சிறிலங்காவில் பாதுகாப்பில்லை தாயகம் திரும்பும் தமிழர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி

23.7.13

தமிழ்நாட்டில் முகாம்களிலும், வெளியிலும் வசித்து வரும், இலங்கைத் தமிழர்கள், தாயகம் திரும்பும் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், சிறிலங்காவை விட, தமிழ்நாடு பாதுகாப்பானது என்று அவர்கள் உணர்வதே, அதற்குக் காரணம் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள, 102 அகதி முகாம்களில், 60,725 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில், நிதியுதவியும், அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படுகின்றன.

முகாம்களுக்கு வெளியிலும், பல ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில்,சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கடந்த, 10 ஆண்டுகளில், சிறிலங்காவில் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த 2004ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டும் அதிகபட்சமாக, 3,078 பேர் தாயகம் திரும்பிச் சென்றனர்.

அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், இறுதிப்போர் தொடங்கிய போது, தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

2007ல் யாருமே சிறிலங்காவுக்குத் திரும்பிச் செல்லவில்லை.


2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர், மீண்டும் தாயகம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், உச்சத்துக்கு சென்ற இந்த எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரச அதிகாரிகள் கூறுகையில், “இறுதி போருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்தவர்களே, போர் முடிந்த பின், சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கின்றனர்.

தற்போதுள்ள இளைய தலைமுறையினர் யாரும், சிறிலங்காவுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதில்லை.

காரணம், சிறிலங்காவை விட, தமிழ்நாடே தமக்குப் பாதுகாப்பானது; உறவானது  என்று நினைக்கின்றனர்.

முகாம்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கானவர்களில், பெரும்பாலான இளைஞர்கள், தமிழகத்துக்கு வந்த பின்னரே பிறந்தவர்கள்.

எனவே அவர்கள், சிறிலங்கா செல்வதைவிட, தமிழ்நாட்டில் இருக்கவே விரும்புகின்றனர்.

அதுமட்டுமின்றி, போருக்குப் பின்னர், தமிழர்களின் குடியிருப்புகளில், சிங்களக் குடியிருப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன.

எனவே, அங்கு செல்வதை பாதுகாப்பு குறைவானதாக நினைக்கின்றனர்.

எனவே, தாயகம் திரும்புகின்றவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

எதிர்வரும் காலங்களில், இன்னும் குறையலாம்.” என்று தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :