சுயேட்சையாகப் போட்டியா? – தயா மாஸ்டர் பதில்

29.7.13

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படவுள்ளதாக நம்பிக்கையூட்டப்பட்டு கடைசி நேரத்தில், கைவிடப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தாம் சுயேட்சையாக போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

அரசதரப்பினால் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக, கூறப்பட்ட தயா மாஸ்டரை கடைசி நேரத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி கழற்றி விட்டது. இதனால், அவர் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார். தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறும் என்றே சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை கடைசிநேரம் வரை தன்னிடம் கூறியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

  எனினும், வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படாதது குறித்து கட்சித் தலைமை அவருக்கு தெரியப்படுத்தவில்லை. சக வேட்பாளரான அங்கஜன் மூலமே அதுபற்றி அவர் அறிந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே தாம் அந்தக் கட்சியின் உறுப்புரிமையை பெற்று தேர்தலில் போட்டியிட முன்வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

  வேட்பாளராக நிறுத்தப்படாவிட்டாலும். தொடர்ந்தும் அந்தக் கட்சியிலேயே இருக்க விரும்புவதாகவும் குறிப்பிட்ட தயா மாஸ்டர், சுயேட்சையாகப் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒருகட்சியில் அங்கம் வகித்துக் கொண்ட அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர மேலும் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :