பிரபாகரன் கனவு நனவாகும்! தனிநாடொன்று உருவாவது உறுதி

17.6.13

என்றுமில்லாதவாறு இலங்கையில் இனவாதமும் மதவாதமும் இப்போது தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. இந்த நிலை தொடருமாயின் இன்னும் இரு தசாப்தங்களுக்குள் உலக நாடுகளின் தலையீட்டால் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தனிநாடொன்று உருவாகும் என்று பொது எதிர்க்கட்சிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க பணிமனையில் நேற்று இடம் பெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே மௌபிம மக்கள் கட்சியின் உப செயலாளர் சமரவீர வீரவன்னி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதே நாட்டில் இன, மத வாதங்கள் அதிகமாகத் தலை தூக்கியுள்ளன. இதனால்தான் உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாட்டிலுள்ள இரு இனங்களுக்கிடையில் பிரச்சினை தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்குமானால், அந்த நாடு உலக நாடுகளின் தலையீட்டால் இரண்டாகப் பிரிந்து தனிநாடு உருவாவதை கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். இலங்கையும் அதுபோலவே இரண்டாகப் பிரிக்கப்படும் அபாயத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரபாகரனின் கனவை நனவாக்க அரசு முயற்சி
புலிகளின் தலைவர் பிரபாகரன் போர் மூலம் இலங்கையை இரண்டாக்க கண்ட கனவையே அரசு போர் புரியாமலேயே நனவாக்க முனைகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் ஐ.தே.கவின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பெரேரா.
அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கவைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே உண்டு என்று தெரிவித்த அவர் அரசிலுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வடக்குத் தேர்தலுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் தமது முடிவைத் தெளிவாக அறிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் இனவாதம் தோன்றி பேராபத்து ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், பிரபாகரன் போர் மூலம் நாட்டை பிளவு படுத்தலாம் என்று கண்ட கனவை இன்று போரின்றி தாமாகவே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம், வடக்குத் தேர்தல் ஆகியவை குறித்து ஐ.நா. சபைக்கும், சர்வதேசத்துக்கும் மற்றும் இந்தியத் தலைவர்களுக்கும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துக்கள் :