வடக்கு முதலமைச்சரை தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது

23.7.13

இலங்கையில் வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் எனக்கே உள்ளது என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு தேர்தல் பிரசாரங்கள் எனது தலைமையிலேயே நடக்கின்றன. எனது தீர்மானத்தின்படியே முதலமைச்சர் பதவி அமையும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழேயே போட்டியிடும் தீர்மானத்திற்கான காரணம் பற்றியும் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ஏற்கனவே மத்தியில் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மாகாண சபை தேர்தலில் போட்டியிட விரும்பாமையினாலேயே ஆளும் கூட்டணியின் கீழ் போட்டியிட இணங்கினோம். ஆனால் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் எமது கட்சி தனித்துவத்துடனேயே இயங்கவுள்ளது. அரசாங்கக் கூட்டணியில் இருப்பதன் மூலமே வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நாம் நம்புகின்றோம் என்றார்.

ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் சுதந்திரக் கட்சியில் புதிதாக இணைந்து கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரையும் இன்னும் பலரையும் அக்கட்சி வட இலங்கை தேர்தலில் களம் இறக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :