34 நாடுகளில் புலிகள் தடைசெய்யப்படக் காரணமானவர் கதிர்காமரே.ஜி.எல்.பீரிஸ்.

13.8.13


விடுதலைப் புலிகள் இயக்கம் 34 நாடுகளில் தடை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தவர் லக்ஸ்மன் கதிர்காமர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வும் அவரது உருவச்சிலை திறப்பும் நேற்று கொழும்பில் நடைபெற்றது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், “வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களை மட்டும் முதன்மைப்படுத்தி தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. வரலாறு தொட்டே சிறிலங்காவின் ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதால், அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றே அவசியமானது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை 34 நாடுகள் தடை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் லக்ஸ்மன் கதிர்காமர். சிறிலங்காவின் உண்மை நிலையை அனைத்துலகத்துக்குத் தெளிவுபடுத்தியவர் அவரே. சிறுவர்களை படைகளில் சேர்ப்பது தொடர்பாக உலகின், கவனத்திற்குக் கொண்டு வந்த அவர், இதனைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு அனைத்துலக ரீதியில் முன்னின்று செயற்பட்டவர். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற போர்வையில், விடுதலைப் புலிகள் பேச்சுக்களில் இதயசுத்தியுடன் பங்குபற்றவில்லை. வேறு உள்நோக்கங்களை வைத்துக் கொண்டு ,சிறிலங்கா அரசாங்கத்தை ஏமாற்றுவதற்காகவே பேச்சுக்களில் முகங்களைக் காட்டினர் என்பதை கதிர்காமர் புரிந்து கொண்டார். இதனாலேயே அவர் இறுதியில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அமெரிக்க செனெட் சபையில் நடைபெற்ற முக்கிய பேச்சு ஒன்றிலும் புலிகளைத் தடை செய்வது தொடர்பாக கதிர்காமர் வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதம் சிறிலங்காவுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றல்ல, என்பதை வலியுறுத்தியுள்ள அவர், அனைத்துலகத்தையும் பாதிக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்ற நோக்கத்தில் குரலெழுப்பியவர். சிறிலங்காவில் சூழலை அனைத்துலக நாடுகளுக்குக் கொண்டு சென்றதில் லக்ஸ்மன் கதிர்காமரின் பங்கு அளப்பெரியது. இனப்பிரச்சினைக்கு பேச்சுக்கள் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என நம்பினார். வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் தீர்வுத்திட்டங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும், உள்நாட்டுக்குள் பேச்சுக்கள் மூலம் காணப்படும் தீர்வே நிலையானதாக அமையும் என்றும் அவர் உறுதியாக நம்பினார். சுனாமிக்குப் பின்னரான பொது முகாமைத்துவக் கட்டமைப்பை கதிர்காமர் கடுமையாக எதிர்த்தார். அது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது என்பதை அவர் வலியுறுத்தியிருந்தார்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :