அமெரிக்க சிறையில் சிறுநீரை குடித்து உயிர்வாழ்ந்த வாலிபர்

31.7.13

போலீசாரின் மெத்தனத்தால் 5 நாட்களாக குடிக்க தண்ணீர் கூட இன்றி சிறையில் அடைபட்டு கிடந்து, தனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு அமெரிக்க அரசு 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் போதை தடுப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியபோது கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த டேனியேல் சாங்(25) என்ற இளைஞரை கைது செய்தனர். அவரை 4 1/2 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 5 அடி உயர தனிமை சிறையில் அடைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கேயே வைத்து பூட்டிவிட்டு சென்றனர்.

தங்களது கட்டுப்பாட்டில் ஒரு கைதி இருப்பதை 5 நாட்களாக மறந்து விட்ட போலீசார் வழக்கமான மற்ற பணிகளில் கண்ணும் கருத்துமாய் ஈடுபட தொடங்கினர்.

ஜன்னல் வசதி ஏதுமில்லாத காற்றோட்டமற்ற அந்த குறுகிய அறையில் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவித்த அந்த வாலிபர் தனது சிறுநீரையே பிடித்து குடித்து உயிரை காத்துக்கொண்டார்.
5வது நாள் போலீசார் அந்த அறையை திறந்து பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சிறுநீரகம் பழுதடைந்து சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்ட அவர் 5 நாட்களுக்கு பிறகு குணமடைந்தார். அவரது நிலைமை குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது.

டேனியேல் சாங் தரப்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல், 'எனது கட்சிக்காரருக்கு நேர்ந்த கொடுமை இந்த உலகத்தில் எவருக்குமே நேரக் கூடாது. அவருக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறு அரசுக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும்' என்றார்.

வாத - பிரதிவாதங்களை கேட்ட பாதிக்கப்பட்ட வாலிபருக்கு உரிய இழப்பீட்டை வழங்கி சமரசம் செய்துக் கொள்ளும்படி அரசுக்கு ஆலோசனை கூறினார்.

இதனையடுத்து, டேனியேல் சாங்குக்கு 4.1 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கி கோர்ட்டுக்கு வெளியே அமெரிக்க அரசு சமரசம் செய்து கொண்டது.

0 கருத்துக்கள் :