வீட்டுக்குள் புகுந்த திருடன் பொது மக்களால் அடித்துக் கொலை

9.7.13

இரவு நேரத்தில் வீடொன்றை உடைத்து திருட முயன்ற நபர் ஒருவரை மடக்கிப் பிடித்து பொது மக்கள் நடத்திய தாக்குதலில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவை பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5.10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொது மக்களினால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய அணில் பீரிஸ் என்ற சந்தேக நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை மொரட்டுவை பிரதேசத்திலுள்ள வீடொன்றின் கதவை உடைத்து நுழைந்த சந்தேக நபரை வீட்டின் அறை யொன்றில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.

சந்தேக நபரை அந்த வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவி, மகள் மற்றும் அயலவர்கள் இணைந்து தாக்கியுள்ளனர்.
சந்தேக நபர் மேற்படி வீட்டின் உரிமையாளரின் மகள் தங்கியிருந்த அறையின் கட்டிலுக்கு கீழ் மறைந்திருந்ததை அவதானித்த பெண் அருகிலிருந்த அலுமினியக் குழாய் ஒன்றினால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அவசர அழைப்பு மூலம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் சுகயீனமுற்ற சந்தேக நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து தாக்குதல் நடத்திய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

0 கருத்துக்கள் :