கடவுளை தேடி பயணித்தவர்களின் கண்களுக்கு

25.6.13

நாட்டையே கண்ணீர் சிந்த வைத்த உத்தரகாண்ட் வெள்ளத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் தப்பி வந்தது மகிழ்ச்சி அளிக்கும் விசயமாக இருந்தாலும் அவர்கள் அனுபவித்த படபடப்பு, நெஞ்சை உறைய வைக்கும் அதிர்வு.அவர்கள் வாயிலாகவே கேட்போம்....

உத்தரகாண்டில் இருந்து சேலத்தை சேர்ந்த 28 பேர்கள் ஞாயிறு மாலை தொடர்வண்டி மூலம் வந்தவர்களை மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் பூச்செண்டு தந்து வரவேற்றார். குடும்பத்தினர் கட்டியணைத்து கண்ணீர் சிந்த அவர்களின் இல்லத்திற்கு சென்று அவர்கள் அனுபவங்களை கேட்டோம்..

  'நாங்கள் உயிர் பிழைத்து வந்தது கடவுள் புண்ணியம் தான்' என்கிறார் 50 வயது காந்தாமணி.

'நாங்க கேதரிநாத் கோயிலுக்கு போகவில்லை. காலையில் போகலாம் என்று 20 கி.மீ கீழே உள்ள குப்தகாசியில் தங்கிவிட்டோம். காலையில் மேல போக கிளம்பினால் 'எங்க போறீங்க மலை மேல பெரிய வெள்ளம் வந்துடுச்சு போக முடியாது'ன்னு அந்த ஊரு மக்களும் போலீசும் தடுத்துட்டாங்க. அதுக்கப்புறம் ஊருல இருந்து போன் வர வர தான் பீதியானோம்.' அங்க பயங்கர வெள்ளம் 1000 பேரு செத்துட்டாங்க 5000 பேர் செத்துட்டாங்களாம் நீங்க பத்ரமா இருகிங்களா?"ன்னு கேட்க கேட்க தான் பயந்தோம்.

அதனால 5 நாள் வெளிய போகாம தங்கிட்டோம். நாள் முழுக்க கரண்ட்டு கட்டு. ஒரு நாளைக்கு நைட் 8 மணியில இருந்து 10 மணி வரை மட்டும் ஜெனரேட்டர் போட்டுவிடுவாங்க அப்போ தான் செல்போன் பவர்(சார்ஜ்) ஏத்திகுவோம் அங்க பல நூறு பேரு இருக்க ரொம்ப கஷ்டம் தான். பாத்ரூம் போறது கொடுமை. கூட்டமா இருக்கும். தண்ணி இருக்காது இதுல இடை இடைல ஊருல இருந்து வர்ற போன் 'ஊரே அழிஞ்சுடுசாம்' சொல்லுவாங்க அப்போ தான் இன்னும் பீதியாவோம் இது இல்லாம மேல பேஞ்சுகிட்டு இருக்குற மழை அப்படியே இங்கயும் வந்து அழிசுடும்னு பயம். தினம் தினம் பயம் தான். ஏன்னா கேதர்நாத் கோயிலுக்கு ரொம்ப பக்கத்துல இருக்குற தங்குமிடம் குப்தகாசி தான் அதான் பயந்தோம்' கண்கள் விரிய பேசியவர் தொடர்ந்தார் இன்னும் பீதியோடு. '

அஞ்சு நாளா தங்கியும் சாமிய பாக்க முடியலையே நாம ஏதாவது பாவம் செஞ்சுட்டமொன்னு அழுதோம். அங்க இருந்த ஆசிரம அம்மா தான் 'நீங்க புண்ணியம் செஞ்சு இருக்கீங்க அதான் மேல போயி இறந்து போகலைனு 80 வருசத்துக்கு ஒருதடவை இப்படி சிவன் கோபப்படுவாறு அதனால அவரு இருந்த திசை பார்த்து வணங்கிட்டு ஊருக்கு திரும்புங்கன்னு' சொன்னாங்க.

அதுக்கப்புறம் 5 நாள் கழிச்சு மழை குறைஞ்சதும் கிளம்பினோம். திரும்பி 'அரித்வார்' வர்ற வரைக்கும் உயிரோட வருவமானு தெரியல. கிட்டத்தட்ட ஒரு 80 கி.மீட்டருக்கு ஒரு பக்கம் மலை பாறை, றுபக்கம் பெரிய பள்ளத்தாக்கு. அப்படி ஒரு பள்ளம் பார்த்ததே இல்லை ராவணன் படத்துல கடைசி சீன்ல விக்ரம் தொங்குவாறே அதா விட ஆழமா பள்ளம் இருக்கும். அந்த பள்ளத்தாக்கு பக்கம் உள்ள ரோடு சரிஞ்சு இருந்தது. ஒரு பஸ் போகுதுனா முன்னாடி பின்னாடி உள்ள ஒருபக்கதின் ரெண்டு சக்கரம் தான் ரோட்டுல போகும் அந்த பக்க ரெண்டு சக்கிரமும் அந்தரத்துல தொங்கிட்டு போகும். இப்படி தான் பயணம். ஈஸ்வரா ஈஸ்வரான்னு வேண்டிகிட்டே போனோம். அந்த ஊரு மக்கள் தான் கல்லு, மண்ணு எல்லாம் எடுத்து வந்து சாலை ஓரத்தை சரி செஞ்சாங்க. பஸ்சுல போறவங்களும் இறங்கி உதவி செஞ்சோம். இப்படி அம்பது நூறு வண்டிகள் வரிசையா ஒண்ணா போயி ஒவ்வொரூ கி.மீட்டரா ரோடை சரி பண்ணிக்கிட்டே தான் வந்தோம். கொஞ்சம் தவறினாலும் எலும்பு கூட கிடைக்காது...தப்பிச்சு வந்தது இப்போ வரை நம்ப முடியலை' என்றார் மரண பயத்தில்.'நாங்க தப்பிச்சு வந்து ஒரு ஜங்சன் பகுதியில நின்னோம் அங்க கேள்விப்பட்ட ஒரு விஷயம் எங்களை உறைய வச்சுடுச்சு' என தொடர்ந்த அவரின் கணவர் வரதராஜன் 'எங்க பின்னாடி வந்த ஒரு பஸ், லாரி, கார் அப்படியே சரிஞ்சு அந்த பள்ளத்தாக்குல விழுந்துடுச்சு. நாங்க உயிர் தப்பிசோம்னு சந்தோசபடுறதா, இறந்தவங்களுக்காக அழுறதான்னே தெரியலைங்க' என்றார் மிரட்சியோடு.

மாதேஸ்வரன் அனுபவமோ வேறுவிதமாக இருந்தது. '

அங்க தங்கி இருந்த லங்கர் ஆசிரமத்துல சாப்பிட்டோம் அங்க ஜீப்ல கை கால் போனவங்க, இறந்தவங்கள தூக்கிட்டு வருவாங்க பாக்கும் போதே பயங்கரமா இருக்கும். ஆனா அங்க இருக்குற மக்களையும் போலீசையும் ராணுவத்தையும் சும்மா சொல்லகூடாது ஒவ்வொருத்தரையும் அப்படி பார்துகிட்டாங்க வண்டி வரும் இடத்தில எல்லாம் ஓடோடி போயி பிஸ்கட்டு, தண்ணி பாக்கெட்டு கொடுத்து உதவுனாங்க. பொதுமக்கள் முடியாத பெரியவங்கள முதுகுல சுமந்து போனாங்க. கேதரிநாத்ல ஒரு கடவுளை, ஒரு சிவனை பார்க்க முடியும்னா இங்க உயிரை காப்பாத்துற சாதாரண மனுசாருங்க ஒவ்வொருத்தரும் ஈஸ்வரனா தெரிஞ்சாங்க ஆமாங்க எல்லாரும் கடவுளா காட்சி தந்தாங்க' என்றார் கண்கள் கலங்கி. தொடர்ந்து பேசிய அவர், 'ஆனா நம்ம ஊரு சென்னை ரெயில்வே ஸ்டேசன் வந்து இறங்கினோம் ஒருத்தர் கண்டுகலை உயிர் பிழைச்சு வந்தவங்கன்னு ஒரு காப்பி தண்ணி கூட தரலை. எத்தனை பேர் வந்தீங்கன்னு கணக்கு எடுத்துகிட்டாங்க. 30 பேர் போனோம் ரெண்டு பேரு உடம்பு சரியில்லைன்னு முன்னவே திரும்பிட்டாங்க சென்னை அதிகாரிங்க 'எங்க அந்த ரெண்டு பேருன்னு' துருவி துருவி கேட்டாங்களே ஒழிய

எங்கள அன்பா கூட பார்த்துகலை என்றார் வருத்ததோடு. 'ஆனால் அதே அங்க உள்ள மிலிட்டரி காரங்களும், அந்த ஊரு அதிகாரிங்களும் நாங்க சென்னை வரும் வரை எங்க இருக்கீங்க பத்ரமா போயிட்டிங்களா?ன்னு போன் பண்ணி கேட்டுகிட்டே இருந்தாங்க' என்றார்...

  28 பேரை கூட்டி சென்ற ஸ்ரீ சாய் தண்டாயுதபாணி டூரிஸ்ட் உரிமையாளர் கே.சேகர் கூறியதாவது, 'நாங்க எல்லாம் மயிரிழையில் உயிர் தப்பினோம்ன்னு தான் சொல்லணும் தப்பிச்சது பெரும் பாக்கியம் எனக்கு எல்லோரையும் பத்ரமா கூட்டி வரணும்னு பயம். அங்க ரொம்ப முக்கிய பிரச்சனை என்னன்னா எக்கச்சக்கமான லாட்ஜ்ங்க இருக்கும் ஒரு நாள் வாடகையே 7000 ரூபாயில தொடங்கி 20000 வரை போகும்' என்றவர் அதை விளக்க தொடங்கினார்..

'6 ஆம் தேதி சேலத்தில இருந்து கிளம்பினோம். ட்ரைன்ல டெல்லி போயி அங்க அரித்வாருக்கு ட்ரைன்ல போயி அதுக்கப்புறம் அங்கு இருந்து ஒரு ட்ராவல்ஸ் மினி பஸ் எடுத்துகிட்டோம். அரித்வார் தான் அடிவாரம் மாதிரி அங்க இருந்து எல்லாமே மலை தான். போலகிரி ஆஸ்ரம் போயி, யமுனாதிரி போயி, ருத்ரகாசி போனோம் அப்புறம் கங்கோத்திரி போனோம் அதுக்கப்புறம் குப்தகாசி போனோம் அங்க இருந்து 20, 30 கி.மீட்டருல கேதரிநாத் சிவன் கோயில். சனிகிழமை நைட் 6.30 க்கு கிளம்பினோம் கொஞ்ச தூரத்துல லாட்ஜ் காரங்க கை தட்டி கூப்பிட்டாங்க இதுக்கு மேல போன கோயிலுக்கு போக 10.30 ஆகிடும் அதனால காலையில போங்கன்னு சொன்னாங்க அதனால அங்கேயே தங்கிட்டோம் அதனால தான் தப்பிச்சோம். வெள்ளிகிழமை பெய்ய தொடங்கின மழை திங்ககிழமை 17.06.13 தேதி மதியம் வரை விடாம பெஞ்சது. மழைனா மழை கேப் விடாத மழை 'என்றவர் தொடர்ந்து 'திரும்பிய எங்களை பத்ரமா மீண்டும் அரித்வார் வரை எங்களை பத்ரமா கொண்டு வந்தவர் டிரைவர் ராம்தேவ் மற்றும் அங்க உள்ள நம்ம தமிழர் கலக்டர் ரேங்கிங்கில் உள்ள அதிகாரி முருகேசன். எங்ககூட வந்த சுப்ரமணியும் இவரின் அப்பாவும் பள்ளி தோழர்கள் அந்த நினைவில் முருகேசன் அவர்கள் அங்கு தற்செயலாக எங்களை கண்டுபிடித்து உதவினார். புண்ணிய தளமான கேதரிநாத்க்கு புண்ணியம் வேண்டி தான் வயதானவர்கள் செல்வார்கள் அவர்களை எந்த பாதிப்பும் இல்லாமல் திரும்ப கூட்டி வந்ததில் தான் எனக்கு நிம்மதியே ' என்றார் பொறுப்போடு...

  கடவுளை தேடி பயணித்தவர்களின் கண்களுக்கு தங்கள் சேவையின் மூலமும், உதவும் மனப்பான்மையின் மூலமும் உத்தரகாண்ட் மக்களும், டிரைவரும், முருகேசனும், போலீஸ், ராணுவத்தினரும் கடவுளாக காட்சி தந்தனர். பொதுநல பற்றுதானே கடவுளை அடையும் வழியும் கூட!

0 கருத்துக்கள் :