விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

4.6.13

விடுதலைப்புலிகளின் 120 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் என்பது வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குரியது என்பதை அங்கீகரித்துக்கொண்டு அதனை குறிப்பிட்ட மாகாணங்களின் அபிவிருத்திக்கு, வீடமைப்புக்கு பயன்படுத்துவதே அரச நீதியாகும்.
மகா பாரதத்திலே பஞ்சவர்களில் மூத்தவரான தருமர் கூடியுள்ள சபையில் ஒரு வழக்கு வருகிறது.
காணி ஒன்றைக் கொள்வனவு செய்த ஒருவர் அதனைப் பண்படுத்தும் போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப்புதையல் ஒன்றை கண்டெடுக்கின்றார்.
கண்டெடுத்த தங்கப்புதையல் நிலத்தை விற்றவருக்கே சொந்தம் என்று கருதி அதனை அவரிடம் எடுத்துச் செல்கின்றார்.
ஆனால், அதனைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த ஆள் மறுப்புத் தெரிவித்துவிட்டார்.
நான் எனது காணியை விற்பனை செய்த போதே, அதில் இருக்கக் கூடிய அனைத்தையும் விற்றுவிட்டேன்.
ஆகையால் புதையல் காணியை விற்ற எனக்கல்ல. அஃது காணியை கொள்வனவு செய்த தங்களுக்கே சொந்தம் என்று கூறிவிட்டார்.
இவ் விவகாரமே தருமர் வீற்றிருக்கும் சபைக்கு வருகிறது.
வழக்கை விசாரித்த தருமருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இதுவன்றோ நீதி. இதுவன்றோ தருமம் என்று வியந்துரைத்த தருமர் இருவரையும் பார்த்து நாளைய தினம் வாருங்கள் தீர்ப்புச் சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தார்.
மறுநாள் தருமர் சபை கூடுகிறது. புதையல் விவகாரத்துடன் தொடர்புபட்ட இருவரும் வந்திருந்தார்கள். ஆனால், அவர்களின் வாதம் இப்போது வேறுபட்டிருந்தது.
புதையலைக் கண்டெடுத்தவர் அது தனக்கே உரியதென்றார்.
காணியை விற்றவரோ புதையல் தன்னுடையது என்று வாதிட்டார்.
இருவரின் வாதத்தையும் கேட்ட தருமர் திகைத்துப்போனார்.
இஃது என்ன ஆச்சரியம்!  நேற்றைய தினம் தங்கப் புதையலை பெற்றுக்கொள்ள மறுத்தவர்கள் இன்று அதனைக் கொடுக்க மறுக்கின்றார்கள்.
ஒரு நாள் இடைவெளியில் என்ன நடந்தாயிற்று? என்று தருமர் தலையை பிய்த்துக் கொள்ள, சபையில் இருந்த, பாண்டவர்களில் சோதிடம் தெரிந்த நகுலன், அண்ணா இன்று கலியுகம் பிறந்துவிட்டது என்றான்?
கலியுகத்தின் பிறப்பு எத்தன்மையது என்பதை புரிந்து கொண்ட துபாவரயுக புருஷ­ர்கள் பூலோகவாழ்வை முடிவுறுத்தி பயணிக்கின்றனர்.
காலம் கலியுகம். அதர்மத்தின் தாண்டவம் உச்சமடையும் காலம். ஆயினும் கீதோபதேசத்தின் பிரகாரம் தருமத்தைக் காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் அவ்வப்போது அவதாரம் எடுக்கும் பரம்பொருள் கலியுகத்தில் காலம் கடத்துவது எதற்கானது என்று தெரியவில்லை.
எதுவாயினும் விடுதலைப்புலிகளின் 120 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் என்பது வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு சேர வேண்டும் என்பது அறத்தின் பாற்பட்ட தீர்ப்பு.
புலிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்குவது என்பதற்கப்பால், குறிப்பிட்ட சொத்து வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குரியது என்பதை அங்கீகரித்துக் கொண்டு அதனை குறிப்பிட்ட மாகாணங்களின் அபிவிருத்திக்கு, வீடமைப்புக்கு பயன்படுத்துவதே அரச நீதியாகும்.
கலியுகத்தில் இது நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 கருத்துக்கள் :