இறக்கமுன்னர் குளிப்பாட்டி ஐஸ் பெட்டிக்குள் வைத்தார்களா ??

27.7.13

ராஜபாளையம் நகர் மன்ற 15-வது வார்டு அதிமுக கவுன்சிலர் நாகராஜ் சனிக்கிழமை  காலையிலேயே இறந்து போனார். அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து அக்கட்சியினர் போஸ்டர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர்.

ப்ரீஸரில் வைத்திருந்த நாகராஜின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த மதியம் 2 மணியளவில் வந்தார் செய்தித்துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அவர் மாலை போடும் போது “நாகராஜ் இன்னும் சாகல..

கண்ணசையுது.. கால் அசையுது..” என்று அங்கு பதற்றம் நிலவ.. ஐந்து மணி நேரம் ப்ரீஸருக்குள் இருந்த நாகராஜின் உடலை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார் அமைச்சர்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் இருந்த மருத்துவ அதிகாரி டாக்டர் பொன்னுச்சாமி உடலை சோதித்துப் பார்த்துவிட்டு, “இறந்து ஒரு மணி நேரம்தான் ஆகிறது..

 ஒரு மணி நேரத்துக்கு முன் கொண்டு வந்திருந்தால் பிழைக்க வைத்திருப்பேன்..” என்று சொல்ல.. உஷ்ணமான நாகராஜின் உறவினர்கள் “அப்ப.. காலையிலேயே செத்துட்டதா சொன்ன அந்த டாக்டரை சும்மா விடக் கூடாது..”

என்று ஆக்ரோஷத்தோடு டாக்டர் கோவிந்தராஜை தேடிப் போக.. அவர்களிடம்  “பல்ஸ் சுத்தமா இல்லை.. உசிரு போறதுக்கு முன்னால வீட்டுக்கு கொண்டு போயிருங்கன்னு சொன்னேன்.. நீங்கதானே வீட்ல செத்த பிறகு.. உடம்பை குளிப்பாட்டி ஐஸ் பெட்டிக்குள்ள வச்சிருக்கீங்க.. இப்ப என்னைய குற்றம் சொன்னா எப்படி?” என்று டாக்டர் கோவிந்தராஜ் விளக்கம் தந்திருக்கிறார். 

மீண்டும் வீட்டுக்கு நாகராஜின் உடலைக் கொண்டு வந்து கிடத்திய போது “மாலை போட வந்த அமைச்சரு வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்.. இப்படியா செத்தவன் கண்ணு அசையுது.. கால் அசையுதுன்னு.. ஒண்ணு கிடக்க ஒண்ண சொல்லி.. எழவு வீட்ட ரகளை ஆக்கணும்.. காற்றே புக முடியாத ஐஸ் பெட்டியில.. அஞ்சு மணி நேரத்துக்கும் மேலா  வச்சிருந்த உடம்புல.. எப்படி உசிரு இருக்கும்? இது கூட தெரியாதா அமைச்சருக்கு?
அமைச்சரை விட்டுத் தள்ளு.. இந்த மருத்துவ அதிகாரிக்கு எங்கே போச்சு புத்தி? செத்து ஒரு மணி நேரம்தான் ஆகுதுன்னு அடிச்சி விட்ருக்காரே.. அட கொடுமையே..” என்று அழுகையும் ஒப்பாரியுமாக குமுறிக் கொட்டியிருக்கிறார்கள் அந்தக் குடும்பத்துப்  பெண்கள்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

0 கருத்துக்கள் :