இது இந்தியாவின் இறையாண்மைக்கே விடப்பட்ட சவாலாகும் : கலைஞர்

7.6.13

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் வேட்டையாடப்படுவது என்பது நின்றபாடில்லை! தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளின் சார்பிலும் எத்தனையோ முறை மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும், ஏன் ஒருசில நேரங்களில் மத்திய அரசு இதைப் பற்றி இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதிலும், இலங்கைக் கடற்படை அதைக் காதிலே போட்டுக் கொள்வதே இல்லை.

ஆண்டுதோறும் கடலில் மீன் இனப் பெருக்கத்துக்காக 45 நாட்கள் மீன் பிடிக்க விசைப் படகுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கி, கடந்த 1ந்தேதி முதல் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லத் தொடங்கினர். பொதுவாக விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் விட்டு ஒரு நாள்தான் முறை வைத்து மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். அந்த வகையில் ஜூன் 1ஆம்தேதியன்றும், 3ஆம் தேதியன்றும் மீன் பிடிக்கச் சென்ற போது அதிக அளவில் மீன்கள் கிடைத்ததாகவும், இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல் எதுவுமின்றி மீன் பிடித்து வந்ததாகவும் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

  ஆனால் ராமேஸ்வரத்திலிருந்து 5-6-2013 அன்று சென்ற மீனவர்களில் 24 பேரை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். பின்னர் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வருகிற 20ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

அனுராதபுரம் சிறையில் இவர்கள் இப்போது அடைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் மீளாமல் இருக்கின்ற நிலையில், நேற்றையதினம் (6-6-2013) 25 தமிழக மீனவர்களை சிறை பிடித்து, தங்கள் கப்பலுடன் படகுகளை இணைத்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த 25 மீனவர்கள் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்படை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூன் 19ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப் பட்டு, யாழ் சிறையிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கைது செய்த 49 மீனவர்களை மட்டுமின்றி, அந்தப் பகுதியிலே மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்களையும் துப்பாக்கி முனையில் அடித்து விரட்டியிருக்கிறார்கள். இதன் காரணமாக 2 படகுகள் பாறையின் மீது மோதி விபத்திற்குள்ளான தாகவும், படகிலே இருந்த மீனவர் முனியசாமி கடலில் விழுந்து உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த 49 மீனவர்கள் தவிர நேற்று முன் தினம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் போஸ், பாபு, ரீகன் ஆகிய மூன்று மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படை போலீசார் சிறை பிடித்திருக்கிறார்கள். அவர்களை தங்களது ரோந்துப் படகில் வைத்தே விசாரித்து கடுமையாக மிரட்டியிருக்கிறார்கள்.

 சுமார் பத்து மணி நேரம் அவர்களை தங்கள் படகிலேயே போலீசார் வைத்திருந்து பின்னர் இந்த மூவரையும் விடுவித்திருக்கிறார்கள். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 49 மீனவர்களையும் விடுதலை செய்யாவிட்டால், இலங்கை நோக்கி ஜூன் 22ந்தேதி அனைத்து விசைப் படகுகளிலும் வெள்ளைக் கொடி கட்டியபடி பேரணி நடத்துவோம் என்ற அறப்போராட்ட அறிவிப்பினை ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் குமரி மாவட்டம், குளச்சலைச் சேர்ந்த ஜெயசீலன், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஆண்டனி சுரேஷ் உட்பட 11 மீனவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சவூதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ஈரான் கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டு, அங்கேயுள்ள பந்தரா அப்பாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களோ இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதுவதோடு தன்னுடைய கடமை முடிந்தது என்ற போக்கில் செயல்பட்டு வருகிறார். இந்த முறையும் நேற்றையதினம் இந்தச் செய்தி வந்ததும், 49 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார். உண்மையில் தற்போது கச்சத் தீவு அருகே இலங்கை போர்க் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் சீன வீரர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அச்சுறுத்துகிறார்கள். இது இந்தியாவின் இறையாண்மைக்கே விடப்பட்ட சவாலாகும்.

இதற்கான எதிர்ப்பு அதிகமான நிலையில் போர்க் கப்பல்களை இலங்கை அரசு அகற்றிய போதிலும் தற்போது மீண்டும் கச்சத் தீவு அருகே இலங்கை அரசு போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ளது. பெரிய போர்க் கப்பல் ஒன்றும், ரோந்துக் கப்பல்கள் பத்தும் அங்கே நிறுத்தப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் அச்சமடைந்திருக்கிறார்கள். கச்சத் தீவு பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்பதால், அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. அதைச் சுட்டிக்காட்டி தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. தொடர்ந்து இந்திய மீனவர்கள் கடந்த பல ஆண்டுக் காலமாக இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல் கடுமையாக ஒரு நடவடிக்கை எடுத்தாலன்றி, தமிழக மீனவர்கள் வாழ்வில் ஒளி தென்படப்போவதில்லை’’என்று கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :