13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யக் கூடாது குர்ஷித் வலியுறுத்து

6.7.13

13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிக்க சென்றுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு இந்தியா, காரமான பதிலை வழங்கியிருப்பதாக பிரஸ் ட்ரஸ்ட் அப் இந்தியா செய்தி சேவை தெரிவித்துள்ளது.

13வது அரசியலைமைப்புச் சட்டத்திருத்தத்தை நீர்த்து போக செய்யும் எந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் அர்த்தமுள்ள அபிவிருத்தி தேவையெனில், 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டும் அல்லது அதற்கு அப்பால் சென்ற தீர்வொன்று செல்ல வேண்டும் என்று இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மான் குர்திஷ், பசில் ராஜபக்ஸவிடம் தெரிவித்தாகவும் அந்த செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையில் அதிகளவிலான முதலீட்டு திட்டங்களை முன்னெடுக்க இந்தியாவுக்கு வழங்குவதற்கு ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கூறி, பஷில் இ்ந்தியாவை திருப்திப்படுத்த முயற்சித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த இந்திய வெளிநாட்டமைச்சர் குர்ஷித், ஏற்கனவே இந்திய முன்னெடுத்து வரும் வீடமைப்புத் திட்டம் சிறந்த முறையில் நடைபெற்று வருவதாகவும் ராஜபக்ஸ அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு நல்லது என்றாலும் மாகாண சபைகளின் அதிகாரங்களை நீர்த்து போக செய்வதன் மூலம் அர்த்தமுள்ள அபிவிருத்தியை அடைய முடியாது என்றும் கூறியதாக அந்த செய்தி சேவை கூறியுள்ளது.

அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸ், 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற தீர்வை கொண்டு வரவுள்ளதாக கூறியிருந்தார். வடக்கு மாகாண சபையை ஏற்படுத்தாது மாகாணங்களின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதை இந்திய விரும்பாது.

13வது திருத்தம், அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு இருக்கும் பொறுப்பில் அது விலகி செல்ல முடியாது என்றும், இந்திய வெளிநாட்டமைச்சர், பஷில் ராஜபக்ஸவிடம் சுட்டிக்காட்டியதாக பீ.ரி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் கலந்து கொண்டார்.

0 கருத்துக்கள் :