இறுதி மூச்சு வரை தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்தவர் மணிவண்ணன்!

15.6.13

திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் மறைவையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் திடீர் மாரடைப்புக்கு ஆளாகி காலமாகிவிட்டார் எனும் செய்தி தாங்கிக்கொள்ள இயலாத அளவில் வேதனை அளிக்கிறது.  இடதுசாரிக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்காகச் சிந்திப்பதும் செயல்படுவதுமாக இருந்த மணிவண்ணன் திரைப்படத் துறையில் அதே கருத்துக்களைப் பரப்பினார். 

வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் திரைப்படத் துறையில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று மகத்தான பங்களிப்பைச் செய்தார். பொதுமக்களின் பேராதரவையும் நன்மதிப்பையும் பெற்றார். அதேவேளையில் தமிழ் மொழி, தமிழின நலன்களுக்காக தயக்கமின்றி அச்சமின்றி குரல்கொடுக்கும் வல்லவராகவும் விளங்கினார். குறிப்பாக தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலுக்காகவும் தீவிரமாகக் களமிறங்கிப் பணியாற்றினார்.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதிலும், தமிழீழத்தை ஆதரிப்பதிலும் முன்னணியிலிருந்தார்.  தம்முடைய இறுதி மூச்சு வரையில் ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்தார். உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவராக விளங்கினார். 

அவருடைய இழப்பு திரைப்படத் துறைக்கு மட்டுமின்றி தமிழ்த் தேசிய அரசியலுக்கும் மாபெரும் இழப்பாகும்.  அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் திரைப்படத் துறையினருக்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :