ஜாவா படகு விபத்து பலியானோர் தொகை 15: 4 பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின

27.7.13

இந்தானேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய அகதிகள் படகில் பயணம் செய்த நான்கு பெண்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கின.

இதையடுத்து இந்த விபத்தில் மரணமானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாயன்று படகு மூழ்கிய இடத்தில் இருந்து மேற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள உயுங் ஜென்ரெங் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறிலங்காவைச் சேர்ந்த தமிழர்களும் அடங்கியுள்ளனர்.

சடலங்கள் மீட்கப்பட்டு உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 15 பேரில், 18 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளிட்ட ஆறு சிறுவர்களும், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அடங்கியுள்ளனர்.

இந்த விபத்தில் காணாமற்போனவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


204 பேர் பயணம் செய்ததாக கருதப்படும் இந்தப் படகில் இருந்த 189 பேர் மட்டும் காப்பாற்றப்பட்டனர்.

அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோருவதற்காக சென்ற ஈரான், ஈராக், சிறிலங்கா நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கினர்.

காணாமற்போனவர்களின் சடலங்களைத தேடி இன்று கரையோரப் பகுதிகளில் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

உலங்கு வானூர்தி மூம் நடத்தப்படும் தேடுதல், தற்போது, 60 கி.மீ தொலைவு வரைக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

எனினும், காணாமற்போனவர்கள் உயிருடன் தப்பியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :