விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – மேனனிடம் உறுதியாகத் தெரிவித்தார் கோத்தா

14.7.13

13வது திருத்தச்சட்டங்களின் கீழ் உள்ள காவல்துறை அதிகாரங்கள் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு விரோதமானது என்பதால், இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் நடத்திய தனியான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபரைச் சந்திக்க முன்னர், கோத்தாபய ராஜபக்சவுக்கும், சிவ்சங்கர் மேனனுக்கும் இடையில் நடத்தப்பட்ட இந்தத் தனியான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இருதரப்பினாலும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சந்திப்பில், காவல்துறை அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதால், தமிழ்பேசும் சமூகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றும் கொந்தளிப்பைத் தான் ஏற்படுத்தும் என்றும் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அதனை ஏற்றுக்கொண்ட சிவ்சங்கர் மேனன், இதற்கு தனியான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறும் மீனவர்கள் விவகாரம் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படவில்லை.
எனினும் முத்தரப்புக் கூட்டத்தில் கோத்தாபய ராஜபக்ச ஊடுருவலைத் தடுக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியிருந்தார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :