வன்னியில் விடுதலைப்புலிகளின் ‘நிழல் அரசு’ – விளக்கும் நூல்

5.6.13

சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் தாய்நாடான வடக்கு கிழக்கின் ஒருபகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இந்த நூல் விளக்குகிறது.
« ஒரு நாடானது பௌதீக ரீதியான அழிவுகள், ஆட்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட அழிவுகள், மக்கள் ஒட்டுமொத்தமாக அழிவுகளைச் சந்தித்தமை, படுகொலைகள் என எல்லாவிதமான அழிவுகளையும் நேரில் பார்க்காதவர்களால் இதனைக் கற்பனை செய்து கொள்ள முடியுமா? இவ்வாறான ஒட்டுமொத்த அழிவுகளையும் ஒரே நேரத்தில் ஒரு நாடு பெற்றுக் கொண்டது முன்னைய வரலாற்றில் நடைபெற்றதா? ஏனெனில் எனது நாடானது இவ்வாறான அழிவுகளைச் சந்தித்த போதும், இந்த நாடு தொடர்பாக இந்த நாட்டின் சொந்த மக்களின் மனங்களில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால், இந்த நாடானது பூகோள நாடுகளால் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை »

இந்த நூலானது [A fleeting moment in my country: the last years of the LTTE de-facto state by N. Malathy] அதன் ஆசிரியரான என்.மாலதியினுடைய, சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் அமைந்துள்ள தமிழர்களின் தாய்நாடு தொடர்பாகக் கூறுகிறது.

சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் தாய்நாடான வடக்கு கிழக்கின் ஒருபகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இந்த நூல் விளக்குகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தமது தாய்நாட்டின் ஒருபகுதியை ஆட்சி செய்தார்கள், இவர்களது ஆட்சியின் கீழ் எந்த வகையான சமூகம் கட்டியெழுப்பப்பட்டது என்பது தொடர்பாக இதில் ஆராயப்படுகிறது.

மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட போது, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த சமூகம் எவ்வாறு சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் போது அழிக்கப்பட்டது என்பதை இந்த நூல் விளக்குகிறது.
நியூசிலாந்தில் வாழும் மாலதி, புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின் உறுப்பினராவார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பெப்ரவரி 2002ல் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டது. 2002 பிற்பகுதியில், பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிக்குச் சென்றது போன்று மாலதியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று அங்கு ஆறு வாரங்கள் வரை தங்கியிருந்தார்.

இதன் பின்னர், 2004ல் மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற மாலதி அங்கே மூன்று மாதங்கள் வரை தங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து 2005ல் மீண்டும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற இவர் போர் முடியும் வரை நிரந்தரமாகத் தங்கியிருந்தார். இவர் புலிகளின் தலைநகரமாகக் காணப்பட்ட கிளிநொச்சியில் தங்கியிருந்தார்.

மாலதி, வன்னியில் தங்கியிருந்த காலப்பகுதியில், வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம், பெண்கள் மற்றும் ஆதரவோற்றோர் விடுதி போன்ற பல்வேறு அமைப்புக்களில் பணியாற்றினார்.

போர் தீவிரமடைந்த காலப்பகுதியான 2008ல் ஏனைய மக்களைப் போன்று மாலதியும் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர வேண்டியேற்பட்டது. இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மார்ச் 2009ல் வெளியேறிய மாலதி சில மாதங்கள் வரை சிறிலங்கா அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்ட தடுப்பு முகாமொன்றில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டது.

மாலதி, தான் நேரில் பார்த்த தனது தாய்நாடு சந்தித்த அழிவுகள் தொடர்பாக விளக்கி எழுதியுள்ள நூலில், போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தனது வாழ்வு தொடர்பாக இவர் எழுதிய பகுதி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் பலவற்றை புலிகள் அமைப்பு நடாத்தியிருந்தது. விடுதலைப் புலிகள் அல்லது இதன் தலைமையின் கீழ் செயற்பட்ட பல நிறுவனங்கள், தமிழ் மக்களின் சுகாதாரம், வேலைக்குச் செல்லும் பெற்றோரின் பிள்ளைகளைக் கவனித்தல், தாய் தந்தையரை இழந்த பிள்ளைகளைப் பராமரித்தல், சமூக நலத்திட்டங்கள் எனப் பல்வேறு சேவைகளை வழங்கின. தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கென்று தனியாக நீதிமன்றங்கள் மற்றும் காவற்துறையைக் கொண்டிருந்தன.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள், பின்தங்கிய பிரதேசங்களில் சுகாதார நலச் சேவைகளை விரிவுபடுத்தியிருந்தனர். போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டதன் பின்னர், மக்களின் ஆரோக்கியத்தைப் பேணும் விதமாக சுகாதார சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டன. அழிவடைந்த மருத்துவமனைகள் சில மீளக்கட்டப்பட்டன.

புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மருத்துவத் துறைசார் வல்லுனர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்று இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர். குறிப்பாக போரில் காயமடைந்தவர்களுக்கு செயற்கை முறையான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

போர் நிறுத்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் பொதுத் திணைக்களங்கள் பல தொடர்ந்தும் பணியாற்றின. உள்ளுர் மட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் தலைமை தாங்கப்பட்ட நிறுவனங்களுக்கும் சிறிலங்கா அரசாங்கத் திணைக்களங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பும் ஒத்துழைப்பும் பேணப்பட்டது. குறிப்பாக சுகாதார சேவையில் இவ்வாறான ஒத்துழைப்பு காணப்பட்டது.

கல்வித் துறையைப் பொறுத்தளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தனியான பாடசாலை முறைமையை உருவாக்க முயற்சிக்கவில்லை, ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் கல்வி முறையில் செல்வாக்குச் செலுத்த முயற்சித்தனர். போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட காலப்பகுதியில், ஒவ்வொரு பிள்ளையும் பாடசாலை செல்வதை உறுதிப்படுத்துவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் பொறிமுறை ஒன்றை உருவாக்கியிருந்தனர்.

பாடசாலையை விட்டு விலகியவர்களுக்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தின் உதவியுடன் பல்வேறு கல்வி நிறுவகங்கள் நடாத்தப்பட்டன. இவற்றுள் குறிப்பாக, தகவற் தொழினுட்ப கல்விச் சேவைகளை வழங்குவதற்கான நிறுவகங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நடாத்திவந்தனர். போர் தீவிரம் பெற்றதால் இந்தக் கல்விச் சேவைகள் பாதிப்படைந்தன.

போரின் போது பெற்றோர்களை இழந்த சிறார்கள், மற்றும் போரின் போது காணாமற் போன பெற்றோர்களின் பிள்ளைகள், தமது பிள்ளைகளைப் பராமரிக்க முடியாத பெற்றோர்களின் பிள்ளைகள் என பலதரப்பட்ட ஆதரவற்ற சிறார்களுக்கான சிறுவர் இல்லங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கி நடாத்தினர்.

இவ்வாறான இல்லங்கள் பலவற்றை மாலதி நேரில் சென்று பார்வையிட்டதுடன், இந்த இல்லங்களில் ஒரு இல்லத்தின் மேம்பாட்டுக்காக மாலதி பணியாற்றியிருந்தார். ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகளைப் பராமரித்து அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான பகல் பராமரிப்பு இல்லங்களையும் புலிகள் நிறுவியிருந்தனர். வளங்கள் மிக அரிதாகக் கிடைத்த போதிலும், இவ்வாறான இல்லங்களில் வழங்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு சேவைகள் 'சிறப்பாக' காணப்பட்டதாக மாலதி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

போர் நிறுத்த காலப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழிருந்த மக்களுக்கு பொது போக்குவரத்து சேவைகள், வங்கிச் சேவைகள் மற்றும் ஏனைய பல சேவைகளை வழங்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழிருந்த பெண்கள் பல்வேறு சாதனைகளைப் புரிந்ததாக மாலதி கூறுகிறார். புலிகள் அமைப்பில் பெண் போராளிகளுக்கான இராணுவப் பிரிவுகளும் காணப்பட்டன. இவர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டதுடன், இந்தப் பெண் போராளிகள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தனர்.

« பெண்போராளிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் மூலம் இவர்கள் மேலும் முன்னேற்றமடைந்தனர். தமிழ் சமூகத்தில் இந்தப் பெண்கள் கலாசார ரீதியாக மிக இறுக்கமாக வளர்க்கப்பட்டதுடன் இவர்களின் பங்களிப்பானது முதன்மையாகக் கருதப்படவில்லை. ஆனால் இந்தப் பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்ததன் பின்னர் அங்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் மூலம் இவர்கள் இந்தத் தடைகளை உடைத்தெறிந்து மேலும் மெருகூட்டப்பட்டனர். போர்க் களங்களில் இந்தப் பெண்கள் நேரடியாகப் பங்குபற்றியதால் இவர்கள் ஆண் புலி உறுப்பினர்களாலும், பொது மக்களாலும் வியந்து பார்க்கப்பட்டனர் » என மாலதி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னியில் வாழ்ந்த பெண்கள் வீட்டுக்கு வெளியே பல்வேறு பொது வேலைத்திட்டங்களில் பங்குபற்றியதாக மாலதி கூறுகிறார். சிறிலங்காத் தீவின் ஏனைய இடங்களை விட வன்னியில் பெண்கள் பொது வேலைகளில் பங்குபற்றுவதை அதிகம் காணமுடிந்ததாக மாலதி கூறுகிறார்.

புலிகள் அமைப்பின் சட்ட முறைமையில் பெண்கள் முதன்மைப் பங்கை வகித்திருந்தனர். « புலிகளின் காவற்துறை, புலிகளின் நீதிமன்றங்களில் பணியாற்றிய சட்டவாளர்கள், நீதிபதிகள் போன்றவர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதமானவர்கள் பெண் புலிகளாவார் » என மாலதி குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒரு தனித்தன்மை வாய்ந்த பெண்மைவாதம் நிலவியதாக மாலதி சுட்டிக்காட்டுகிறார். « தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர்கள், புலிகளால் ஆளப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த பெண்கள், சுயதொழில்களில் ஈடுபட்ட பெண்கள் போன்றோர் புலிகள் அமைப்பின் பல நிறுவகங்களின் ஊடாக ஒருவருடன் ஒருவர் தொடர்பைப் பேணிச் செயற்பட்டார்கள். இது அங்கு நிலவிய தனித்துவமான பெண்களின் கலாசாரத்தால் ஏற்பட்டதாகும். இந்தப் பெண்கள் வெளிப்படையாக, அடிக்கடி பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வீட்டு வன்முறைகள் மற்றும் ஏனைய வன்முறைகள் தொடர்பாக கலந்துரையாடினர். இந்தப் பெண்கள் அனைவரும் உதவி தேவைப்படும் பெண்ணுக்காக கைகொடுத்தனர் » என மாலதி தனது நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக மாலதி பல பெண் புலிகளிடம் வினவியிருந்தார். தமது குடும்பத்து உறுப்பினர்களைக் கொலை செய்த சிறிலங்கா இராணுவத்திற்கு தண்டனை கொடுப்பதற்காக இந்தப் பெண்கள் தாம் புலிகளுடன் இணைந்ததாக பொதுவாக கூறினார்கள்.

இது தவிர, சிறிலங்கா இராணுவப் படைகளால் தமக்கெதிராக இழைக்கப்படும் வன்புணர்வுகள் மற்றும் பாலியல் சித்திரவதைகளிலிருந்து தப்பிப்பதற்காக தாம் இவ்வாறு புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டதாக பலர் கூறினர்.

புலிகள் அமைப்புடன் இணைந்து கொள்வதன் மூலம் இந்தப் பெண்கள் இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற நிலையை அடையாது, வலுமிக்கவர்கள் என்ற நிலையை அடைவதை புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதன் மூலம் உணர்ந்தனர். பாரம்பரிய கலாசாரத்திற்கு எதிராக போராடுவதற்கும், வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஏற்படும் வன்முறைகளிலிருந்து விடுபடுவதற்காகவும் பெண்கள் புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டனர்.

சிறிலங்காத் தீவின் ஏனைய இடங்களில் நிலவி வரும் சாதி தொடர்பான மூடநம்பிக்கைகளை விட புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த வன்னியில் சாதிப் பிரச்சினை நிலவியமை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகும் என்பதை மாலதி அவதானித்துள்ளார்.

சிறிலங்காவில் போர் நிறுத்தம் உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது, வன்னியில் ஐ.நா அமைப்புக்கள், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வேறு பல தொண்டர் அமைப்புக்கள் பணியாற்றின.

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் மற்றும் புலிகள் அமைப்பின் சமாதான செயலகம் போன்றவற்றில் மாலதி பணியாற்றிய போது, இவர் இந்த அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்தது. இக்காலப்பகுதியில், புலிகளுக்கு எதிராக இந்த அமைப்புக்கள் அரசியல் ரீதியான சில எதிர்ப்புக்களை முன்வைத்தாலும் கூட, இவர்கள் பல பயனுள்ள பணிகளை ஆற்றியிருந்தன என்பது மாலதியின் வாதமாகும்.

18 வயதிற்குக் குறைந்தவர்களை புலிகள் அமைப்பு ஆட்சேர்ப்பு செய்வதாக கூறி இந்த அமைப்புக்கள் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டன. சிறிலங்கா அரசானது தமிழர்களை அடக்குவதை உணர்ந்த புலிகளின் தலைவர்கள் பலர் தாமாகவே விரும்பி 18 வயதின் முன்னரே புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டனர். இவர்கள் சிறிலங்கா அரசால் அடக்கப்பட்டதே இதற்கான காரணமாகும். எதுஎவ்வாறிருப்பினும், 18 வயதிற்கு கீழே உள்ளவர்களை தமது அமைப்பில் இணைத்துக் கொள்ளமாட்டோம் என பின்னர் புலிகள் அறிவித்திருந்தனர்.

சிறிலங்காவில் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்ற போதும், அவற்றைக் கருத்திலெடுக்காது சிறார்களை ஆட்சேர்ப்புச் செய்வது தொடர்பாக மட்டும் அனைத்துலக அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் முக்கியப்படுத்தியதை மாலதி விமர்சிக்கிறார்.

இவர்கள் அரசியல் ரீதியாக பாரபட்சம் காண்பித்ததாகவும், இந்த அமைப்புக்கள் தமக்கான நிதி சேகரிப்பிற்காக சிறுவர் ஆட்சேர்ப்பு விடயத்தை முதன்மைப்படுத்தியதாக மாலதி குற்றம் சாட்டுகிறார். இந்த விவகாரமானது ஊடகங்களுக்கு கவர்ச்சியைத் தருவதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தனிப்பட்ட ரீதியாகக் கூறியதாக மாலதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகத்தில் மாலதி பணியாற்றிய வேளையில், சிறிலங்கா இராணுவப் படைகளாலும், அரசாங்கத்திற்குச் சார்பான துணை ஆயுதக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணமாக்க உதவினார். படுகொலை செய்யப்பட்ட, காணாமற்போனவர்களின் உறவுகளைச் சந்தித்து மாலதி உரையாடியிருந்தார்.

2002 பெப்ரவரியில் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட பின்னர் இவ்வாறான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறைவடைந்த போதிலும், பின்னர் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. சிறிலங்கா அரசாங்கப் படைகள் இவ்வாறான சம்பவங்களில் அதிகம் ஈடுபட்டன. டிசம்பர் 2005ல் மட்டக்களப்பிலுள்ள தேவாலயம் ஒன்றில் நத்தார் பூசையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கலந்து கொண்ட வேளையில் படுகொலை செய்யப்பட்டார். இது இராணுவப் படைகள் இவ்வாறான கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

இதேபோன்று சிறிலங்கா விமானப் படையால் பல்வேறு விமானக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. சிறிலங்கா வான்படையின், இஸ்ரேல் நாட்டினால் வழங்கப்பட்ட கிபிர் விமானங்களின் உதவியுடன் 2007ல் மீனவக் கிராமம் ஒன்றின் மீதான விமானக் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வெளிவந்த Kfir Fodder என்கின்ற காணொலியைத் தயாரிப்பதற்கு மாலதி உதவிசெய்திருந்தார்.

சிறிலங்கா விமானப் படையால் பொதுமக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட கொத்துக் குண்டுத் தாக்குதலை எதிர்த்து மாலதி ஒரு அறிக்கை ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார். ஆனால் அனைத்துலக செய்தி நிறுவனங்கள் இந்த அறிக்கையை முதன்மைப் படுத்தவில்லை. இதேபோன்று பொசுபரஸ் குண்டுகளை சிறிலங்காப் படைகள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திய போதும், மேற்குலக ஊடகங்கள் இவற்றை அசட்டை செய்திருந்தன.

2006ல், சிறிலங்கா அரசாங்கமானது யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த போது கிழக்கைக் கைப்பற்றுவதற்கான பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமான ஜனவரி 2008 வரை நடைமுறையிலிருந்தது. இவ்வாறான நிலையில், கிழக்கு மற்றும் வடக்கைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வெளிநாட்டு சக்திகள் இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கியிருந்தன.

சிறிலங்கா இராணுவத்தினர் கிளிநொச்சியை நோக்கி முன்னேறியபோது, மாலதி உட்பட பொதுமக்கள் அனைவரும் வேறிடங்களுக்கு இடம்பெயர வேண்டியேற்பட்டது. பாதுகாப்பு வலயங்கள் என சிறிலங்கா இராணுவத்தினர் அறிவித்த போதிலும், மக்களைக் குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டனர்.

மாலதி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியேறிய பின்னர், மெனிக் பாம் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். இவருடன் இந்த முகாங்களில் மேலும் 300,000 வரையானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இங்கு நிலமை மிக பயங்கரமாயிருந்தது. « நாம் தங்க வைக்கப்பட்ட தடுப்பு முகாமில் காவலில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிகளைக் கைகளில் வைத்திருந்தனர். இவர்கள் எங்களை குற்றவாளிகள் போல் நடாத்தினர். இவர்கள் ஆண்கள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி தாக்கினர். இந்த இராணுவத்தினருக்கு கோபம் வரும்போதெல்லாம், இவர்கள் தமது சப்பாத்துக்களால் மக்களைத் தாக்கினர் » என மாலதி குறிப்பிட்டுள்ளார். இந்த தடுப்பு முகாங்கள் நெரிசலாகக் காணப்பட்டதுடன், நோய்கள் எளிதில் பரவின.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் டிசம்பர் 2009ல் விடுவிக்கப்பட்டனர். ஆனால், தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வந்த பின்னரும் கூட இந்த மக்கள் சிறிலங்கா இராணுவத்தாலும், துணை ஆயுதக்குழுக்களாலும் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

இந்த நூலானது மாலதியின் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் அவதானிப்புக்கள் தொடர்பாக விளக்குகிறது. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் அனைத்துலக சக்திகளின் பங்களிப்பு என்ன என்பது தொடர்பாக மாலதி சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். உலகின் அதிசக்தி வாய்ந்த நாடுகள் போரின் போது சிறிலங்காவுக்கு உதவி செய்துள்ளன.

« தமிழீழ விடுதலைப் புலிகள், புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் மட்டுமே போராட்டத்தை நடாத்தினர். இவர்களுக்கு எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் உதவவில்லை. இதுதவிர, தனது குறிக்கோளை மிக வெற்றிகரமாக நடாத்தி முடிக்கின்ற விவேகத்தை புலிகள் அமைப்பு கொண்டிருந்தது. தமது கோரிக்கையை இவர்கள் உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளனர். கதவைத் திறப்பதற்கு கற்றுக்கொண்ட செம்மறியாடு போன்று புலிகள் செயற்பட்டனர் » என மாலதி குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் மாலதி இந்தியா மற்றும் சீனாவின் நோக்கம் தொடர்பாக மாலதி கூறுகிறார். சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு தனித் தாய்நாடொன்று வழங்கப்பட்டால் தனது நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களுக்கு தனித் தாய்நாட்டை வழங்க வேண்டி ஏற்படலாம் என இந்தியா கருதியது. « மோசடிகளில் ஈடுபடாத புலிகள் அமைப்பானது, அடக்கப்பட்ட சாதிகள் மற்றும் சிறுபான்மை இனங்களைக் கொண்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் சக்தியாக விளங்கியது » என மாலதி கூறுகிறார்.

« மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்திய மாக்கடலின் ஊடாக எண்ணெய் வளத்தைப் பெற்றுக் கொள்ளும் வழங்கற் பாதையைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்கா மற்றும் நேற்றோ நாடுகள் இந்திய மாக்கடலில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதைத் தடுப்பதற்கும் » சீனாவானது சிறிலங்காவின் தெற்கில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து தனது செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டும் எனக் கருதியது.

அமெரிக்காவால் தலைமை தாங்கப்படும் மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவளித்தன. சில குறிப்புக்களைத் தவிர, சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேற்குலகத்தால் வழங்கப்பட்ட இராணுவ உதவிகள் தொடர்பாக இந்த நூல் ஆராயாது என மாலதி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட பரப்புரை தொடர்பாக மாலதி தனது நூலில் ஆராய்கிறார்.

« மேற்குலக நாடுகளால் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரப்புரை நடவடிக்கையானது புலிகள் அமைப்பின் கொள்கைக்கு அவமதிப்பை ஏற்படுத்தியது. சிறிலங்கா அரசாங்கத்தால் பல பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளைப் புலிகள் எதிர்த்து நின்றபோது, இவ்வாறான பரப்புரைகள் புலிகள் தொடர்பாக பொய்யான கருத்தை உருவாக்கியது. இதற்கும் மேலாக, வேறு எந்தவொரு தீர்வுகளும் சாத்தியப்படாது போது, புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர் என்கின்ற கருத்தை மேற்குலகம் தொடர்ச்சியாக மறுதலித்தது » என மாலதி தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்குலக நாடுகளால் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட பரப்புரையின் ஒரு பகுதி என மாலதி கருதுகிறார். குறிப்பாக போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட காலப்பகுதியில், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள், புலிகளுக்கு எதிராக சிறுவர் ஆட்சேர்ப்பை முக்கியப்படுத்தி பரப்புரைகளை மேற்கொண்டன. ஆனால் இந்த நிறுவனங்கள் சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மீறல்களை அசட்டை செய்து புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்பு விவகாரத்தை மட்டும் பெரிதுபடுத்திப் பேசின.

தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், மேற்குலகமானது சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் கால மீறல்கள் தொடர்பாக தமது விமர்சனங்களையும் அழுத்தங்களையும் முன்வைத்தன. ஆனால் மேற்குலக நாடுகள் தற்போதும் தமிழர்களுக்கான தனித்தாய்நாடை ஏற்றுக் கொள்ளவில்லை.

« தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில், இவர்களது கட்டுப்பாட்டின் கீழிருந்த வன்னியில் வியக்க வைக்கும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. தென்னாசியாவில் புரையோடிப் போயுள்ள சாதி வேறுபாட்டுக் கொள்கையை புலிகள் ஒழித்திருந்தனர். சமூகத்தில் பெண்களுக்கான பங்களிப்பை புலிகள் வரையறுத்தனர். இந்தப் பெண்கள் துணிச்சலுடன் செயற்பட்டனர். சமூக மக்களுக்கு பல்வேறு நலன்புரி சேவைகளை புலிகள் வழங்கினர். போராட்டம் என்பதை தமது ஆன்மாவாகக் கொண்ட மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுதிரண்டனர். தமிழ் மக்களுக்கும் தென்னாசியாவுக்கும் நலன் பயக்கும் பல்வேறு சமூக மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக புலிகள் வேலைத்திட்டங்களை மேற்கொண்டனர். இவ்வாறான பலம் மிக்க, வலுமிக்க மாற்றங்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய புலிகள் அமைப்பு தற்போது அழிக்கப்பட்டு விட்டது » என மாலதி விளக்குகிறார்.

இந்நிலையில், பெரும்பாலான தமிழ் மக்கள் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தனர் என்பதை விளங்கிக் கொள்ளுதல் முக்கியமானதாகும். உலக நாடுகளின் அரசாங்கங்களும் ஊடகங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளை 'பயங்கரவாதிகள்' எனச் சித்தரிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதானது 'பயங்கரவாதம்' என சித்தரிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகள் சில பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் கூட, சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது, அவை மிகச் சொற்பமாகும். எதுஎவ்வாறிருப்பினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் எவ்வித பங்கும் வகிக்கவில்லை. இவர்கள் இனவாத, இனக் கொலை புரியும் ஆட்சிக்கு எதிராக தமது சுதந்திரத்தைப் பெற்றெடுப்பதற்காக போராடினார்கள். புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூறுவதால், அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் மற்றும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழ் அகதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2007ல், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உதவித் திட்டங்களை மேற்கொள்வதற்காக நிதி சேகரித்த மூன்று அவுஸ்திரேலியத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். புலிகளுக்கு உதவி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2010ல் இந்தக் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவுஸ்திரேலிய வாழ் தமிழ் சமூகம் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளன.

இன்று 50 வரையான தமிழர்கள், அவுஸ்திரேலியாவில் காலவரையறையற்று தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்திருந்தது.

இவ்வாறானவர்கள் பயங்கரவாதத்திற்கு எவ்விதத்திலும் துணைபோகவில்லை என்பதை காண்பிப்பதற்கு மாலதியினுடைய நூல் உதவுகிறது.

0 கருத்துக்கள் :