உத்தரகண்ட் பேரழிவுக்கு அரசு அதிகாரிகளே காரணம் : திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

30.6.13


பயங்கர மழை பெய்ய போகிறது. அடுத்த 72 மணி நேரத்தில் மேக வெடிப்பு நிகழ போகிறது. அசம்பாவிதம் நடக்கலாம். அதற்குள் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுங்கள். புனித யாத்திரையை தள்ளி போடுங்கள் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

 ஆனால், வழக்கமான வானிலை அறிக்கைÕ என்று அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே, உத்தரகண்ட் மாநிலத்தில் பேரழிவு நிகழ்ந்ததற்கு காரணம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 15ம் தேதி கடும் மழை பெய்தது. அடுத்தடுத்த நாட்கள் மேகங்கள் வெடித்து வானமே கிழிந்தது போல் மழை கொட்டியது.

 இதில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு. சாலைகள் துண்டிக்கப்பட்டன. தகவல் தொடர்பு சாதனங்கள் இயங்கவில்லை. ஆங்காங்கே புனித யாத்திரை சென்ற பக்தர்கள், உள்ளூர் மக்கள் என்று ஆயிரக்கணக்கானோரை வெள்ளம் சுருட்டி சென்றது. பல கட்டிடங்களை தரைமட்டமாக்கி வெள்ளம் அடித்து சென்றது.

இவ்வளவு பேரழிவு நடப்பதற்கு முன்பே 14ம் தேதி உத்தரகண்ட் வானிலை மையம் அரசை கடுமையாக எச்சரித்துள்ளது. ஒரு முறையோடு நிற்காமல் தொடர்ந்து 15, 16, 17ம் தேதிகளில் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. அதில், கடும் மழை பெய்ய போகிறது. அடுத்த 72 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுங்கள். அத்துடன், சார் தாம் (நான்கு கோயில்கள்) எனப்படும் புனித யாத்திரையை தள்ளி போடுங்கள் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

உத்தரகண்ட் தலைமை செயலர், மாவட்ட கலெக்டர்கள், இயற்கை பேரிடர் மேலாண்மை துறை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை, சார்தாம் யாத்திரை உயர்அதிகாரிகள் என பல துறையினருக்கும் வானிலை மையம் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. ஆனால், இத்தனை துறையினரும் வழக்கமான வானிலை அறிக்கைதான் என்று அலட்சியமாக இருந்துள்ளனர்.

 வானிலை மையத்தின் எச்சரிக்கையை சீரியசாக எடுத்து கொண்டு அதிகாரிகள் செயல்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். பேரழிவில் இருந்து மாநிலத்தை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுகின்றனர். மேலும், மாநில அரசு அதிகாரிகளை மட்டுமன்றி, டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய தலைமையிடத்துக்கும், உத்தரகண்ட் மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது.

 அந்த தகவலை அவர்களும் கண்டுகொள்ளவில்லை. மாநிலத்தில் இருந்து எச்சரிக்கை வந்தவுடன் அவர்கள் மத்திய, மாநில அரசுகளை அலர்ட் செய்திருக்க வேண்டும்.

அதுவும் நடக்கவில்லை. ஒட்டுமொத்த அதிகாரிகளும் வழக்கமான வானிலை அறிக்கைÕ என்று இருந்துவிட்டதால் தடுக்கப்பட்டிருக்க வேண்டிய பேரழிவு நடந்து விட்டது.இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர், எத்தனை பேர் காணவில்லை என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அரசு சொல்லும் கணக்கும் சரியில்லை என்று பக்தர்கள், பொதுமக்கள் குமுறுகின்றனர்.

0 கருத்துக்கள் :