கூட்டமைப்புடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு – எரிச்சலில் சிறிலங்கா

20.7.13

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் முக்கிய இராஜதந்திரி ஒருவர் அண்மையில் வன்னிப் பகுதிக்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியது சிறிலங்கா அரசுக்கு எரிச்சலூட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரி மைக்கேல் இர்வின் அண்மையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பொது அமைப்புகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலகத்தில் நடந்த சந்திப்பின் போது, வடக்கு மாகாணசபைத் தேர்தல், சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுக்கட்டடங்கள், தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள், குடியியல் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு, வேட்பாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக சிறிலங்கா அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் நாள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்க இராஜதந்திரியின் வன்னிப் பயணம் சிறிலங்கா அரசுக்கு சந்தேகத்தையும் ஏரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர், உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் இருப்பது குறித்து - குறிப்பாக, வரப்போகும் தேர்தல் குறித்த அமெரிக்க - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடல் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் அமெரிக்க அதிகாரி, வடக்கு மாகாணசபைத் தேர்தல், தென்பகுதி மீனவர்களின் ஊடுருவல், தமிழர் பிரதேசங்களில் சிங்கள அதிகாரிகளின் நியமனங்கள், முஸ்லிம், சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் பேசும் சமூகத்தினருடனான கலந்துரையாடல் ஒன்றிலும் அமெரிக்க அதிகாரி பங்கேற்றுள்ளார்.

இங்கு காணாமற்போனவர்கள், போர்க்குற்றச்சாட்டுகள், பொதுச்சொத்துகள் சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்த ஆராயப்பட்டுள்ளது.
இவை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தக் கவலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகப் பேச்சாளர், உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்தந்த நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வை நடத்துவது வழக்கமான பணியே என்றும், அதுபோன்றே சிறிலங்காவிலும் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“தொடர்ச்சியாக நாம் உள்ளூர் அரச அதிகாரிகள், குடியியல் சமூகத்தினர், தனியார்துறையினரை சந்தித்து வருகிறோம்.
இதன்மூலம் தற்போதைய நிலைமையை நன்றாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

வடக்கு மாகாணசபைத் தேர்தல், சுதந்திரமாக, நீதியாக, வன்முறைகளின்றி, கருத்து வெளிப்பாட்டு அடிப்படைச் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில், நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :