தமிழீழ மக்களுக்கு அடித்தால் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தி நியாயம் கேட்கும்!

25.6.13

கடந்த 20 ஆம் நாள் வியாழக்கிழமை லண்டனில் இடம்பெற்ற சம்பவம் உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
காலத்தின் தேவை கருதி மௌனித்திருந்த தமிழ் மக்களை, மீண்டும் ஒருமுறை சீண்டித் தட்டியெழுப்பியுள்ளது சிங்களம். அமைதியான வழியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த  தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய சிங்களம், தமிழர்களைப் போராட்டக் களத்தில் இழுத்ததுடன் நிற்காமல், தனது சுய உருவத்தை மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்திற்கு நிருபித்துக் காட்டியுள்ளது.
லண்டனில் சிறிலங்கா  துடுப்பாட்ட  அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் கடந்த 17 ஆம் நாள் திங்கட்கிழமை, லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், சிறிலங்காவுக்கும்  இடையில் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.
சிறிலங்கா துடுப்பாட்ட அணியினை பார்வையிட சென்ற சிங்களவர்களால், அமைதியான முறையில் கவனியீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர் மீது  பிரித்தானிய காவல்துறையினரையும் மீறி சிங்களவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலின் காரணமாக   கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்ட பலர் காயமடைந்துள்ளனர். பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற பேதமின்றி சிங்களவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகினர். மற்றும்  சிங்கள வன்முறையாளர்கள், தமிழ் மக்களின் மீது அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் தகாத சைகைகள் மூலமாகக் காட்டியுமுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் சிங்களம் எவ்வாறு எமது மக்களை அடக்கி ஒடுக்கி அடிமை படுத்தவும்  எமது நிலங்களை பறித்து, கலாச்சாரத்தை சீர்கெடுக்க முனையும் இப்பொழுதில் தமிழர்கள் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளிலும் தனது இனவெறியை காட்டி மகிழ்கின்றது. இதனையடுத்து உலகெங்கும் வாழ் தமிழ் மக்கள் கொதித்துப்போயினர்.
ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் நிகழ்த்திய காடைத்தனத்திற்குப் பதிலடியாக வேல்ஸில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்திய - சிறீலங்கா துடுப்பெடுத்தாட்டப் போட்டியின் பொழுது மைதானத்தின் மையப்பகுதிக்குள் அதிரடியாக தமிழீழ தேசியக் கொடியுடன்  பாய்ந்த தமிழ் இளைஞர்கள், கொடியைப் பறக்கவிட்டவாறு மைதானத்தைச் சுற்றி வலம் வந்துள்ளனர்.
இதனால் சிறீலங்கா துடுப்பெடுத்தாட்ட அணியின் ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டதோடு, தமிழீழ தேசியக் கொடியுடன் பாய்ந்த மானத்தமிழர்களை உற்சாகப்படுத்தி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் தமிழீழ தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு நின்ற ஈழத்தமிழ் உறவுகள் ஆராவாரித்துள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக அங்கு நின்ற இந்திய துடுப்பெடுத்தாட்ட ரசிகர்கள் சிலரும் குரலெழுப்பியுள்ளனர். இதனிடையே மைதானத்திற்கு வெளியே தமிழீழ தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்க கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழ் உறவுகள், சிங்களத்தின் தேசியக் கொடியாகிய சிங்கக் கொடியை வீதியில் வீசியெறிந்தும், காலால் மிதித்தும் தமது எதிர்ப்பைக் காண்பித்துள்ளனர்.
இதேநேரத்தில் ஈழத்தமிழ் போராட்டவாதிகளை தாக்க முற்பட்ட சிங்களக் காடையர்கள் சிலர் அங்கு நின்ற தமிழ் இளைஞர்கள் சிலரால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் இருந்து நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. தமிழர்கள் மீது சிங்களவர்கள் கைவைத்தால், உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் தட்டிக்கேட்பர் என்பது நம்பிக்கை தரக்கூடிய விடயம். அதனையே இன்று நிருபித்துக் காட்டியுள்ளனர்.
அத்தோடு சர்வதேசத்துக்கு எமது போராட்டத்தின் நிலை உணர்த்தப்பட்டுமுள்ளது. இது உலகெங்கும் வாழ் தமிழ் மக்களை மீண்டும் வீரமுழக்கமிட வைத்துள்ளது. உலகத் தமிழினம் பொறுமையின் விளிம்பில் நின்றே பொறுமைகாக்கின்றனர். உலகம் இதனைப்புரியும் நாளும் வெகுதூரத்தில் இல்லை. தருமம் தாமதித்தே தன் நீதியைத்தரும்.
“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ’’
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரான்சு.

0 கருத்துக்கள் :