உடல் துண்டாகி பிணமாக கிடந்த 8–ம் வகுப்பு மாணவி

15.8.13

திருச்சியில் ரெயில்வே தண்டவாளத்தில் 8–ம் வகுப்பு மாணவி உடல் துண்டாகி பிணமாக கிடந்தார். அவர் ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மெகபுனிசா. இவர்களது மூத்த மகள் தவ்பிக் சுல்தானா (13) ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 13ஆம் தேதி பள்ளிக்கு சென்ற தவ்பிக் சுல்தானா மீண்டும் வீடு திரும்பவில்லை. இரவு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் மாணவியை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இரட்டைமலை பகுதியில் ஆள் இல்லா ரெயில்வே கேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் மாணவி ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு மறுநாள் காலை தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அந்த மாணவி உடல் துண்டு, துண்டாகி கிடந்தார். அருகே மாணவியின் அடையாள அட்டையும், அவரது புத்தக பையும் கிடந்தன. அடையாள அட்டையை பார்த்தபோது அதில் தவ்பிக் சுல்தானா விவரம் இருந்தது.

இதையடுத்து அந்த பள்ளிக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் கோரமாக கிடந்த தவ்பிக் சுல்தானாவின் உடலை கண்டு கதறி அழுதனர்.

இது குறித்து பள்ளி மாணவிகளிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் கடந்த 13ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வழக்கமாக செல்லும் பஸ்சில் ஏறாமல் மற்றொரு பஸ்சில் ஏறிச் சென்றதும், அரிஸ்டோ ரவுண்டானா அருகே அவர் திடீரென இறங்கியதும் தெரிந்தது.

அதன் பின்னர் தவ்பிக் எப்படி இரட்டைமலைக்கு வந்தார். அவரை யாரேனும் கடத்தி வந்தார்களா? என விசாரணை நடத்தினர். அவரை யாரேனும் இந்த பகுதிக்கு அழைத்துவந்து பலாத்காரம் செய்த பின்னர் கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் வீசிச் சென்றதால் உடல் துண்டானதா? அல்லது ரெயில் வரும்போது தள்ளிவிட்டதில் இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் நோட்டுகளை பார்வையிட்டபோது அதில், ஒரு கவிதையும், 2 செல்போன் எண்களும் எழுதப்பட்டு இருந்தன. அதனை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரியில் மாணவி தவ்பிக் சுல்தானாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை கைதுசெய்ய கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மாணவி தவ்பிக் சுல்தானா பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று மாலை உடலை உறவினர்களிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைக்க முடிவு செய்தனர். அப்போது உடலை வாங்க மறுத்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகர துணை போலீஸ் கமிஷனர் அபினவ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘மாணவி சுல்தானாவை 2 வாலிபர்கள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு கொலை செய்துள்ளனர். அந்த காமக்கொடூரர்களை கைது செய்ய வேண்டும். மேலும் மாணவியின் உடலில் ஒரு கையும், சில உறுப்புகளும் இல்லாமல் உள்ளது.

அதனை தேடிக்கண்டுபிடித்த பின்னர் தான் உடலை வாங்கி செல்வோம். அதுவரை உடலை பெற மாட்டோம். மேலும் இந்த வழக்கில் கிடைத்துள்ள செல்போன் எண்ணை வைத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் அபினவ்குமார் அவர்களிடம் பேசுகையில், ‘‘சம்பந்தப்பட்ட இடத்தை நான் பார்வையிட்டு 2 மணி நேரம் நேரில் விசாரணை நடத்தினேன். 8–ம் வகுப்பு மாணவி அவ்வளவு தூரம் தனியாக சென்றது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவி மாயமானது தொடர்பாக பாலக்கரை போலீசாரும், உடல் கிடந்த இடத்தை வைத்து ரெயில்வே போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரெயில்வே போலீசாரும் சப்–இன்ஸ்பெக்டர் அக்பர்கான் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மாநகர போலீஸ் சார்பில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். ரெயில் ஏறி இறங்கியதில் உடலின் பாகங்கள் பல துண்டாகி விட்டன. இதில் ஒரு கையும், உறுப்புகளும் கிடைக்காதது குறித்து ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தேடியும் கிடைக்கவில்லை. ரெயில்கள் ஏறி இறங்கியதால் உருக்குலைந்து போகி இருக்கும்’’ என்றார்.

இதையடுத்து இந்த வழக்கில் 24 மணி நேரத்திற்குள் அதாவது சம்பந்தபட்டவர்களை கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் அபினவ்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெ.டி.ஆர்


0 கருத்துக்கள் :