கள்ளகாதலன் மூலம் கணவனை கொலை செய்த பட்டதாரி பெண்: பரபரப்பு வாக்குமூலம்

17.6.13

பண்ருட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா. பண்ருட்டியைச் சேர்ந்த துரைசாமி செட்டியார் மகன் சீனிவாசன். கல்பனாவுக்கும் சீனிவாசனுக்கும் 31.05.2012ல் திருமணம் நடந்தது. சென்னை சூளை பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக சீனிவாசன் பணிபுரிந்து வந்தார்.

தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊரான பண்ருட்டிக்கு வந்தனர். பண்ருட்டியில் இருந்து திருவந்திபுரம் கோயில் மற்றும் சில இடங்களகுக் திருமண நாளான 31.05.2013 அன்று சென்று வரலாம் என்று இருவரும் பேசிக்கொண்டனர். அதன்படி 31ஆம் தேதி கல்பனாவுடன் சீனிவாசன் பைக்கில் கடலூர் சென்றுவிட்டு மேலும் சில இடங்களுக்கு சென்றுவிட்டு இரவு 7 மணி அளவில் சிறுவந்திபுரம் பாலூர் வழியாக பண்ருட்டி நோக்கி வரும்போது, அணைக்கட்டு அருகே இரண்டு மர்மநபர்கள் வழிமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். கல்பனாவிடம் இருந்த 10 பவுன் செயின், வளையல் ஆகியவற்றை அந்த இருவரும் பறித்துச் சென்றனர்.

இவ்வாறு நடந்ததாக, கல்பனா பண்ருட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி முருகன், கடலூர் எஸ்.பி. ராதிகா, டி.எஸ்.பி. சிவசுப்பு ஆகியோர் நேரடியாக சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டதோடு, விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் டி.எஸ்.பி. சிவசுப்பு, இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, வாசுதேவன், சப்இண்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, ஏட்டுகள் ரமேஷ், ஊமைத்துரை, சேட்டு, சிவசந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்த விசாரணை அடிப்படையில், பண்ருட்டி மேலப்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பத்மநாதன் என்பவரின் மகன் திணேஷ்பாபு, அவனது நண்பன் முரளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் சம்மந்தப்பட்ட கல்பனாவையும் கைது செய்தனர்.

விசாரணையில் முரளி கூறியதாவது, சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனா விழுப்புரம் கல்லூரியில் படிக்கும்போதே திணேஷ்பாபுவுடன் காதல் கொண்டிருந்தார். இருவரும் இருவேறு பிரிவுகளை சேர்ந்ததால், அவர்களது வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தால் தனிமையில் இவர்கள் சந்தித்து வந்தனர்.

இதையடுத்து கல்பனாவை அவரது தந்தை சீனிவாசனுக்கு திருமணம் முடித்து வைத்தார். இதேபோல் பத்மநாதன் தனது மகனுக்கு நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணம் முடிந்தாலும் கல்பனாவுக்கும், திணேஷ்பாபுவுக்கும் தொடர்பு நீடித்தது.

இந்த விஷயம் அறிந்த சீனிவாசன், கல்பனாவை கண்டித்துள்ளார். கணவரின் தொல்லை தாங்க முடியவில்லை என்று திணேஷ்பாபுவிடம் கண்ணீர்விட்ட கல்பனா, சீனிவாசனை தீர்த்துக்கட்டுமாறு கூறியுள்ளார். இதையடுத்து கல்பனாவும் திணேஷ்பாபுவும் திட்டமிட்டனர். திட்டப்படி கணவரை அவர் பைக்கில் கடலூர் சென்று திரும்பியுள்ளார். திரும்பி வரும் வழியில் ஏற்கனவே திட்டமிட்டபடி சீனிவாசனை வழிமறித்து இருவரும் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

கல்பனா கொடுத்த வாக்குமூலத்தில், திணேஷ்பாபுவுடன் காதல் ஏற்பட்டது. அதனை என்னால் மறக்க முடியவில்லை. எனது வீட்டார் என் காதலை எதிர்த்தனர். சீனிவாசனுடன் திருமணம்செய்து வைத்தனர். ஆனால் நான் இதுவரை அவருடன் தாம்பத்தியம் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்- தட்டிக்கழித்துக்கொண்டே வந்தேன். கணவனின் தொல்லை தாங்க முடியாமல், திணேஷ்பாபுவும் நானும் சீனிவாசனை கொலை செய்ய திட்டமிட்டோம். திட்டமிட்டப்படி கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு திருவதிகை வழியாக சீனிவாசனை அழைத்து வந்தேன். அப்போது திருவதிகை அணைக்கட்டு அருகே ஏற்கனவே காத்திருந்த தினேஷ்பாபுவும் அவரது நண்பர் முரளியும் வந்தனர். பைக்கை தடுத்து நிறுத்தினர். சீனிவாசனை ஓரமாக தள்ளிக்கொண்டு சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் எனது நகைகளை கழுற்றி தினேஷ்பாபுவிடம் கொடுத்துவிட்டு, போலீசாரிடம்  நகை கொள்ளையில் கொலை நடந்ததாக புகார் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

கல்பனா கொடுத்த வாக்குமூலம், பண்ருட்டி பகுதி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.சேகர்

0 கருத்துக்கள் :