பீகார் மகாபோதி புத்தர் கோயிலை தகர்க்க சதி அடுத்தடுத்து 9 குண்டுவெடிப்பு

8.7.13


பீகார் மாநிலம் புத்தகயாவில் புத்த மதத்தினரின் புனித தலமான மகாபோதி கோயிலில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 80 அடி உயர புத்தர் சிலை மற்றும் பஸ் நிலையம் அருகிலுமாக மொத்தம் 9 குண்டுகள் வெடித்தன. இதில் புத்த துறவிகள் 2 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பை அடுத்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ளது புத்தகயா.

இங்கு உலக புகழ்ப்பெற்ற மகாபோதி புத்தர் கோயில் உள்ளது. இங்குள்ள போதி மரத்துக்கு அடியில்தான் புத்தர் ஞானம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான புத்த மதத்தினரின் புனித தலமாக இது கருதப்படுகிறது. இந்த கோயிலில் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 5.58 மணிக்குள் அரை மணி நேரத்துக்குள்ளாக அடுத்தடுத்து 9 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

 முதலில் மகாபோதி மரத்துக்கு அருகில் குண்டுவெடித்தது. அங்கிருந்த மேஜை தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. அதன்பின், கோயில் வளாகத்துக்குள் மேலும் 3 குண்டுகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து கர்மபா மடம் பகுதியில் 3 குண்டுகள் வெடித்தன. மடத்தின் அருகில் உள்ள 80 அடி உயர புத்தர் சிலை அருகே ஒரு குண்டும், கோயில் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் ஒரு குண்டும் வெடித்து சிதறின. குண்டு வெடிப்பில் மியான்மர் மற்றும் திபெத் நாட்டை சேர்ந்த 2 புத்த துறவிகள் படுகாயம் அடைந்தனர்.

 தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. போலீசார் அலட்சியமாக இருந்ததால் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதனால் உயிரிழப்பு இல்லை. சம்பவத்தை தொடர்ந்து வெடிகுண்டு செயல் இழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் நடத்திய சோதனையில் கோயில் அருகே வெடிக்காமல் கிடந்த 2 சக்தி வாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக கோயில் கர்ப்பகிரகத்துக்கோ போதி மரத்துக்கோ, 80 அடி புத்தர் சிலைக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

 காயமடைந்தவர்கள் உடனடியாக கயாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இது தீவிரவாத தாக்குதல்தான் என்று மத்திய உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி கூறியுள்ளார். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 கோயில் பகுதியில் மாநில டிஜிபி அபியானந்த் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். பாட்னாவில் உள்ள மகாவீரர் கோயில் உட்பட மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தாக்குதல் நடந்த இடங்களை பார்வையிட்டார். தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவர், தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளும் புத்தகயா விரைந்துள்ளனர்.

 பீகாரில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மியான்மர் மோதல் காரணமா? மியான்மரில் புத்த மதத்தினருக்கும், ரோகிங்கியா என்ற முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் நடந்து வருகிறது. இந்த மதக் கலவரத்தில் 250 பேர் கொல்லப்பட்டதாகவும், 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்ததாகவும் ஐ.நா. கூறுகிறது.

 இந்த மோதலுக்கு பழிவாங்கும் வகையில், புத்த மதத்தினரின் புனித தலமான புத்த கயாவில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதுகாப்பில் அலட்சியம்? புத்தகயாவில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து கோயில் நிர்வாகத்தினரும் போலீசாரும் கடந்த 2ம் தேதி ஆலோசனை நடத்தினர்.

 அப்போது மகாபோதி கோயிலில் போதிய பாதுகாப்பு இல்லாததால், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என போலீசார் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை.

0 கருத்துக்கள் :