எனது மகன் குடித்தார் ஆனால் குடிக்கவில்லை ஊடகத்துறை அமைச்சர்.

5.7.13


எனது மகன் விமானத்தில் குடித்துவிட்டு குழப்பம் செய்தமை உறுதியானால் பதவிகளிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற "ஏ" கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது, கழிவறையின் கதவு என எண்ணிக் கொண்டு றமித் றம்புக்வெல்ல விமானத்தின் கதவைத் திறக்க முனைந்தார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் றமித் றம்புக்வெல்ல மதுபோதையில் இருந்தார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே கெஹெலிய றம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், மகன் குடித்திருந்ததாகவும், விமானத்தில் குழப்பம் விளைவித்ததாகவும் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டால் தனது பதவிகளிலிருந்து உடனடியாக விலகத் தயாராக உள்ளேன். குறித்த விமானத்திற்குள் செல்லும் முன்னர் தனது மகன் ஒரு கோப்பை "றெட் வைன்" மாத்திரமே அருந்தியிருந்ததாகக் குறிப்பிட்ட கெஹெலிய றம்புக்வெல்ல, இங்கிலாந்தின் ஊடகங்களில் தனது மகன் அதிகமாக மதுவருந்தினார் என்று செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் அந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை தன்னையறியாமல் செய்த தவறுக்காக தனது மகன் விமானப் பணியாளர்களிடம் ஏற்கனவே மன்னிப்புக் கோரியுள்ளார். அதனையடுத்து தனது மகனின் மன்னிப்பை குறித்த விமான சேவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, தனது மகன் மதுவே அருந்துவது இல்லை என ஊடகத்துறை அமைச்சர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :