தமிழின உணர்வாளர் இயக்குனர் மணிவண்ணன் காலமானார்

15.6.13

ஈழ உணர்வாளர்களில் மிக முக்கியமானவரும் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரும் தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் தனது குரலை உரக்க ஒலிக்க செய்தவர் மணிவண்ணன் தனது 59 ஆவது வயதில் மரணம் அடைந்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 59. இவர் 1979-ம் ஆண்டு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆனார். இவரது முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. நூறாவது நாள், ஜல்லிக்கட்டு உள்ளபட 50 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அமைதிப்படை மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ்திரையுலகின் முக்கிய இயக்குனர் என்ற அந்தஸ்து இவருக்கு பெற்றுக்கொடுத்தது.படையப்பா, முதல்வன், காதலுக்கு மரியாதை, ரெட் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் வெளியான ராஜராஜ சோழன் எம்.ஏ. என்ற படம் இவரது 50-வது படம். இதுவே கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டது. “நான் இறந்தாலும் கவலை இல்லை ஏனெனில் நான் எனது தலைவரை சந்தித்து விட்டேன் ” என்று பெருமிதமாக பேசி “நான் இறந்தால் எனக்கு புலிக்கொடி” போர்த்துங்கள் என்று உரக்க முழங்கிய அந்த குரல் இன்று அடங்கி போய் விட்டது. இந்த இழப்பு திரை உலகிற்கு மட்டுமல்ல ஈழத்துக்கே பேரிழப்பு.நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்
 இதுவரை ஈழத் தமிழருக்காக குரல்கொடுத்து வந்த தலைமகனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். அன்னாரது குடும்பத்தினருக்கு ஈழத்தமிழினம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
0 கருத்துக்கள் :