நேற்றைய பயங்கரவாதி நாளைய முதலமைச்சர்

10.7.13

ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் என்று தயா மாஸ்டரின் பெயர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் பிரேரிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். ஆகவே அரசாங்கம் மனது வைத்தால் நேற்றைய பயங்கரவாதி, நாளைய வட மாகாண முதலமைச்சர் என்று தன்னை சொல்லிக்கொள்ளலாம்.

புலிகளின் முன்னாள் ஊடக துறை பொறுப்பாளரான நண்பர் தயா மாஸ்டரை என்னைவிட ஊடகத்துறையினருக்குத்தான் நன்கு தெரியும். வடக்கின் முதலமைச்சர் ஆவதற்கு அரசு மனது வைத்தால் மட்டும் போதாது, மக்கள் மனது வைக்க வேண்டுமென்பதை அவர் அறிவார் என நினைக்கின்றேன்.
  
முதலமைச்சர் ஆனாலும், ஆகாவிட்டாலும், முன்னாள் புலிகளாக இருந்து இந்நாள் சிங்கங்களாக மாறிவிட்ட இவர்களுக்கு ஒரு தார்மீக கடமை இருக்கின்றது. உங்களது பொது ஆணைகளை ஏற்று, புலிகளுக்கு தண்ணீர் தந்தார்கள், சாப்பாடு தந்தார்கள், என சிறைகளில் இன்று தமது வாழ்க்கைகளை தொலைத்துவிட்டு வாடும் சுமார் ஆயிரம் பேரை விடுவிப்பதுதான் இந்த கடமை என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆயுதக்குழு
வடக்கில் மாகாணசபை அமைந்து அதற்கு போலிஸ் அதிகாரம் கிடைத்துவிட்டால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி போராளிகள் மாகாணசபை போலிசை, ஈழம் போலிசாக மாற்றி விடுவார்கள் என அரசின் இனவாத ஊதுகுழல் ஹெல உருமய சொல்கின்றது. ஆனால் நடப்பை பார்க்கும் போது, விரும்பியோ, விரும்பாமலோ இந்த முன்னாள் போராளிகள் அணிதிரட்டப்பட்டு, வடக்கில் தயா  மாஸ்டர் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேலைகளுக்கு உள்ளாக்கப்படுவது புலனாகின்றது. இது என்ன இன்னொரு  புதிய ஆயுத குழுவா? கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளில், ஆயுத குழுக்களை அகற்றுவோம் என சொல்லி விட்டு இன்று மீண்டும் நீங்களே ஆயுத குழுக்களை உருவாக்குகின்றீர்களா? வட மாகாண தேர்தல் வேலைகளில்,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக இந்த குழுக்களை நீங்கள் பயன்படுத்துகின்றீர்களா?  
வெளிநாட்டு அழுத்தம் 
ஹெல உறுமய கட்சியினர் தேர்தல் ஆணையாளரை சந்தித்து, வடக்கு தேர்தலுக்கு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேவை இல்லை என்று  வாதாடியுள்ளனர். இவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி வைக்க விரும்புகின்றேன். நாங்கள்தான் தேர்தல் ஆணையாளரிடம் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கோரினோம். அதன் அர்த்தம் எமக்கு வெளிநாட்டு பைத்தியம் என்பது அல்ல.  ஆனால் இந்த நாட்டில் வெளிநாட்டு அழுத்தம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை என்பது எழுதப்படாத விதி என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.

அடுத்த மாதம் ஐநா மனித உரிமை  ஆணையாளர் நாவி பிள்ளை வருகின்றார் என்றதும், அதற்கு அடுத்த மாதம் பொதுநலவாய மாநாடு என்றதும், தூக்கத்தில் இருந்து எழுந்த அரசாங்கம், அவசர, அவசரமாக மூதூர் படுகொலைகளை பற்றி விசாரிக்க தொடங்கியுள்ளது. தலையில் வெடிவைத்து திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட   மாணவர்களின் வழக்கு கோப்பை இப்போதுதான் தூசு தட்டி எடுத்து, விசேட அதிரடிப்படையினர் சிலரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளது.
 
ஆணையாளர் நாவி  பிள்ளை வந்து போனபின்,  பொதுநலவாய மாநாடு முடிவடைந்தபின் மீண்டும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு கோப்புகள் காணாமல் போய்விடும்.  இந்த உண்மை  எமக்கு தெரியாதா? நான், இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாறும் அல்லது ஏமாந்துவிட்ட, கண்ணை திறந்துகொண்டு பகல் வேளையில் கிணற்றில் விழுகின்ற முட்டாள்  அல்ல. 
அதனால்தான் இந்த நாட்டில் நியாயம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றால், கட்டாயமாக வெளிநாட்டு கண்காணிப்பும், சர்வதேச பங்களிப்பும் இருந்தே ஆக வேண்டும் என சொல்கின்றோம்.  வருடத்தின் ஒவ்வொரு மாதமும் நாவி பிள்ளை திரும்ப, திரும்ப வந்துபோனாலும், சர்வதேச மாநாடுகள்  திரும்ப, திரும்ப நடந்தாலும் அவற்றை நாம்  வரவேற்போம்.

பாராளுமன்ற தெரிவுக்குழு
நீங்கள் அமைத்துள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு, ஆரம்பிப்பதற்கு முன்னரே புஸ்வான தெரிவுக்குழுவாக மாறிவிட்டது. சிங்களத்தில் இதை "புஸ்வெடில்ல" என்று சொல்வார்கள். அதுதான் பொருத்தமான பெயர். அங்கே தமிழர்களின் அதிக வாக்குகளை பெற்ற கட்சிக்கும், முஸ்லிம்களின் அதிக வாக்குகளை பெற்ற கட்சிக்கும் இடம் இல்லை. அரசாங்கத்துக்கு உள்ளே சர்வகட்சி மாநாட்டுக்கு தலைமை வகித்த திஸ்ஸ விதாரணவுக்கும் இடம் இல்லை. இப்படியான  தெரிவுக்குழுவை,  புஸ்வான தெரிவுக்குழு சொல்லாமல் வேறு என்ன பெயர்  சொல்லி அழைப்பது?

முதுகெலும்பும், தன்மானமும் இல்லாத சில விலை போன தமிழ் பேசும் அரசியல்வாதிகளை வைத்து கொண்டு தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்கின்றது  என காட்ட முயற்சிக்க வேண்டாம். உங்களுக்கு துணிவும், நேர்மையும் கொஞ்சமாவது இருந்தால், திஸ்ஸ விதாரண குழுவினர் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளித்த இனப்பிரச்சினை தீர்வுக்கான உங்கள் அரசாங்கத்தின் ஆலோசனை அறிக்கையை, உடனடியாக பகிரங்க படுத்தி, அதிகாரபூர்வமாக வெளிப்படுத்துங்கள்.    பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 13ம் திருத்தம் ஆகிய அனைத்து ஆவணங்களையும் மேஜையில் வையுங்கள். 
   
நாம் உலகத்தின் உதவியை நாடுவோம்
ஐநா மனித உரிமை ஆணையாளர்  நாவி பிள்ளையை இந்நாட்டிற்குள் வரவிட மாட்டோம் என்று சொன்னவர்கள் இன்று எங்கே? காணி, போலிஸ் அதிகார திருத்தங்கள் இல்லாமல் வடக்கு தேர்தலை நடத்த விட மாட்டோம் என்று சொன்னவர்கள் இன்று எங்கே? விமல் வீரவன்ச எங்கே? சம்பிக்க ரணவக்க எங்கே? இனிமேலாவது உலக நடைமுறையை உணர்ந்து பேசுங்கள்.  இறைமை என்றும், சுயாதிபத்தியம் என்றும் சொல்லிக்கொண்டு உள்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை நீங்கள் இனியும்  சிறுமை படுத்த முடியாது. இந்த நாட்டின்  இறைமை, சுயாதிபத்தியம் ஆகியவற்றில் எமக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.

யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில், அன்றைய ஐநா மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஹார்பர் இலங்கை வந்தார். அவர் வர முடியாது, வந்தால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது, அவர் காணாமல் போனவர்களின் உறவுகளை சந்திக்க முடியாது என்று என்னிடம் இந்த அரசாங்கம்  அன்று  பல நிபந்தனைகளை   விதித்தது. அன்று மனித உரிமைகளுக்கு பொறுப்பு வகித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க என்னிடம் இதை சொன்னார்.

 அனைத்தையும் நான் நிராகரித்து, உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி எழுந்து வந்துவிட்டேன்.
மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் என்ற முறையில் கொழும்பில் லூயிஸ் ஹார்பரை வரவேற்று, பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்டோர் குடும்பங்கங்களை சந்திக்க வைத்து, சாதித்து காட்டினோம். கொழும்பு ஐநா வளாகத்தின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி உலகின் கண்களை திறந்தோம்.

இன்று இங்கே இருக்கும், சிறிதுங்க ஜயசூரியவும், சுரேஷ் பிரேமசந்திரனும் அன்று என்னுடன் இருந்தார்கள். கொடும் யுத்தம் நடைபெற்ற காலத்திலேயே அப்படி என்றால், இன்று உலகத்தை நாங்கள் நாடுவதிலிருந்து எங்களை நீங்கள் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை  அறிந்துகொள்ளுங்கள்.

0 கருத்துக்கள் :