தம்மையே தந்த தற்கொடையாளர்கள் கரும்புலிகள் -

4.7.13

உலகப் போரியல் சரித்திரத்தில் அர்ப்பணிப்பையும், தியாகத்தின் உச்சத்தையும், தனிமனித, கூட்டு போரியல் திறமையின் மொத்த வெளிப்பாடாகவும் விளங்குபவர்கள் கரும்புலிகள்.
தமிழீழ தேசியத் தலைலவர் எதை உருவாக்கினாலும் அதில் ஓரு நேர்த்தி, தூய்மை உன்னதம், புனிதம், அதியுச்ச செயல்திறன் இயல்பாகவே அமைந்திருக்கும். அவ்வாறே கரும்புலிகளும்  

“பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாகவே கரும்புலிகளை உருவாக்கினேன்” என்று அதன் உருவாக்கம் தொடர்பாக தேசியத்தலைவர் கூறியிருக்கின்றார். அப்போது வடமராட்சி பெருநிலப்பரப்பில் சிங்கள இராணுவம் ஆக்கிரமிப்பை மேற்கொண்டிருந்த காலம். நெல்லியடிப் பாடசாலையை  இராணுவமுகாமாக்கி அங்கிருந்து பல கொடுமைகளை தமிழ் மக்களுக்கு அது செய்து கொண்டிருந்தது. அன்று யூலை 05 1987 காலை 07 மணி யாழ்ப்பாணம் பாரிய வெடிச்சத்தத்தால் அதிர்கிறது. சிறிலங்கா அச்சத்தால் அதிர்கிறது. உலகம் வியப்பால் அதிர்ந்தது. கரும்புலி கப்டன் மில்லர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனத்தில் இராணுவ முகாமுக்குள் சென்று வெடித்து வீரகாவியமாகிறார். அன்றுடன் கரும்புலிகளின் வீரவரலாறு தொடக்கம் பெறுகின்றது.

கரும்புலிகள் பிரிவில் இணைந்து கொள்வது மிகவும் சுலபமான காரியமல்ல. இதற்கு தலமையின் நேரடி அனுமதி அவசியம். தலைவரே அந்த அனுமதியை வழங்குகிறார். இதற்கு உதாரணமாக முதலாவது தரை பெண் கரும்புலி யாழினி கரும்புலிகளின் பிரிவில் சேர பத்துத் தடவைகள் தலைவருக்கு கடிதம் வரைகிறாள். அவளுடைய மூத்த சகோதரி மாவீரர் என்பதால் அந்தவேண்டுகொளை தலமை நிராகரிக்கின்றது. பின் உண்ணா நோன்பிருக்கின்றாள் தான் கரும்புலியாக வேண்டும் என்று. இப்படி நீண்ட போராட்டத்தின் மத்தியிலே தலைவர் அவளை  கரும்புலிப்பிரிவில் சேர்த்துக் கொள்கின்றார். பின்னாளில் தாண்டிக்குளம் ஆயதக்களஞ்சியத் தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தி  மேஜர் யாழினியாக மாவீரராகிறாள். இப்படி அந்தப் பிரிவில் இணைவது இலகுவான விடயமல்ல.

முடியாது என்பதை முடியும் என்றாக்கி வருகின்ற தடைகள் அனைத்தையும்  உடைத்தெறிந்து வெற்றிவாகை சூடிய நாயகர்கள் கரும்புலிகள். ஈழப்போரிலே எதிரிகளுக்கு சிம்மசொற்பனமாக அமைந்து ஈழப் போர் வெற்றிகளுக்கு முதல் சுழிபோட்டவர்கள் இவர்கள். முகமறியாது, முகவரியறியாது இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம் உயிரையே ஆயதமாக்கி தம்மையே தந்தவர்கள் இவர்கள். ஆன்பின் உச்சத்தின் வெளிப்பாடாகவும், வீரத்தின் முழுவடிவமாகவும் இவர்கள் இருக்கின்றார்கள். சாவிற்கான நேரம் குறித்து வெடிமருந்தினைச் சுமந்து தாயக விடுதலையை மூச்சாக்கி நெருப்பில் நீராடிய வீரமறவர்கள் இவர்கள்.

உலகினை வியக்கும் வரையிலான அதிஉச்ச திட்டமிடலுடன் கூடிய தாக்குதல்களை அவர்கள் நடார்த்தியிருந்தார்கள். அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதல் என்பது உலகப்போர் வரலாற்றில் தமிழினத்தின் வீரத்தையும் விடுதலைப்புலிகளின் போர் யுத்தியையும் கரும்புலிகளின் அதியுச்ச போர்த்திறமையையும் உலகிற்கு எடுத்துக்காட்டியது. 
கரும்புலிகளின் இலக்கு என்பது எப்பொழுதும் விடுதலைக்காக எதிரிகளை தாக்கியழிப்பதாக இருந்ததே தவிர பொதுமக்களையோ, அப்பாவிகளையோ இலக்காகக் கொண்டதில்லை. கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தள தாக்குதல் என்பது அது ஓர் சர்வதேச விமானத்தளமாக இருந்த போதிலும் எந்தவொரு பொதுமகனுக்கும்  எந்தப் பாதிப்பும் இன்றி நிகழ்த்தப்பட்டமை இன்றும் நினைவுகூரத்தக்கது. கரும்புலிகளின் இலக்கு சர்வதேசத்தை அச்சுறுத்துவதோ, ஒர் இனத்தை அழிப்பதாகவோ இருக்கவில்லை. அவர்கள் தம் இனத்தின் இருப்புக்காக, தேசத்தின் விடுதலைக்காக, சந்ததியின் சுதந்திரத்திற்காக, தாய்நாட்டுக்காக வீரகாவியமானார்கள். முகமறியாத அந்த வீரர்கள் உலகம் வியக்கும் தாக்குதல்களையும் நடாத்தியிருக்கின்றார்கள். 

ஹபரணை தாக்குதல் என்பது இதுவரை உலகம் போரியலில் கண்டிராத ஒரு தாக்குதல் குறித்த ஒரு தாக்குதலில் ஒரு போர் வீரன்  குறித்த ஸ்தலத்தில் 193 எதிரிப் படையினரைக் கொன்று குவித்து 700க்கு மேற்பட்டோரை விழுப்புன் அடையச்செய்து  உலக சாதனையான ஒரு வெற்றித் தாக்குதலை அந்த வீரன் நடாத்தியிருந்தான். முகமறியாக் கரும்புலியின் தாக்குதல் என்பதால்  சாதனையை எழுத்தில் பதியப்படாமலே போயிற்று. என்றோ ஒரு நாள் இந்த உலகம் எம் தேசத்தை அங்கீகரிக்கும். அப்போது உங்கள் சாதனைக்கு அங்கீகாரம் நிச்சயம் உண்டு.

கரும்புலிகளோடு அவர்களுக்கு உதவியாக இருக்கும் முகவர்களும் போற்றுதற்குரியவர்கள். சில சந்தர்ப்பங்களில் முகவர்களும் கரும்புலிகளாகியிருக்கின்றார்கள். ஹபரணை தாக்குதல் இலக்கு நெருங்கிவிட்டது. முகவர் வெடிபொருள் சுமந்த வாகனத்தை ஓட்டி வருகிறார் கரும்புலி வீரன் வருவதற்கு சற்று தாமதம் ஏற்படுகின்றது. வேறுவழியின்றி முகவர் தானே அந்தத் தாக்குதலைச் செய்ய முடிவெடுத்து இலக்கை நோக்கி விரைகிறார். இறுதிக் கணங்களின் அந்தக் கரும்புலி மாவீரன் வாகனத்தைப் பொறுப்பேற்கிறான். தாக்குதல் நடந்தேறுகிறது. சிறிது நேரம் வரை தாக்குதலில் மாவீரனானது யாரென்று தெரியவில்லை. பின்னர் முகவரின் தொடர்பினூடாக உறுதிசெய்யப்படுகின்றது. இப்போது கூட உச்சரிக்க முடியவில்லை அந்தத் தற்கொலையாளனின் பெயரை. அதே போல் வவுனியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் இலக்கு நெருங்கிய காரணத்தால் முகவரே அதை செய்து வீர காவியமானார். 

இப்படி எண்ணற்ற தியாகங்களைச் செய்து ஆக்கிரமிப்பின் ஒவ்வொரு கணங்களிலும் எதிரியின் இதயப்பகுதிகளை தகர்த்தெறிந்து, அவனை நிலைகுலையச் செய்து, ஈடிணையற்ற  வெற்றிகளைப் பெற்றுத் தந்த அந்த விலையற்ற செல்வங்களின் தூய்மையான அர்ப்பணிப்பு எமக்குப் பல விடயங்களை இன்றும் சொல்லித்தருகின்றது.
பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் வல்லாதிக்க அரசுகளிடம் விலைபோயும் அரசியல் பகடற்காய்களாக இருக்கும் ஒவ்வொரு தமிழனும் இந்தப் புனிதர்களின் தியாகத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது முதல் பலவீனமே ஒற்றுமையின்மை தான். அதை எப்போது நீக்குகின்றோமோ அப்போது நிச்சயம் இந்த வீரர்களின் தாகத்தை தீர்க்கலாம்.
பலரும் இன்று பேசுபவர்களாக முன்னாள் போராளிகள் இருக்கின்றார்கள். பேசுவதற்கு வாய் இருக்கு என்பதற்காக, எழுதுவதற்கு எழுதுகோல் இருக்கிறது என்பதற்காக அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள், கலாசாரச் சீர்கேட்டில் ஈடுபடுகின்றார்கள் என்று பலவாறு எழுதுகிறார்கள். ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் அவர்கள் எம் தேசத்தின் விடுதலைக்காக தம்மை முழமையாகக் கொடுத்தவர்கள், எதையும் தமக்காக அவர்கள் சேமிக்கவில்லை. ஆக அவர்களின் வாழ்வாதாரத்திற்காக நாம் இதுவரையில் என்ன செய்திருக்கின்றோம், இப்படிச்சொல்வது பாலியல் தொழிலில் ஈடுபடுவது சரியென்று அர்த்தம் அல்ல. மாறாக அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக, சமூகப் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்பதே விடயம்.  

அப்படி ஒன்றை செய்துவிட்டுக்  கதைப்பது தான் நாகரிகம். செய்யமுடியாத சூழல் உள்ளது என்று எவரும் சாட்டுச் சொல்லமுடியாது. அது கோழைத்தனம். தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இனியாவது முன்வரவேண்டும்.
சமுத்தின் பிரச்சனை எழுதப்படும் போது அதற்கான காரணத்தோடு எழுதப்பட வேண்டும். ஒரு பிரச்சினைக்கான காரணத்திற்கு தீர்வுகாணப்படும் போது பிரச்சனை இல்லாமலேயே போய்விடும். 

மீள்எழுச்சி, மீள் ஒருங்கிணைப்பு என்ற சொல்லாடல்கள் எஞ்சியிருக்கும் தமிழனையும் கொன்றுவிடுவதாக அமைகின்றது இதனால் விடுதலை செய்யப்பட்ட பல போராளிகள் மீள சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கான சிறையில் உள்ளவர்களின் நிலை அதோகதியாக இருக்கின்றது. 
தேசியத்தலைவரைப் பொறுத்த வரை சொல்லைவிட செயலுக்கு முக்கியம் கொடுப்பவர். நூம் செயலில் காட்டிய பின்பே பேச முற்பட வேண்டும் என்று சொல்பவர். அதைவிட இரகசியத்தின் உறைவிடமாக தேசியத்தலைவரையும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் சொல்லலாம். 

இந்தியாவில் தலைவரும் புலிகளும் இருந்த காலத்தில் இரண்டு வருடம் பழநெடுமாறன் ஐயா அவர்களின் வீட்டில் பேபி அண்ணை உள்ளிட்டோரோடு தலைவரும் தங்கியிருக்கிறார். ஆப்போது பழநெடுமாறன் ஐயா அடிக்கடி கேட்பாராம் பேபி அண்ணாவிடம் நான் உங்கள் தலைவரை, தம்பி பிரபாகரனைப் பார்க்க வேண்டும் என்று அவரும் காட்டுகிறோம் என்று பதிலளிப்பாராம். ஒரு நாள் மதுரையில் வைத்து தலைவர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறை கைது செய்கிறது. அப்போது அவர்களை பிணையில் எடுக்கப் பழநெடுமாறன் ஐயா செல்கிறார். பிணையில் எடுத்த மூன்று பேரையும் சந்திக்கும் போது தலைவர்  அண்ணா நான் தான் பிரபாகரன். இவ்வளவு காலமும் சொல்லாததற்கு வருந்துகிறேன் என்கிறார் சரியாக இரண்டு வருடம் அவரின் வீட்டில் தங்கியிருந்தார். அதுவரை காலமும் நெடுமாறன் ஐயாவுக்குத் தெரியாது இவர் தான் பிரபாகரன் என்று. இது தான் தலைவர், விடுதலைப்புலிகள்  அமைப்பு.
  
ஸ்ரீலங்கா அரசினூடாக இந்த சொல் அதிகமாக பரப்பப்பட்டாலும் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது தமிழர் தரப்பின் பலவீனமே ஏனெனில் தற்போதுள்ள சூழலில் இச்சொல்லாடல் ஊடாக அதிகம் நன்மை பெறுவது சிங்களமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

ஒவ்வொரு கரும்புலிகளும் அவர்கள் இறுதியாக உச்சரித்த வார்த்தைகள் ''இதை பார்க்கும் போது நான் உங்களை விட்டு நீண்ட தூரம் போய்யிருப்பன் '' ''அன்னேட கைய பலப்படுத்துங்கோ '' '' நாளை நிச்சயம் தமிழீழம் உருவாகும் '' '' நீங்கள் தமிழீழத்தில சந்தோசமா இருக்கோணும் எண்டுறதுக்காக தான் நான் இந்த தாக்குதலை செய்றன்''  இப்படி அவர்கள் தேசத்தின் விடுதலையை மூச்சாக்கி அந்த விடுதலை உயிர் பெற தம் மூச்சை கொடுத்தவர்கள் இந்த தெய்வங்கள். உயிரைக்கொடுத்து தியாகம் செய்த உன்னதமான அந்த இலச்சியத்தை ஒற்றுமையோடு வென்றெடுப்பதே அந்த தெய்வங்களுக்கு நாம் செய்யும் உள்ளார்த்தமான ஆராதனையாகும்.

0 கருத்துக்கள் :