தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சிறிலங்கா அதிகாரிகள் பாகிஸ்தான் சென்றனர்

16.7.13

தமிழ்நாட்டின் வெலிங்டன் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும், அதே பயிற்சிநெறிக்காக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஹரிஸ்சந்திர ஹெற்றியாராச்சி, விமானப்படையை சேர்ந்த விங்கொமாண்டர் பண்டார தசநாயக்க ஆகியோர் பாகிஸ்தானில் பயிற்சி பெறுவதற்காக கடந்த வார இறுதியில் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவர்களுக்கு பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவேட்டாவில் உள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் சிறிலங்காப் படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வெலிங்டனில் பயிற்சி பெற்று வந்த இந்த இரு அதிகாரிகளையும் புனே அல்லது செகந்திராபாத்தில் பயிற்சி பெறுவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்தது.

எனினும் இந்தியாவின் இந்த வாய்ப்பை உதறித் தள்ளிவிட்டு இரு படை அதிகாரிகளையும் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச கொழும்புக்குத் திருப்பி அழைத்திருந்தார்.

இதையடுத்து, கொழும்பு வந்திருந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி மூலம், இந்த இரு அதிகாரிகளுக்கும் குவேட்டாவில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :