ஸ்நோடென்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது : ரஷ்யா திட்டவட்ட அறிவிப்பு

27.7.13

அமெரிக்க உளவு நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இணைய தளங்களுக்குள் ஊடுருவி தகவல்களை திருடியதாக முன்னாள் அதிகாரி ஸ்நோடென் குற்றம் சாட்டினார். இதையடுத்து அவரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டவே அவர் அங்கிருந்து மாஸ்கோவுக்கு தப்பினார்.

 தற்போது அவருக்கு ரஷ்ய அரசு தற்காலிக தஞ்சம் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்நோடென் அமெரிக்கா திரும்பி வழக்கை சந்திக்க உதவ வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடினிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதை நிராகரித்த புடின் அரசு, தற்போது அவருக்கு தற்காலிக தஞ்சம் அளித்துள்ளது. ஸ்நோடென் அமெரிக்காவுக்கு சென்று வழக்கை சந்திக்க நேர்ந்தால் அவருக்கு மரண தண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, அவருக்கு மரண தண்டனை வழங்க கூடாது என்றும், வழக்கை சந்திப்பது குறித்து அவர் சுதந்திரமாக முடிவெடுக்க அமெரிக்கா அனுமதிக்க வேண்டும் என்றும் விக்கிலீக்ஸ் உள்ளிட்ட மனித உரிமை ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் அட்டர்னல் ஜெனரல் எரிக் ஹோல்டர், புடினுக்கு எழுதிய கடிதத்தில், 'ஸ்நோடென் வழக்கை சந்திக்க ரஷ்யா உதவ வேண்டும். அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட மாட்டாது' என்று தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து புடினின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில் ஸ்நோடென் விவகாரத்தில் ரஷ்ய அரசின் நிலையில் எந்த மாற்றமும் கிடையாது.

ஸ்நோடென்னை வெளியேற்றும் எண்ணமோ, அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் எண்ணமோ ரஷ்யாவுக்கு ஒருபோதும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்

0 கருத்துக்கள் :