குபேந்திரனின் இதயம் சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியன் மருத்துவமனைக்கும், நுரையீரலை சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. உடல் உறுப்புகள் கொண்டு செல்ல வேலூர் மாவட்ட போலீசாரின் உதவி கோரப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணியளவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதை தொடர்ந்து சிஎம்சி டாக்டர் சீதாராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் குபேந்திரனின் உடல் உறுப்புகளை நேற்று காலை 5.30 மணிக்கு பிறகு ஒவ்வொன்றாக அகற்றினர். காலை 7.55 மணிக்கு பிரீசரில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் பாகங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

 தேசிய நெடுஞ்சாலையில் 142 கி.மீ வேகத்தில் பொலீரோ ஜீப்பை போலீஸ் டிரைவர் சரவணன் ஒட்டினார்.
97 நிமிடத்தில் சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியன் மருத்துவமனையில் இதயம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு நுரையீரல் அனுப்பிவைக்கப்பட்டது.

 குபேந்திரனின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் சிஎம்சிக்கு தானமாக பெறப்பட்டது. இதற்காக பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ரோந்து போலீசார் பார்த்துக் கொண்டனர்.

மதுரையில் ஒரு ஹிதேந்திரன்...
மதுரை : சாலை விபத்தில் ''மூளைச்சாவு'' அடைந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 4 பேருக்கு ''புது வாழ்வு'' கிடைத்தது.

மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி சியாமளா. இவர்களது மகன் யுவராஜ் பிரவீன் (21) சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.

திண்டுக்கல் கொடைரோட்டில் விபத்தில் சிக்கி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ''மூளைச்சாவு'' அடைந்தார். யுவராஜ் பிரவீனின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக தர முன் வந்தனர்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை சிறுநீரகவியல் துறை தலைமை டாக்டர் சம்பத்குமார், முரளி, கிருஷ்ணன் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொண்ட குழு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தியது.

 மாணவரிடம் அகற்றப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று விருதுநகர் தும்புசின்னம்பட்டி பாஸ்கருக்கும் (37), திருநெல்வேலி கிட்னி கேர் சென்டர் மூலம் மற்றொருவருக்கும், கண்கள் வேறு இருவருக்கும் பொருத்தப்பட்டன.

 சென்னையில் மூளைச்சாவுக்கு ஆளான ஹிதேந்திரனை தொடர்ந்து உடல் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல்
ஆகஸ்ட் 2012 முதல் கடந்த ஜூலை மாதம் வரை தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்த 99 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :