தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் கலைஞர்/காணொளி

6.6.13


தமிழக மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. அவர்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறி உள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் கடித வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- எல்லையில்லா அன்பு என்னுடைய 90-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகவும் சீரோடும் சிறப்போடும் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தி இருக்கிறீர்கள்.

 இரண்டு மூன்று நாட்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. என் வீட்டாரும் திரும்பத் திரும்ப அதுபற்றிக் கேட்டார்கள். இரண்டு மூன்று நாட்களாக என்னுடன் காலையிலும் மாலையிலும் பக்கத்திலே இருக்கின்ற பாசம் மிகுந்த என் தம்பிமார்கள் சிலர்கூட Òஎன்ன அண்ணே, தூக்கம் வரவில்லையாÓ என்றார்கள்! தூக்கம் வராத தற்குக் காரணம் எனக்குத்தான் தெரியும்;

ஆம்; வேறொன்றுமில்லை. தமிழ் மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே? எங்கோ ஒரு கிராமத்தில், அதுவும் மிக மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன் ஆயிற்றே? என் உயிர் மாறன்தான் எங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி! அதுவரை யாரும் எங்கள் குடும்பத்தில் பட்டதாரி கிடையாது. எங்கள் குடும்பத்திற்கு என்று எந்தப் பெருமையும் கிடையாது. ஆனால் ஐந்து முறை முதல்-அமைச்சராக இருந்து விட்டேன். 12 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு முறைகூட தோல்வியடையாமல், தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறேன்.

உழைப்பு...உழைப்பு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1969-ம் ஆண்டு முதல் தி.மு.க. தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்து வருகிறேன். தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி மக்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு என்னை எதிரியாகக் கருதக்கூடியவர்கள் ஒருசிலர் இருக்கலாமே தவிர, மற்றவர்கள் எல்லாம் என்பால் அன்புதான் காட்டியிருக்கிறார்கள். ஒரு சில காலம் என்னை எதிர்த்தவர் கள்கூட, பின்னர் என்னிடம் அன்பு காட்டியிருக்கிறார்கள். ஏன் என்ன காரணம்? எனக்கென்று உள்ள பெருமைதான் எது? உழைப்பு ஒன்றுதான். சிறு வயது முதல் இடைவிடாமல் உழைத்திருக்கிறேன். கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எழுதி யிருக்கிறேன். என்னுடைய இந்த 90 வயதில் தமிழகத்திலே உள்ள பெரு நகரங்களில், சிறு நகரங்களில், கிராமங்களில் நான் பேசாத இடம் எதுவுமே கிடையாது.

வெளியூர்களிலும், வெளியூர் செல்லும் போது சாலையோரங்களிலும், சென்னையிலும், மாநாடுகளிலும், பொதுக்கூட்டங் களிலும், ஏன் என்னுடைய இல்ல வாயிலிலும் என்று நான் நடத்தி வைத்த திருமணங்கள் மட்டும் சுமார் 20 ஆயிரத்தைத் தொடும். தேசிய தலைவர்களுடன் பழக்கம் தமிழக அரசியலில், மாநில கட்சிகளில் ஒன்றின் தலைவராக இருந்த போதிலும், என்னை அறிந்து கொள்ளாத அகில இந்தியத் தலைவர்கள் இல்லை என்ற அளவுக்குப் பழகியிருக்கிறேன். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலந்தொட்டு, அதற்குப் பிறகு வந்த அனைத்துப் பிரதமர்களும் என்னுடன் அன்புடனே பழகி இருக்கிறார்கள். யாரும் என்னிடம் வெறுப்பு காட்டுகின்ற அளவிற்கு நான் நடந்து கொண்டதில்லை.

பிரதமர்கள், மத்திய மந்திரிகள் மாத்திரமல்ல, மத்தியில் எதிர்க்கட்சி வரிசையில் இடம் பெற்ற அத்தனை தலைவர்களும் என்னை மதித்தே பாராட்டி இருக்கிறார்கள். ஏன், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள தலைவர்களும் என்னை நன்கு அறிவார்கள். அகம்பாவம் கூடாது முதுகில் மிகப் பெரிய வலி வந்து, அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியில் பயணம் மேற்கொள்கிற போதும், என்னுடைய பணிகள் எதையும் நிறுத்தி விடவும் இல்லை; ஒத்திப்போடவும் இல்லை. கூட்டங்களுக்குச் செல்லாமல் இல்லை, எழுதாமல் இருப்பதில்லை. அரசியல் பணிகளுக்கு இடையே கலைத்துறையிலும் ஈடுபட்டு இதுவரை சுமார் 75 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி, அவற்றில் பெரும்பாலானவை வெற்றிகரமாக ஓடியுள்ளன.

 நான் எழுதிய உரையாடல்கள், தமிழகத்தில் பலரால் மனப்பாடம் செய்யப்பட்டதும், உரையாடல்கள் முதன் முதலாக நூல் வடிவில் வெளிவந்ததும் உண்டு. இத்தனைக்குப் பிறகும் நான் அகம்பாவம் கொண்டதில்லை. யாரையும் அலட்சியமாக நடத்தியதுமில்லை. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசியதில்லை. தொடர்ந்து உழைப்பேன் ஜூன் 3-ந் தேதி அன்று அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணியளவில் படுக்கச் செல்கின்ற வரையில் தமிழ் மக்கள் என் மீது பெய்த அன்பு மழை இருக்கிறதே; அதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்?

விழாக்கள் இன்னும் முடிந்தபாடில்லை. மாவட்டங்கள் எல்லாம் 100 நிகழ்ச்சிகள் என்றும், மாதம் முழுவதும் நிகழ்ச்சிகள் என்றும், தொடர் நிகழ்ச்சிகள் என்றும் போட்டி போட்டுக் கொண்டு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்பது தான் இரண்டு மூன்று நாட்களாக என்னைத் தூங்க விடாமல் என் மனதிற்குள் எழுகின்ற கேள்வியாகும். இந்த அளவிற்கு என்னிடம் பாசத்தையும், அன்பையும் கொட்டுகிறார்களே, இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என் மனதாலும் செயலாலும் தொடர்ந்து உழைப்பேன், உழைப்பேன், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன். இவ்வாறு கலைஞர் கூறி உள்ளார்.

0 கருத்துக்கள் :