கெஹலியவுக்கு பேராயர் இராயப்பு ஜோசப் பதிலடி

22.6.13

ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கருத்துக்களுக்கு மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கண்டனம் வெளியிட்டுள்ளார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னார் ஆயரின் நடவடிக்கைகளை அமைச்சர் கெஹலிய கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
மன்னார் பேராயரை அமைச்சர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஒப்பீடு செய்திருந்தார்.
எனினும், இவ்வாறான கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என பேராயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
நபர்களின் கருத்து நிலைப்பாடுகள் குறித்து ஊடகங்களில் தகவல் வெளியிடும் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கக் கூடாது என தாம் ஒருபோதும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் தம்மிடம் விபரங்களை கேட்டறிந்து அதன் பின்னரே கருத்து வெளியிட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல்களை எங்கிருந்து பெற்றுகொண்டார் என்பதனை ஊடக அமைச்சர் அம்லப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரபாகரன் ஓர் போராளி எனவும், தாம் ஓர் ஆன்மீகவாதி என்வும் அதனை ஊடக அமைச்சர் நினைவில் நிறுத்தி ஒப்பீடுகளை செய்ய வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்மை நேரடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டால் பேராயர் சம்மேளனத்தின் ஊடாக தொடர்பு கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டுமென பேராயர் ஜோசப் இராயப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :