ஐ.நா தூதுவராகிறார் சமந்தா பவர் சிறிலங்காவுக்கு தலையிடி?

6.6.13

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இனப்படுகொலைகள் விவகாரங்கள் தொடர்பான நிபுணரான சமந்தா பவர் நியமிக்கப்படவுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்தப் பதவியை வகிக்கும், சுசன் ரைஸ் அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதற்கு  முன்னாள் அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஹிலாரி கிளின்டனுடன் சமந்தா பவரும், சுசன் ரைசும் தீவிரமாக இணைந்து செயற்பட்டவர்களாவர்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானங்களில் இவர்கள் இருவரினதும் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது.

இந்தநிலையிலேயே சமந்தா பவர், ஐ.நாவுக்கான தூதுவராகவும், சுசன் ரைஸ் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலாசகராகவும் பதவி உயர்த்தப்படவுள்ளனர்.

சமந்தா பவர் ஒரு முன்னாள் ஊடகவியலாளராவார்.

பொஸ்னிய இனப்படுகொலைகளைத் தடுக்க அமெரிக்கா தவறியதாக குற்றம்சாட்டும் A Problem from Hell: America and the Age of Genocide என்ற இவரது நூலுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது.

பின்னர் இவர் ஹவார்ட் பல்கலைக்கழக பேராசிரியராகவும், பணியாற்றியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சமந்தா பவர், அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் ஒருவராக இருந்து வருகிறார்.

இவர் ஒபாமாவின் நெருங்கிய- நீண்டகால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐ.நாவுக்கான தூதுவராக சமந்தா பவர் நியமிக்கப்படவுள்ள நிலையில் சிரியா உள்ளிட்ட விவகாரங்களிலும், மனிதஉரிமை விவகாரங்களிலும் அமெரிக்காவின் நிலைப்பாடு இறுக்கமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :