சுவிஸில் எழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நாள்!

8.7.13

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 07.07.2013, ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கத்துடன், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. எழுச்சி நிகழ்வுகளாக கவிதை, எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள், பேச்சு, காலத்திற்கு ஏற்ப கருப்பொருளை கொண்ட நாடகமும் இடம்பெற்றது. மேலும் அனுராதபுரம் வான்தளம் மீதான கரும்புலிகளின் தாக்குதலை மையமாகக் கொண்ட எல்லாளன் திரைப்படத்தின் இறுதிப்பகுதி அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. அத்துடன் தமிழினப்படுகொலைக்கு நீதிகேட்டு தாய்த் தமிழக மாணவர் சழூகத்தால் முன்னெடுக்கப்பட்ட வரலாறு காணாத போராட்டத்தைக் கருவாகக் கொண்ட அறப்போர் ஆவணப்படமும் திரையிடப்பட்டது. நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.

0 கருத்துக்கள் :