சிரியாவும் - சிறீலங்காவும் மேற்குலகின் முரண் நிலையும்

8.6.13

2005ம் ஆண்டின் இறுதியில் சிறீலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்றதன் பின்னர், சமாதான உடன்படிக்கையைக் குழப்பும் வகையில் விடுதலைப் புலிகள் மீதான வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை அவர் ஆரம்பித்தார்.
சர்வதேச மத்தியஸ்துடன் சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்த நிலையில்தான் இந்த வலிந்த தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தன. இதுபற்றி மத்தியஸ்தர்களான நோர்வேயிடம் விடுதலைப் புலிகள் எடுத்துக்கூறியபோதும், ‘அடிக்கவருகின்ற கையைத் தடுப்பதும் மீறல்தான்’ என்பதுபோல் இரண்டு தரப்பையுமே அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விடுதலைப் புலிகள் விலகாதபோதும், 2006ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடையைக் கொண்டுவந்தது. இரு தரப்புக்கள் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த நிலையில், ஒரு தரப்பை மட்டும் பயங்கரவாதிகளாகக் குற்றம்சாட்டி ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது, சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்புப் போருக்கு பச்சைக்கொடி காண்பித்து ஆரம்பித்து வைத்த முதல் நிகழ்வாக அமைந்தது.
“ஐரோப்பிய ஒன்றியத் தடை ஒரு வரலாற்றுத் தவறாகவே முடியும்” என்று அப்போதே விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எச்சரித்திருந்தார். “இந்தத் தடையின் மூலம் புலிகளிடமிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை ஓரங்கட்டிவிட முடியாது” என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை, விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ளமையானது, “சமாதானத்துக்கு பாரிய குந்தகத்தை ஏற்படுத்தும் மிக மோசமான நடவடிக்கை” எனத் தெரிவித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “அரசுக்கும் - விடுதலைப் புலிகளுக்குமான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவிருந்தவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை சமாதான பேச்சுவார்த்தைக்கு சாவுமணி அடித்துள்ளது” என்றும் தெரிவித்திருந்தது.
விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் முக்கிய தரப்பினர். எனவே, இந்தத் தடை அறிவிப்பானது சமாதானத்தைக் குழப்பி மீண்டும் யுத்தத்துக்கே செல்லும் அபாயகரமான நிலையையே தோற்றுவித்துள்ளது. இந்த நாட்டில் மீண்டும் மீண்டும் இனவாத பௌத்த சக்திகளை வலுவூட்டி இந்த நாடு அதல பாதாளத்துக்குச்சென்று குட்டிச்சுவராகி மிகவும் மோசமான நடவடிக்கைக்கு இட்டுச்செல்லும் செயலாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை அமையப்போகின்றது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகத் தெளிவாகவே எடுத்துக்கூறியிருந்தது.
ஏற்கனவே அமெரிக்கா போன்ற நாடுகள் விடுதலைப் புலிகள் மீது தடைவிதித்திருந்தபோதும், சிறீலங்கா போரை ஆரம்பிப்பதற்கு தயார்படுத்திக்கொண்டிருந்த நிலையில் வந்த ஐரோப்பிய ஒன்றியத் தடையே, தனது போரைத் துணிச்சலுடன் முன்னெடுப்பதற்கு சிறீலங்காவிற்கு துணிவைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. தமிழ் மக்கள் மீது ஒரு இன அழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலையில், 2007 ஏப்ரலில் பிரான்ஸ் தொடங்கிவைத்த கைதுகள், சிறீலங்கா தனது இன அழிப்புப் போரை நியாயப்படுத்துவதற்கும், சர்வதேசத்தின் ஆதரவுடன் அதனை வேகமாக முன்னெடுப்பதற்கும் உதவியாக அமைந்தது.
2009ல் புலம்பெயர்ந்த மக்களின் ஓய்வொழிச்சலின்றி நடத்திய போராட்டங்களினாலும், தமிழர் தாயகத்தில் இருந்து வந்துகொண்டிருந்த அழிவுகளின் காட்சிகளினாலும் போரின் உண்மைத் தன்மையை உணர்ந்துகொண்டு, அதனைத் தடுத்து நிறுத்த பிரான்ஸ், பிரித்தானியாவுடன் இணைந்து முயன்றது. ஆனாலும், அது அவர்களின் கைகளுக்குள் அகப்படாத, தடுத்து நிறுத்த முடியாத ஒரு உச்ச இன அழிப்புப் போராக மாற்றம்கண்டிருந்தது.
எனினும், மேற்குலகம் உட்படப் பல நாடுகள் தங்களுக்குள் இருந்த பகையையும் மறந்து ஒன்றிணைந்து பக்கபலமாக நின்றதே சிறீலங்காவின் தமிழின அழிப்புப் போரை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. விடுதலைப் புலிகள் பொது மக்களைக் கொல்கின்றார்கள், சிறுவர்களைப் படையில் சேர்க்கின்றார்கள் போன்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியே பயங்கரவாத முத்திரை குத்தி சிங்களப் பேரினவாதத்திற்கு துணை நின்றது மேற்குலகம்.
ஆனால் அதே மேற்குலகம்தான் இன்று சிரியாவில், ஆசாத் ஆட்சியை அகற்றுவதற்காக அரச படையினருக்கு எதிராகப் போராடும் எதிரணிப் போராளிகளுக்கு பக்க பலமாக இருக்கின்றது. மேற்குலகத்தின் இந்த முரண்போக்கு தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையே கொடுக்கின்றது. விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விட அதிகமாக இன்று ஆசாத் படையினருக்கு எதிராகப் போராடும் போராளிகள் மீது சுமத்தப்படுகின்றது.
சிரிய எதிரணியினர் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாகவும், மனித உரிமை மீறல்களை மிக அதிகளவில் மீறுவதாகவும் ஆதாரங்கள் ஏராளமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிறுவர்கள் அங்கு ஆயுதம் தாங்கிப் போராடுவதுடன், ஆயுதங்களை சிறுவர்கள் வீதிகளில் வைத்து விற்கின்ற காட்சிகளும் வெளிவருகின்றன. இதனைவிட தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பாவிப்பதாகவும், ஆசாத்திற்கு ஆதாரவான பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதாக எதிரணியின் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அவ்வாறு இருந்தும் அந்த எதிரணியினருக்கு ஆயுத உதவிகளையும், ஆதரவையும் வழங்குவதற்கு இந்த மேற்குலகம் முடிவெடுத்திருக்கின்றது. இந்த உலகம் நீதியின் பக்கம் இல்லை என்பதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டாக சிறீலங்காவும் சிரியாவும் விளங்குகின்றன.
எனவே, “இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மனித உரிமை, மக்கள் உரிமை என்ற தார்மீக அறத்திலும் பார்க்க பொருளாதார - வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கமைப்பை நிர்ணயிக்கின்றன...”
“எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது எமது கையில், எமது பலத்தில், எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. நாம் வலிமை பெற்றவர்களாக இருக்கவேண்டும். தளராத உறுதி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.”
என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமான பார்வை தமிழர்களுக்குச் சொல்லி நிற்கும் செய்தி ஒன்றுதான். எமது விடுதலைக்காக நாம்தான் போராடவேண்டும் என்பதுதான் அது.

நன்றி: ஈழமுரசு

0 கருத்துக்கள் :