வரலாறு காத்துக் கொண்டிருக்கிறது. ச.ச.முத்து

18.6.13

சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதான முன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது. இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல. பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம். அதிர்ச்சி. எல்லாமே.
ஆனாலும் அவர்களுக்கு ஒருவிதத்தில் நன்றி சொல்லவும் வேண்டும். நாம் எங்கு நிற்கின்றோம். என்பதை எமக்கு வெகுவாக மிகவும் ஆணித்தரமாக புரிய வைத்ததற்காக. அவர்கள்தான் அடிக்கடி எமக்கு நினைவு படுத்திக்கொண்டே இருந்தாலும் நாமும்தான் அதனை உடனேயே கொந்தளித்து பின் மறந்து படுத்து கிடக்கின்றோம்.
நேற்றைய லண்டனில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதனில் மிகமிக முக்கியமான காரணம் அந்த போராட்டத்துக்கு அதிக அளவிலான தமிழ் மக்கள் போகாமல் விட்டதே என்பதே ஆகும். முன்னிலும் மிக வேகமாக இனச்சுத்திகரிப்பும், நிலஆக்கிரமிப்பும், படுகொலைகளும், மோசமாக தொடர்துகொண்டே இருக்கின்றது. தமிழினம் தொடர்ந்து முன்பைவிட மிக ஆக்ரோசமாக திரளாக போராடியே தீர வேண்டிய வரலாற்று கட்டாயம் எம் மீது இருக்கின்றது.
ஆயினும் வர வர போராட்டத்துக்கு மக்கள் குறைந்து கொண்டே போவதற்கு எமக்குள் உள்ள முரண்பாடுகள் முக்கிய காரணியாக இருந்தாலும் அதனைவிட மிகமுக்கியமான உளவியல் தாக்கமாக இன்னும் ஒன்று இருக்கின்றது. இது மிகமிக முக்கியமானது. உரிமைகள் அனைத்தும் இழந்து, இந்த நூற்றாண்டின் மிக மோசமான இன அழிப்புக்கு உள்ளான ஒரு மக்கள் இனமாகிய நாம் போராடுவதால், அதிலும் ஒன்றிணைந்து, தொடர்ந்து தளாவின்றி போராடுவதால் மட்டுமே எமது உரிமைகளை பெறமுடியும் என்பதே யதார்த்தம்.
உலகம் முழுதும் விடுதலைக்காக போராடிய மக்களின் வரலாறும் போராடிக்கொண்டிருக்கின்ற மக்களின் நிகழ்காலமும் எமக்கு அழுத்தமாக சொல்லி நிற்கும் பாடமும் இதுதான். எமது மண்ணில் மானுடம் காணாத அற்புதமான அர்ப்பணிப்புகளையும், ஈகங்களையும், வீரத்தையும் நிகழ்த்திய போராளிகள், மாவீரர்கள் கற்றுத்தந்திருக்கும் பாடமும் இதுதான்.
எந்தவொரு சிங்கள மனிதனாலும் எந்தக் காலத்திலும் அழித்தெறிந்துவிட முடியாத எமது மாவீரர்கள் ஒவ்வொருவரினதும் உறுதிநிறைந்த சரித்திரங்கள் ஒவ்வொன்றும் எமக்கு தினமும் சொல்லி தந்து கொண்டிருக்கும் வழிகாட்டுதல் இதுவேதான்.
இவை எல்லாவற்றையும்விட உறுதியுடன் தொடர்ந்து போரடினால் மட்டுமே சிங்களத்துக்கு புரியும் என்று சொல்லிவைத்த அந்த அதிமானுடன் தேசியதலைவரின் வரலாறு எவ்வளவு அழகாகவும் ஆழமாகவும் போராட்டத்தின் தேவையை சொல்லி சொல்லி இருக்கிறது. அது எத்தகைய போராட்டமாகவும் இருக்கலாம். எமது நிலைமைகளுக்கேற்ப, வாழும் சூழலுக்கேற்ப, எதிரியின் நகர்வுகளுக்கேற்ப, எமது போராட்ட வடிவங்கங்களை வேண்டுமானால் மாற்றலாம். ஆனால் போரடிக்கொண்டே இருந்தாக வேண்டுமல்லவா..?
இந்த போராட்ட சிந்தனை மீது எதிரியும், எதிரிக்கு எம்மீது இன அழிப்பை நிகழ்த்துவதற்கு துணைநின்ற சக்திகளும் தடுமாற்றங்களை ஏற்படுத்துவதில் ஒரு பெரிய வெற்றியினை கடந்த நான்கு வருடங்களில் அடைந்திருக்கிறார்கள் என்பதே வருத்தமான உண்மை ஆகும்.
எல்லோரும் சும்மா இருங்கள். சர்வதேசம் எமக்கு எல்லாம் பெற்றுத்தரும். தடித்த புத்தகங்களில் உறங்கிக் கிடக்கும் மனித உரிமை சட்டங்களின் சில கோவைகளை வகைப்படுத்தி யாரோ ஏதோ ஒரு தீர்மானத்தை எமக்காக நிறைவேற்றுவார்கள். அல்லது, 13ம் திருத்தமோ அதற்கு மேலோ இல்லை மிக கீழோ ஒரு தீர்வை பாரதமாதா பெற்று தரும்.
சீனாவுடன் சிங்களம் நெருங்க நெருங்க சர்வதேசம் எமது உரிமைகளையோ, அல்லது சிங்களத்தின் மீதான இன அழிப்பு குற்றச்சாட்டையோ தீவிரமாக்கும். அதன் மூலமாக எமக்கு ஏதேனும் கிடைக்கும். அதுவும் இல்லை என்றால் சிங்களதேசத்தில் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ராஜாதீராஜ மகிந்தரின் சிம்மாசனத்தில் யாரோ ஒரு புஞ்சிபண்டாவோ, வீரவன்சவோ உட்கார்ந்து விட்டால் எமது நூற்றாண்டுத் துன்பமும் ஓடி ஒழிந்து நாம் விலங்குகள் அறுபட்ட மனித இனமாகி விடுவொம் என்ற கருத்துகள் இடைவெளியின்றி தொடர்ந்து எமது மக்கள் மனங்களுக்குள் புகுத்தப்பட்டு வந்துகொண்டிருந்ததன் பலன்தான் போராட்டத்திலும் போராடுவதன் தேவை மீதான அவசியத்திலும் மக்களுக்கு ஆர்வம் குறைந்து மந்தமாகியதன் காரணம்.
மிகநீண்ட பலநூறு ஆண்டுகளாக காலனி ஆட்சிக்குள் அடிமைப்பட்டு அடிமைத்தனத்தின் அனைத்தையும் கவர்ச்சிகரமானதாகவும், இன்பமாகவும் கருதி இருந்த இந்த மக்கள்திரள் பிரபாகரன் என்ற அந்த ஒற்றை மனிதனின் வரவுக்கு பின்னரே போராடுவதிலும் போராட்டத்தின் உன்னதத்திலும் எழுச்சி கொண்டிருந்தனர்.
அதிலும் 2009 மே மாதத்து பின்னர் அந்த குரலும் மௌனமாகியதன் பின் நாம் அனைவரும் எமது முன்னோர் எப்படி காலனி ஆட்சிக்கும், சிங்களத்துக்கும் எதிராக போராடாமல் ஒருவிதமான நெகிழ்வுத்தனமையுடன் வாழ்ந்தார்களோ அத்தகைய நிலைக்குள் வாழ தலைப்பட்டு விட்டோம். அப்படி வாழ்வதே ஒருவிதமான ராஜதந்திரம் என்று கருதவும் முடிவெடுத்துவிட்டோம்.
இந்த நிலையின் மீதுதான் சிங்களத்தின் இன அழிப்பு முகத்தை உலகுக்கு காட்டுவதற்காக லண்டனில் நடைபெற்ற போராட்டத்தின்போது சிங்கள இனவாதிகள் நடாத்திய தாக்குதல் ஒரு அதிர்வை ஏற்படுத்தி விட்டுச்சென்றிருக்கிறது. ஒரு உலுக்கு உலுக்கி எம்மை நீள் உறக்கத்தில் இருந்து விழிக்கச்செய்துள்ளது.
நாம் போராடாமல் உறங்கி கிடந்தால் காலச்சிலந்திகூட நம்மீது வலைபின்னி போய்விடும். மூச்சுவிட மறந்தால் வரலாற்று கல்லறைக்குள் தமிழினம் புதைக்கப்பட்டுவிடும். போராட்டத்துக்காக போராட்டம் என்றிருக்காமல் சிங்கள பேரினவாதத்தை சர்வதேச அரங்கில் கூண்டில் நிறுத்தவும், தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இன்னும் வலுப்பெறச்செய்வதற்காவும் போராட்டங்கள் எழ வேண்டும்.
ஒரு மகிந்த வந்துவிட்டால் ஆயிரம் ஆயிரமாக ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவிக்கும் நாம், மகிந்தவின் சிந்தனைகளுக்கு சற்றும் குறைவில்லாத பேரினச் சிந்தனைகளை தாங்கி நிற்கும் சிங்கள தேசத்தின் அனைத்து வளங்களுக்கு எதிராகவும் போராட வேண்டும். அத்துடன் அனைவரும் ஒன்றுகூடியே, ஒன்றாக சேர்ந்தே ஆகவேண்டிய ஒரு வரலாற்றுக் கட்டாயத்தையும் சிங்களம் எம்மீது சுமத்தி உள்ளது. நாம் ஒன்று சேர்நதே ஆக வேண்டும். ஒன்றாக போராட்டத்தில் இணைந்தே ஆகவேண்டும்.
வரலாறு எம் முடிவுக்காக காத்திருக்கிறது.
வரலாறு என்பது வேறொன்றும் அல்ல. மாவீரர்களின் சரித்திரம்தான்.
வரலாறு என்பது வேறொன்றும் அல்ல.
உன்னதமான நேர்மையுடனும் சத்தியமான உறுதியுடனும், தளர்வே அறியாத பயணத்துடனும், மலையென எழுந்த வீரத்துடனும் எம்மை வழிநடாத்தும் தேசியதலைவரின் சரித்திரமே வரலாறு.
அந்த வரலாற்றின்மீது சத்தியமாக நாம் ஒன்றிணைந்தே ஆகவேண்டும்.
வீழ்வது பிழையே அல்ல. வீழ்ந்து கிடப்பதுதான் வரலாற்று தவறு.
தவறுகளை திருத்துவோம்.
எழுவோம்.
போராடுவதால் மட்டுமே விடுதலை கிடைக்கும்.
சும்மா கிடந்தால் வெறும் தீர்வுகளும், முகத்தில் துப்பப்படும் உமிழ்நீர்களுமே கிடைக்கும்.
நேற்று அந்தபோராட்டத்தில் என் தமிழ் உறவு மீது துப்பப்பட்ட உமிழ்நீர் எம் எல்லோர் மீதும் வரலாறு காறி உமிழ்ந்ததாகவே கொள்ளவேண்டும்.
துடைத்துக்கொண்டு தூங்கி கிடக்கப்போகின்றோமோ துணிவுடன் எழப்போகின்றோமா?
எதுவும் எம் கைகளில்தான்.
(மைதானத்துக்கு வெளியே தமிழர்களை இனரீதியாக தரக்குறைவாக பேசி சிங்களம் உமிழ்நீர் சொரியும்போது சிங்கள தேசத்தின் கிரிக்கெட் அணியின் சீருடையை அணிந்து கொண்டு மைதானத்துள் சென்று ஆட்டம் பார்த்து ரசித்த தமிழர்களின் அடிமைப்புத்தியை என்ன சொல்ல முடியும். தூ..)

0 கருத்துக்கள் :