ஜெனிவாவுக்கு அடுத்த தெருக்கூத்து! புகழேந்தி தங்கராஜ்

2.6.13

தாய் ஆட்டின் பாதுகாப்பில் இருக்கும்வரை ஆட்டுக்குட்டிகளை நெருங்க ஓநாயால் முடியாது. இரை தேடுவதற்காக வெளியே செல்லும் நேரங்களில், 'நான் இரை தேடி எடுத்து வருவதற்குள் யார் வந்து கூப்பிட்டாலும் கதவைத் திறக்கக்கூடாது' - என்று குட்டிகளை எச்சரித்துவிட்டுத்தான் போகும்.
தாய் ஆட்டின் முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளைத் தூரத்திலிருந்து நீண்டகாலமாகப் பார்த்துக்கொண்டே இருந்த ஓநாய், ஒரு சூழ்ச்சி செய்தது. தாய் ஆடு இரை தேடச் சென்ற அரைமணி நேரம் கழித்து, ஆட்டுக்குட்டிகள் இருந்த இடத்துக்குச் சென்று, வெளியேயிருந்து கதவைத் தட்டியது. உள்ளேயிருந்த குட்டிகள் 'கதவைத் தட்டுவது யார்' என்று கேட்டன. ஓநாய் தனது குரலை சற்று மாற்றிக் கொண்டு, 'உங்கள் தாயாரின் தோழி வந்திருக்கிறேன், உங்களுக்கான இரையை என்னிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறாள், கதவைத் திறங்கள்' என்றது.
பசியிலிருந்த மற்ற ஆட்டுக்குட்டிகள் கதவைத் திறக்க தயாராகிவிட்டன. ஒரு புத்திசாலி ஆட்டுக்குட்டிக்கு மட்டும்தான்  சந்தேகம் எழுந்தது. இப்படியொரு சினேகிதி இருந்தால் இவளைப்பற்றி அம்மா  தங்களிடம் சொல்லியிருப்பாளே - என்று நினைத்தது அது. கதவைத் திறக்கவேண்டாம் - என்று மற்றவர்களைத் தடுத்தது.
பொறுமையிழந்த ஓநாய், 'கதவைத் திறக்க இவ்வளவு நேரமா' என்று வெளியேயிருந்து கத்தியது. உச்சஸ்தாயியில் ஓநாய் கத்த, அது யாரென்பதைப் புரிந்துகொண்டது புத்திசாலி ஆட்டுக்குட்டி.  "கதவு பழுதாகி விட்டது, திறக்க முடியவில்லை. அதனால், கதவுக்குக் கீழே இருக்கிற சிறிய இடைவெளியில் நுழைந்து நீங்கள் உள்ளே வாருங்கள்" என்று அழைத்தது ஆட்டுக்குட்டி. 'இவ்வளவு சிறிய இடைவெளியில் நான் எப்படி நுழைந்து வரமுடியும்' என்று எரிச்சலுடன் கேட்டது ஓநாய்.
'உங்கள் முகப்பகுதியை முதலில் உள்ளே கொண்டுவர முடியாது. அதனால், உங்கள் வாலை முதலில் உள்ளே நுழையுங்கள். நாங்கள் அதைப்பிடித்து இழுத்தால்போதும், அடுத்த நொடி நீங்கள் உள்ளே வந்துவிடுவீர்கள்' என்றது ஆட்டுக்குட்டி. எப்படியாவது ஆட்டுக்குட்டிகளை அடித்து ரத்தம் குடித்து மதிய உணவை முடித்துக் கொள்வது என்கிற தீர்மானத்தில் இருந்த நரிக்கு, இந்த ஐடியா மிகவும் பிடித்திருந்தது.
கதவுக்குப் பின்புறம் ஆட்டுக்குட்டிகள் கத்திரிக்கோலுடன் காத்திருந்ததை அறியாமல் வாலை உள்ளே நீட்டியது ஓநாய். அதற்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. அதற்குப் பிறகு, மிஸ்டர் ஓநாயால் ஆடுகளிடம் மட்டுமல்ல, வேறு எவரிடமும் வாலாட்ட முடியாது போனதற்கு என்ன காரணம் என்பதையும் சொல்லத் தேவையில்லை. ஒருவேளை லஞ்ச்சுக்காக வாலை இழந்த ஓநாயின் கதை இது.

தாய் ஆடு வெளியே போயிருக்கும் நேரத்தில், ஆட்டுக்குட்டிகள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்பது இந்தக் கதையிலிருந்து புரிகிறது. ஆட்டுக்குட்டிகள் எச்சரிக்கையாய் இருந்தால், ஓநாய்கள் வாலாட்ட முடியுமா? ஆட்டினா வெட்டிருவோம்ல!
இதைப் புரிந்துகொண்டு ஒட்டுமொத்தத் தமிழினமும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய நேரம் இது. வீடு கட்டிக் கொடுக்கிறோம், ரோடு போட்டுக் கொடுக்கிறோம், ரயில் விடுகிறோம் - என்றெல்லாம் வாலை விட்டால், அது யாருடைய வால் என்று பார்க்க வேண்டும் முதலில்.
நாமும் நமது உறவுகளும் எச்சரிக்கையாக இருப்பதைப் பார்த்தபிறகுதான் வேறுமாதிரி சீன் போட்டார்கள், ஆயுதம் தொடுத்தவர்களும் ஆயுதம் கொடுத்தவர்களும். ஜெனிவாவில் அதுதான் நடந்தது. இலங்கைக்கு எதிரான - என்கிற பெயரில் இலங்கைக்குச் சாதகமான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர, அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்ற விடமாட்டோம் - என்று இலங்கை குய்யோ முறையோ என்று கத்த, அதை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்று தீர்மானிக்க முடியாத தர்மசங்கடமான நிலையில் இருப்பதைப் போல இந்தியா பாவ்லா காட்ட - அடேங்கப்பா..... உலக நாயகன்களெல்லாம் தோற்கிற அளவுக்கு உலக நாடுகள் தங்கள் நடிப்பாற்றலைக் காட்டிய சந்தர்ப்பம் அது.
'அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்' என்ற குரல் தமிழ்நாட்டிலிருந்து ஓங்கி ஒலிக்கும் என்று எதிர்பார்த்த இந்தியாவின் முகத்தில் கரிபூசியவர்கள் தமிழக மாணவர்கள். லயோலா மாணவர்கள் மூட்டிய நெருப்பில், ஒட்டுமொத்தத் தமிழக மாணவர்களும் அந்தக் குப்பைத் தீர்மானத்தை எரித்ததைப் பார்த்து நொந்துபோனது இந்தியா. அது யாருடைய வால் என்று தெரிந்தே அதை நறுக்கினார்கள் மாணவர்கள். இலங்கையே எழுதியதைப் போன்ற ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருவதும், அதை ஆதரிப்பதாக இந்தியா நடிப்பதும் வெட்கக்கேடு - என்று சொல்லிச் சொல்லி இந்தியாவின் செவுளில் அறைந்தார்கள்.
ஜெனிவா நெருப்பே இன்னும் அணைந்தபாடில்லை. அதற்குள்,  அடுத்த தெருக் கூத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதி முடித்துவிட்டன, இந்தியாவும் இலங்கையும். வடக்கு மாகாணத் தேர்தல் தொடர்பாக அவர்கள் நடத்தப் போகிற கூத்து இது.
காவல்துறை அதிகாரம், அரசு நிலங்கள் நிர்வாகம், நிதி நிர்வாகம் - ஆகியவற்றை மாகாணத்துக்கு வழங்கும் 13 வது சட்டத் திருத்தம் பிரிவினைக்கு வழிவகுக்கக் கூடியது, பிரிவினைவாத சட்டங்களை வைத்துக் கொண்டு தேர்தலை நடத்தக் கூடாது, மாகாண சபைத் தேர்தலில் தமிழர்கள் வெற்றிபெற்றுவிட்டால் இந்த உரிமைகளைப் பயன்படுத்திக்கொண்டு தமிழ் ஈழம் கேட்பார்கள் - என்று கோதபாய கோஷ்டி குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலே நடத்தக்கூடாது - என்று அவர்கள் எழுப்புகிற முழக்கம்தான் நடக்கப் போகிற கூத்தின் முதல் காட்சி.
கூத்தின் இரண்டாவது காட்சியில், தங்களை அறியாமலேயே தமிழ்த் தரப்பு இணைந்துகொள்ளும் அளவுக்கு, முதல் காட்சி ஆவேசமானதாக இருக்கும். 13வது சட்டத் திருத்தத்தில் கைவைக்காதே - என்று நம்மில் சிலரே குரல் கொடுப்பார்கள். இந்த நிலையில், நயவஞ்சக இந்தியா உள்ளே நுழையும். '13வது சட்டத் திருத்தம்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு' என்று பேசி, குழப்பக் குட்டையில் மீன்பிடிக்கப் பார்க்கும்.
ஜெனிவா கூத்து 'பார்ட் ஒன்' என்றால், மாகாண சபைத் தேர்தல் கூத்து 'பார்ட் டூ'. அமெரிக்காவாவது தீர்மானம் கொண்டு வருகிறதே - என்ற எண்ணத்தை ஏற்படுத்த எப்படி முயன்றார்களோ, அதே மாதிரி - 13வது சட்டத் திருத்தம்  ஓரளவாவது அதிகாரம் தருகிறதே - என்ற எண்ணத்தை ஏற்படுத்த இப்போது முயலுகிறார்கள். இதையும் மாணவர்கள்தான் முறியடிக்கவேண்டும்.
13வது சட்டத்திருத்தம், இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடையாது என்பது மட்டுமல்ல, அது தற்காலிகத் தீர்வு கூட கிடையாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள் இதயச்சந்திரன் போன்ற அரசியல்  ஆய்வாளர்கள். இந்தச் சட்டத் திருத்தத்துக்கும், கழுதைக்கு முன் காட்டப் படுகிற கேரட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது அவர்களது வாதம். இந்த கேரட்டைக் காட்டிக் காட்டியே, இலங்கை வண்டியை இழுக்க வைப்பார்கள் ஈழத் தமிழர்களை! அந்த வண்டி நகரும், அவர்கள் நினைத்த காரியம் நடக்கும்... அப்பாவித் தமிழர்களுக்கு 'காரியம்'தான் நடக்கும்.
கிழக்கு மாகாணத்தில் ஒரு முறைக்கு இருமுறை தமிழ்த் தரப்பின் ஆட்சி நடந்தது, நடக்கிறது. அந்த மாகாணத்துக்கு காவல்துறை, நில நிர்வாகம், நிதி நிர்வாகம் - ஆகிய அதிகாரங்களை 13வது சட்டத் திருத்தம் வழங்கி விட்டதா? வழங்காதது மட்டுமல்ல, அதைப் பற்றிப் பேசக் கூட இலங்கை அரசு முன்வரவில்லை. இந்தச் சட்டத் திருத்தம் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற வரப்பிரசாதம் - என்று வாய்கிழியப் பேசுகிற இந்திய அரசோ, இந்திய ஊடகங்களோ - அந்த சட்டத் திருத்தம் வழங்கும் அதிகாரங்களை கிழக்கு மாகாணத்துக்கு வழங்காதது ஏன் - என்று என்றைக்காவது கேட்டதுண்டா?
13வது சட்டத் திருத்தம் என்பது, 'தனித் தமிழ் ஈழம்' என்கிற உரிமை முழக்கத்தையும் தமிழ் ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையையும் நசுக்குவதற்காக ராஜீவின் இந்தியாவால் திணிக்கப்பட்ட மோசடி. 'கியூவில் நின்று  கொடுப்பதை வாங்கிக்கொண்டு போ' என்கிற ராஜீவ் அரசின் திமிர்வாதத்தைத்தான் அது பிரதிபலித்தது. தந்தை செல்வா தலைமையில் சம உரிமையும் நியாயமும் கேட்டுப் போராடிய மூத்த தலைவர்கள்தான், இலங்கையின் அடக்குமுறைகளால் நசுக்கப்பட்ட பிறகு 'தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு' என்கிற முடிவுக்கு வந்தார்கள். இன்றைக்கும், அதுமட்டும்தான் ஒரே தீர்வு, நிரந்தரத் தீர்வு. ராஜீவால் திணிக்கப்பட்ட 13வது திருத்தம் எந்த நிலையிலும் தீர்வு அல்ல. அது ஒரு ஹம்பக்.
இனப்படுகொலைக்கு நியாயம் கேட்க சர்வதேச சுதந்திர  விசாரணை  தேவை - என்கிற வலுவான குரலைத் திசைதிருப்பவே, அமெரிக்கா மூலம் ஒரு மோசடித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதைப்போலவே, திட்டமிட்ட இனப்படுகொலை மூலம்  ஒன்றரை லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ள நிலையில், 'தமிழ் ஈழம்' மட்டுமே தீர்வு என்று வலுவாக எழுகிற குரலைத் திசை திருப்பவே 13வது திருத்தம் என்கிற ராஜீவின் திணிப்பைத் தோண்டியெடுத்துக் குளிப்பாட்டி மீண்டும் மனையில் உட்கார வைக்கப் பார்க்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழினமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது.
காவல்துறை அதிகாரத்தையோ அரசுக் காணிகள் மீதான அதிகாரத்தையோ பிச்சை எடுத்துப் பெறுகிற நிலையில் ஈழம் இல்லை. ஈழம் அமையும் போது எல்லா அதிகாரங்களும், ஈழத்துக்குச் சொந்தம். தன்னுடைய விடுதலைக்காக ஒன்றரை லட்சம் உயிர்களைத் தாரை வார்த்திருக்கிறது அது. அந்த ஒன்றரை லட்சம் பேரின் உடல்களும், கொழும்பிலோ ஹம்பன்தோடாவிலோ புதைக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மண், அவர்களது மண், அவர்களது ரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டுள்ள மண். அந்த மண்ணை அவர்களுக்கே உரியதாக்குவதைத் தவிர வேறெந்தத் தீர்வும் இருக்கமுடியாது, இலங்கை இனப் பிரச்சினைக்கு!
வேறொரு தீர்வு இருப்பதாகச் சொல்லும் எவரும், ராஜீவ் காந்தியைப் போலவே நயவஞ்சகமாகவோ விவரம் அறியாமலோ,   பிரச்சினையைத் திசை திருப்புபவர்களாக இருப்பார்களே தவிர, தமிழர்களை நம்பவைத்துக் கழுத்தறுப்பவர்களாக இருப்பார்களே தவிர, ராஜபட்சேவின் ஏஜெண்டுகளாக இருப்பார்களே தவிர, தமிழர்களின் நிஜமான நண்பர்களாக இருக்க மாட்டார்கள்!
மனித உரிமைகளுக்காகவும் தமிழர் உரிமைகளுக்காகவும்  தொடர்ந்து குரல்கொடுத்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மாகாண சபைத் தேர்தல் தேச ஒற்றுமையை நாசமாக்கிவிடும் - என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் சிங்கள பௌத்த அரசியல்வாதிகளிடம் ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். "சகல அதிகாரங்களும் கொண்ட ஒரு அதிபர், பலமான நாடாளுமன்றம், முப்படைகள் - இவற்றைக் கொண்ட உங்களுக்கே இவ்வளவு அச்சம் இருந்தால், தமிழர்களுக்கு எவ்வளவு அச்சம் இருக்கும்" என்கிற அவரது கேள்விக்கு எவரும் பதில் சொல்லமுடியவில்லை.
