சாத்தான் வேதம் ஓதினால், சந்தேகப்பட வேண்டாமா?

12.6.13

சாத்தான் வேதம் ஓதினால், சந்தேகப்பட வேண்டாமா?’ என்ற தலைப்பில் ஏகாதிபத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புகளை, குறிப்பாக அமெரிக்காவின் அடாவடித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற கட்டுரை ஒன்று தீக்கதிரில் என்னால் எழுதப்பட்டது. அந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு, 'இலங்கைத் தமிழர்களின் நிலைகுறித்த கரிசனம் இல்லையே?’ என்று கேள்வி எழுப்புகிற கட்டுரையாளர், மார்க்சிஸ்ட் கட்சிக்குத் தூரப் பார்வைதான் உண்டு, கிட்டப் பார்வை இல்லை’ என்று நையாண்டி செய்கிறார்.

 இலங்கைத் தமிழர்கள் மீது கரிசனம் இருப்பதால்தான், அந்தக் கட்டுரையே எழுதப்பட்டது. இலங்கை இனப் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா உதவும் என்ற தவறான புரிதல் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் இலங்கைத் தமிழர்களுக்கான இயக்கங்களுக்கு இருக்கிறது. இப்படி நினைப்பவர்களிடம், 'அமெரிக்காவின் உதவியை நாடாதீர்கள், அது குரங்கு அப்பத்தைப் பிரித்த கதையாக மாறிவிடும்’ என்று கூறுவதற்காகத்தான் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்ற நாடுகளில் செய்திருக்கிற அக்கிரமங்களைப் பட்டியல் போட்டு, இலங்கைத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பை அமெரிக்காவிடம் விட்டுவிடாதீர்கள் என்று எச்சரிப்பதே அந்தக் கட்டுரையின் நோக்கம். தூரத்தில் இருந்தாலும் கிட்டத்தில் இருந்தாலும் அவதிக்குள்ளாகும் மக்களின் நலனைப் பார்க்க, மார்க்சிஸ்ட்கள் தவறுவதில்லை. ஆனால் இங்கு சிலருக்கு வரலாற்றுப் பார்வையும் இல்லை, தொலைநோக்குப் பார்வையும் இல்லை, கிட்டப் பார்வையும் கிட்டத்தட்ட சரியாக இல்லை என்பது வேதனைக்குரியது.

கட்டுரையாளர் லெனினைப் படித்தார் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி. மார்க்சிஸ்ட்கள் லெனினைப் படிக்கவும் மறுக்கவில்லை, படித்ததையும் மறக்கவில்லை. கட்சியின் நகல் திட்டம், நாட்டிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுய நிர்ணய உரிமையை உறுதிசெய்கிறது. இதை உறுதிசெய்கிறோம் என்பதாலேயே, சுய நிர்ணய உரிமை கோரி நடக்கும் எல்லாப் போராட்டங்​களையும் ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அரிதான, விதிவிலக்கான சந்தர்ப்பத்தில்தான், ஒரு புதிய வர்க்க அரசு உருவாவதை நாம் ஆதரிக்க முடியும்’ என்று தோழர் லெனின் சொல்லியிருக்கிறார்.

மேலும் 'பிரிந்து போகும் உரிமையை அங்கீகரிக்கிறோம் என்பதால், பிரிவினைக்கு எதிராக​வும், முதலாளித்துவத் தேசியத்துக்கு எதிராகவும் பிரசாரம் மற்றும் கிளர்ச்சி செய்யக் கூடாது என்பது பொருளல்ல’ என்று சொன்னவரும் அவரே. எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், எவ்வளவு தூய்மையானதாக இருந்தாலும், எவ்​வளவு நாகரிகமானதாக இருந்தாலும், மார்க்சியம் தேசியவாதத்துடன் சமரசம் செய்துகொள்ளாது. அனைத்து வடிவத் தேசியவாதங்களுக்கும் மேலாக, மார்க்சியம் சர்வ தேசியவாதத்தைத்தான் வைக்கிறது.’ - இந்த வாதங்களையும் லெனின் தான் எழுதியிருக்கிறார்.

வெவ்வேறு சூழலில் எழுதியிருக்கிறார். ஆகவேதான், மார்க்சியம் வறட்டு சூத்திரம் அல்ல, குறிப்பிட்ட சூழலில் குறிப்பாகப் பொருத்திப் பார்க்கும் அறிவியல் பார்வை என்கிறோம். இதை சிறுமைப்படுத்தி எல்லாச் சூழலுக்கும் பொருந்தாத தத்துவத்தை வைத்துக்கொண்டு ஏன் கட்சி நடத்த வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக எழுப்பப்படும் கேள்வியில் எந்த நியாயமும் இல்லை. தத்துவமே இல்லாமல் வெற்று கோஷங்களை எழுப்புபவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை, விலாசம் மாறிக் கேட்டுவிட்டார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் சிங்கள மக்களும் ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொன்னால்... அது தமிழர்கள் மீதான படுகொலைகளின் வீரியத்தைக் குறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் சொல்லப்படுவதாகக் கட்டுரையாளர் வாதிக்கிறார். இது முற்றிலும் தவறான வாதம். இலங்கை அரசின் வேறுபட்ட ஒடுக்குமுறைகளைப் புரிந்துகொண்டு வியூகம் வகுக்க வேண்டும் என்பதற்காகவே, இலங்கை அரசால் சிங்கள மக்களும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு நாட்டில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒடுக்குமுறையாளர்களை எதிர்க்க வேண்டும் என்று கூறுவது தமிழர் எதிர்ப்புக் கருத்தா?

  ஜேவிபியின் பல்லாயிரக்​கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டது கட்டுரையாளர் சொல்வதுபோல் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைதானா? தமது வர்க்க ஆட்சியைப் பாதுகாக்க அந்த அரசு எடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைதானே அது? ஒரு வாதத்துக்கு, அது சட்டம் ஒழுங்குப் பிரச்சினைதான் என்றே வைத்துக்கொள்வோம். மற்றபடி சாமானிய ஏழை உழைப்பாளி மக்களின் வாழ்வுரிமை மீதான தாக்குதல்கள் இலங்கையில் நடக்கவே இல்லையா? அப்படியானால் இலங்கை அரசுக்கு வர்க்க ஒடுக்குமுறையே இல்லை என்று சொல்ல வருகிறாரா கட்டுரையாளர்? மூச்சுக்கு 300 முறை மார்க்சிய ஆசான்களை மேற்கோள் காட்டும் கட்டுரையாளர், மார்க்சியத்தின் இந்தப் பால பாடத்தையே மறுதலிப்பது ஆச்சரியமாக உள்ளது.

ஒடுக்கும் நாட்டின் தொழிலாளர்கள், ஒடுக்கப்படும் நாட்டின் தொழிலாளர்கள் பற்றி லெனின் கூறியிருப்பது பொருத்தமற்று வாதத்தில் நுழைக்கப்படுகிறது. ஏகாதிபத்திய நாட்டில் உள்ள தொழிலாளர்கள் குறித்தும், அது ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் அல்லது தேசிய இனங்களின் தொழிலாளிகள் குறித்தும் அவர் சொன்னது இலங்கைக்கு எப்படிப் பொருந்தும்? சிங்கள இனத் தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில், தமிழ் மக்களின் சம உரிமை மறுக்கப்படுவதற்கு எதிரான உணர்வு கூடுதலாக உருவாக வேண்டும் என்று சொன்னால், புரிந்துகொள்ள முடியும். அதற்குப் பதிலாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் வீண் முயற்சி எதற்கு?

0 கருத்துக்கள் :