ஈழத்தமிழர் பிரச்சினை! தியாகு சாகும் வரை உண்ணாவிரதம்!

17.7.13

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் 'வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற உறுதிப்பாட்டுடன் திலீபன் நினைவு நாள் அன்று வருகிற செப்டம்பர் மாதம் 26-ம் தேதி முதல் சாகும் வரைப் பட்டினிப் போராட்டம் தொடங்க இருக்கிறேன். என்று, எச்சரிக்கையோடு பேசுகிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு. 
அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
தமிழகத்தில் ஈழத்துக்கானப் போராட்​டங்கள் நாளடைவில் நீர்த்துவிட்டதே... உங்களைப் போன்ற தமிழ் அமைப்புகளும் அமைதியாகி விட்டதா?
அலையில் எப்படி ஏற்றம் இறக்கம் இருக்குமோ அதைப் போலத்தான் போராட்டங்களிலும் இருக்கும். ஈழத்துக்கான போராட்டம் உணர்ச்சி சார்ந்த தளத்தில் இருந்து அறிவு சார்ந்த தளத்துக்கு மாறியுள்ளது.
இது வளர்ச்சியின் போக்கு.
தமிழ் மக்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்த் தேசிய ஆட்கள் ஈழத்துக்காக மட்டும் போராட வேண்டும் என்று நினைப்பது தவறான கருத்து.
காவிரிக்காக, முல்லைப் பெரியாறுக்காக, தமிழ்வழிக் கல்விக்காக என்று மக்களின் முக்கியப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும்.
புதிய சிக்கல்கள் முளைக்கும்போது முகம் கொடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்துவருகிறோம்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
கொமன்வெல்த் அமைப்பில் இருந்து சிங்கள அரசை நீக்க, இந்திய அரசு முதலில் வலியுறுத்த வேண்டும்.
இரண்டாவதாக, கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதிக்கக் கூடாது. மூன்றாவதாக, அப்படியே கொழும்பில் நடந்தாலும், இந்திய அரசோ மற்ற கொமன்வெல்த் உறுப்பு நாடுகளோ அதில் கலந்துகொள்ளக் கூடாது.
இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கை ஆயுதப் படையினருக்கோ, மற்ற துறையினருக்கோ எவ்வகைப் பயிற்சியும் அளிக்கக் கூடாது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழிக் கம்பி வடம் அமைத்து மின்சாரம் கொடுப்பதற்கு செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும்.
கச்சதீவு தொடர்பான ஒப்பந்தத்தையும் ரத்துசெய்ய வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய உலகத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானங்களுக்கு மத்திய அரசும் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் 'வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற உறுதிப்பாட்டுடன் திலீபன் நினைவு நாள் அன்று வருகிற செப்டம்பர் மாதம் 26-ம் தேதி முதல் சாகும் வரைப் பட்டினிப் போராட்டம் தொடங்க இருக்கிறேன்.
உண்ணாவிரதம் இருந்து இதை எல்லாம் சாதிக்க முடியுமா?
முடியாது என்று நினைத்தால் எதுவுமே முடியாது. எங்களின் இந்தப் போராட்டத்தால் மீண்டும் ஒரு மாணவ எழுச்சி, மக்கள் எழுச்சி தோற்றுவிக்கப்பட வேண்டும். போராடி வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக போராடாமலேயே இருக்கக் கூடாது.
போராடாமல் வாழ்ந்த இனம் என்பதைக் காட்டிலும், போராடி அழிந்த இனம் என்று வரலாறு எங்களுக்குக் கிடைக்கட்டும்’ என்று சொன்னார் பிரபாகரன். நாங்களும் அதுபோலத்தான்!
உங்கள் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் அரசு செவிசாய்க்கும் என்று நம்புகிறீர்களா?
இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்து, அதைத் தடுக்கவும் துப்பில்லாமல், தொடர்ந்து ராஜபக்சவுடன் உறவாடுகிறது காங்கிரஸ் அரசு.
இலங்கையில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களோடும் கைகுலுக்கி கும்மாளம் அடிக்கும் நிகழ்ச்சியில் மத்திய அரசும் கைகோத்து நிற்கிறது. இதை எல்லாம் நம்மால் தடுக்க முடியவில்லை.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், இருக்கப் போகிறோம் என்றால் தமிழனாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

0 கருத்துக்கள் :