சிவ்சங்கர் மேனனின் வலையில் சிக்கியது சிறிலங்கா"

23.7.13

இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனன் விரித்த வலையில், சிறிலங்கா அரசாங்கம் வீழ்ந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளது சிங்களத் தேசிய வாத அமைப்பான தேசப்பற்று தேசிய இயக்கம்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேசப்பற்று தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர,
“வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், காணி, காவல்துறை அதிகாரங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்றே சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருகிறோம்.
ஆனால், சிறிலங்கா அரசாங்கம் அதற்குச் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை.

மாறாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் விரித்த வலையில் சிறிலங்கா அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.

அதுவரை 13வது திருத்தச் சட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் கை வைக்கக் கூடாது என்பதே சிவ்சங்கர் மேனன் விரித்த வலை.
சிறிலங்கா அரசாங்கம் இதில் மீள முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் நாட்டைக் குறித்துச் சிந்திப்பதில்லை.
கொமன்வெல்த் மாநாட்டின் தலைமைப் பதவியை பெற்றுக் கொள்வதே அதற்கு முக்கியமாகவுள்ளது.
எனவே தான், 13வது திருத்தச்சட்டத்தின் காவல்துறை, காணி அதிகாரங்களின் பயங்கரத்தை உதறித்தள்ளி விட்டு, வடக்கில் தேர்தலை நடத்தப் போகிறது.

இந்தத் தேர்தலின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தனித் தமிழீழத்துக்கான விசுவரூபத்தை எடுக்கும்.
பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுக்கு புதுமாத்தளனுக்கும் கிளிநொச்சிக்கும் செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கக்கூடாது.

இல்லாவிட்டால் மேலும் மேலும் அனைத்துலக அழுத்தங்கள் அதிகரிக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :