உன் தலையை வெட்ட ஒரு நிமிடம் கூட ஆகாது : எம்.எல்.ஏ. மிரட்டல்

22.7.13

மேற்கு வங்க மாநிலத்தில் 5 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. பிரச்சாரம் தீவிரமாக நடப்பதால் பல இடங்களில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. பிர்பும் மாவட்டத்தில் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோனிரல் இஸ்லாம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ’’இந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் பப்பி தத்தாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் நினைத்தால் உன் தலையை வெட்ட ஒரு நிமிடம் கூட ஆகாது’’என்றார். அதே கூட்டத்தில் பேசிய பிர்பும் மாவட்ட திரிணாமுல் தலைவர் அனுபிரதா மண்டல், ''சுயேச்சை வேட் பாளர்களுக்கு யாரும் ஓட்டுப் போடாதீர்கள். சுயேச்சைகள் மிரட்டலாக இருந்தால் அவர்களது வீடுகளுக்கு தீ வையுங்கள்'' என்றார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட தலைவரின் இந்த பேச்சு மேற்கு வங்க தொலைக் காட்சிகளில் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு சர்ச்சை வெடித்துள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், இடது சாரிகள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். தேர்தல் கமிஷனிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மோனிருள் இஸ்லாம் எம்.எல்.ஏ.விடமும் மாவட்ட தலைலரிடமும், கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ''எப்படியோ நாக்கு குழறி உளறிவிட்டோம்'' என்றனர்.

0 கருத்துக்கள் :