கோத்தபாயவின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு!- வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றுக்குத் தொடர்பு?

29.6.13

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கைத்தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் கடும் அதிர்ச்சியுற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச, தனது கைத்தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

தனது கைத்தொலைபேசியை இரகசியமாக ஒட்டுக் கேட்பதன் மூலமாக தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை சட்டவிரோதமான முறையில் பெற்றுக் கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கையொன்றில் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் செயற்படும் வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேற்கு நாடொன்றின் பிரஸ்தாப தூதரகத்திற்குள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதற்கான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு செயலாளர் உட்பட அரசின் முக்கிய பிரமுகர்கள் சிலரின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்படும் அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளிவந்துள்ளது.

இந்த நடவடிக்கையில் குறித்த வெளிநாட்டுத் தூதரகம் தங்கள் நாட்டின் பலம் வாய்ந்த புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் அரசாங்கமும், தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமும் தனித்தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது

0 கருத்துக்கள் :