தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா. மன்னார் நகர் விழாக் கோலம்

31.7.13


தமிழ் மொழியை உலக அரங்கில் ஏற்றிவைத்த தமிழ்த்தாயின் தன்னிகரில்லாத் தலைமகனாம் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாருடைய பிறப்பின் நூற்றாண்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 2ஆம் திகதி) தமிழ் கூறும் நல்லுலகெங்கும் நினைவுகூரப்படுகின்றது. இந்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார்த் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளி ,சனி ,ஞாயிறு தினங்களில் (ஓகஸ்ட் மாதம் 2ஆம் ,3ஆம, 4ஆம் திகதிகளில்) இந்த நூற்றாண்டு விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. மூன்று நாட்கள் இடம் பெறும் இவ்விழாவில் தொடக்கவிழா, நிறைவு விழா உட்பட ஆய்வரங்குகள், இலக்கிய அரங்குகள், கலை அரங்குகள் என எட்டு அரங்குகள் இடம்பெறவுள்ளன. அனைத்து அரங்குகளும் மன்னார் நகர மண்பத்தில் இடம்பெறும். இவ்விழாவில் பங்குகொள்ள இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், கல்விமான்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என பலரும் மன்னாருக்கு வருகைதரவுள்ளனர். ஓகஸ்ட் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 – 12.00 மணி வரை தொடக்க விழாவும், மதியம் 2.00 – 5.00 மணிவரை இலக்கிய அரங்கும் , மாலை 6.30 – 9.30 வரை கலை அரங்கும் இடம்பெறும். 3ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 – 12.00 மணி வரை ஆய்வரங்கும், பகல் 2.00 – 5.00 மணி வரை இலக்கிய அரங்கும், மாலை 6.30 – 9.30 மணி வரை கலை அரங்கும் இடம்பெறும். 4 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 – 12.00 மணி வரை ஆய்வரங்கும் பகல் 2.00 6.30 மணி வரை நிறைவு விழாவும் இடம்பெறும். ஆய்வரங்குகள் தவிர்ந்த ஏனைய அரங்குகளில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்படவுள்ளன. 17 பக்கங்களைக்கொண்ட மிகப் பெரும் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றது. தொடக்க விழாவின் போது ‘தமிழாழி’ என்ற பெயரில் நூற்றாண்டு விழா மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. தனிநாயகம் அடிகளாரின் வாழ்வையும் பணிகளையும் மையப்படுத்திய இரண்டு நாள் ஆய்வரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், பேராதானைப் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் இருந்து தமிழ் அறிஞர்கள், கல்விமான்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கின்றனர். மன்னார் நகரின் பொது நூலகத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதிக்கு அருகாமையில் தனிநாயகம் அடிகளாரின் சிலை ஒன்று நிறுவப்பட்டு திறந்துவைக்கப்படவுள்ளது. இதைவிட மன்னார் பனங்கட்டுக்கொட்டுப் பகுதியில் உள்ள கடலேரி வீதி ‘தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் வீதி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்படவுள்ளது. நிறைவுவிழாவின் ஆரம்பத்தில் மன்னார் பாலத்தில் இருந்து நகர மண்டபம் வரையிலான பண்பாட்டுப் பேரணி இடம்பெறவுள்ளது. இதில் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் கலைப் படைப்புக்கள் இடம்பெறும்.

0 கருத்துக்கள் :