தமிழர்களின் நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுகின்றன.  அதைத்தட்டிக் கேட்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, சித்திரவதைகளின் ஊற்றுக்கண்ணான நாலாவது மாடிக்கு விசாரணைக்கு அழைத்து அச்சுறுத்துகிறது புலனாய்வுப் பிரிவு. நில அபகரிப்பு பற்றிச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது பாய்ந்து பிராண்டுகிறது சிங்கள அரசு. 'ஊடகப் பிச்சைக்காரர்களின் பிதற்றல்' என்று கண்ணியமாக வர்ணிக்கிறது. (பத்திரிகையாளர்களை,  மலம் தின்னும் பன்றி, நக்கிப் பிழைக்கும் நாய் - என்றெல்லாம் அன்போடு விளிக்கும் கோதபாயவோடு ஒப்பிட்டால் இது 'கண்ணியம்' அல்லாமல் வேறென்ன?)
ஒரு எறும்புக்குக் கூட கொடுமை விளைவிக்காத சாத்வீக பௌத்த நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது தொடர்பாக, புத்தபிரானின் கொள்ளுப்பேரர்களான ராஜபட்சேக்களிடம்  நேரடியாக தீட்சை பெற்ற டக்ளஸ் தேவானந்தாவின் கூலிப்படையால், நியாயம் கேட்கும் தமிழ் இளைஞர்கள் 'அன்போடு' அழைத்துச் செல்லப்படுவது தொடர்கிறது. இந்த நிலையில், தேர்தலே நடந்தால் கூட 'எந்த லட்சணத்தில் அது நடக்கும்' என்பதைச் விவரிக்கவேண்டிய அவசியமே இல்லை. ஒன்று, வேட்பாளர்கள் காணாது போகலாம், அல்லது வாக்காளர்கள் காணாது போகலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை வரப்போவதாகக் கூறப்படுகிறது. (அவர் காணாமல் போகாமலிருந்தால் சரி!) கோதபாயவின் கூலிப்படைகள் இப்போதே பிள்ளைக்கு எச்சரிக்கை விடத் தொடங்கிவிட்டன. 'நவநீதம் பிள்ளை வரலாம், வடகிழக்குக்குக் கூட போகலாம், அரசுத் தலைவர்களுடன் பேசலாம். ஆனால், சர்வதேச சுதந்திர விசாரணை என்றெல்லாம் மூச்சு கூட விடக்கூடாது' என்று நிபந்தனை ஜாமீன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியொரு நிலையிலும் வாய்கிழியப்  பேசமுடிகிறது, மகிந்த மிருகத்தால்! ஆசியப் பிராந்தியத்திலேயே ஜனநாயகப் பண்பு கொண்ட அரசு இலங்கையில் தான் இருக்கிறது - என்று கூசாமல் பேசுகிறது பௌத்த மிருகம். மூச்சே விடக்கூடாது - என்று நவநீதம்பிள்ளைக்கே தாக்கீது அனுப்புகிறார்களே - அதுதான் ஜனநாயகப் பண்பின் உச்சமோ என்னவோ!
நாம் மட்டுமல்ல, ஈழப் பிரச்சினையில் திருப்புமுனையை ஏற்படுத்திய நம் பிள்ளைகளான தமிழக மாணவர்களும்  ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்போடு கவனிக்கவேண்டும். தமிழ் ஈழம் மட்டும் தான் தீர்வு -  என்கிற நிதர்சனத்தை உரத்துப் பேசுகிற கடமையும் பொறுப்பும் மற்றெவரையும் காட்டிலும் நமக்கே அதிகம். அதே சமயம், 13வது திருத்தம் என்பது ஒரு ஹம்பக் என்பதைச் சொல்லவும் நாம் தயங்கக் கூடாது. ராஜீவ் காந்தி விட்டார் என்பதற்காக, அவர் விட்ட கொட்டாவியான கெட்ட ஆவியுடன் நாம் குடித்தனம் நடத்த முடியுமா? கூடவே இருந்து குழிபறித்தவர் எவராயிருந்தாலும், அவரை நயவஞ்சகராகவே அடையாளப்படுத்தும் விதத்தில் நேர்படப் பேசும் துணிவு நம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
1983ல் திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை நடந்தது இலங்கையில். நடந்தது இனப்படுகொலை - என்று இந்தியப் பிரதமர் இந்திரா அம்மையார் வெளிப்படையாகவே பேசினார். பெரும்பான்மை மிருகங்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்படும் ஒரு இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையைத் தடுக்கும் இழிவான செயலில் மனித நேயமுள்ள எவரும் இறங்கமாட்டார்கள். ராஜீவ்காந்தி என்கிற மனிதர், அதைக் கூட செய்யத்  தயங்கவில்லை. தமிழினத்துக்கு அந்த மனிதர் செய்த மாபெரும் துரோகம் அது. சாதாரண துரோகமில்லை.... தன்னை நம்பிய, தன்னால் நியாயம் கிடைக்கும் என்று நம்பிய மக்களுக்கு ராஜீவ்காந்தி செய்த நம்பிக்கைத் துரோகம்.
இனப்படுகொலை - என்று தாய் சொன்னதைக் கூட மறந்து, 'கொன்ற இனத்துடன் கொல்லப்பட்ட இனம் சேர்ந்து வாழவேண்டும்' என்று, நான்கு ஆண்டுகள் கழித்து வழிகாட்டியவர், ராஜீவ் என்கிற அந்த 'மாமனிதர்'. அதற்காக அந்த மனிதர் கண்டுபிடித்த பார்முலா தான், 13வது திருத்தம் - என்கிற மோசடி. உயிரச்சத்தில் உறைந்திருந்த மக்களிடம் போய், தந்தை செல்வாவின் முடிவுக்கு சம்பந்தமேயில்லாமல், 'அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள், ஒன்றாக வாழுங்கள்'  என்றார் பைலட்டாக இருந்து பிரதமரான அந்த மனிதர். அதிகாரங்கள் எப்படிப் பகிர்ந்து கொள்ளப்பட்டன,  முள்ளிவாய்க்கால் வரை தமிழினம் எப்படி பங்கருக்குள்ளேயே  வாழவேண்டியிருந்தது - என்பதை 2008 முதல் 2009 வரை பார்த்தவர்கள், ராஜீவின் ராஜதந்திரம் என்பது பூஜ்யதந்திரம் என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.
2009 இனப்படுகொலை நடந்து இப்போது நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தமிழீழம் தான் தீர்வு - என்கிற கருத்து வலுப்பெற்றுவரும் நிலையில், மீண்டும் பிரச்சினையைத் திசைதிருப்ப, 13வது திருத்தம் - என்கிற ஓநாய்களின் ஊளைச்சத்தம் எங்கிருந்தாவது எழக்கூடும். அதை  நாம் அனுமதிக்கவே கூடாது. நடந்தது இனப்படுகொலைதான் என்பதையும், கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேருக்கு  நீதிவேண்டும் என்பதையும் உரத்த குரலில் பேசுவது ஒன்றுதான் இப்போது நமக்கிருக்கும் ஒரே கடமை.
2009ல் நடந்தது இனப்படுகொலை - என்பது சர்வதேச அரங்கில் அம்பலமாகி வருகிறது. இந்த நிலையில், இனப்படுகொலை - குறித்து, மீண்டும் மீண்டும் பேச வேண்டும் நாம். அப்போதுதான், தமிழீழமே தீர்வு - என்கிற நமது நிலைப்பாட்டை உலகம் ஏற்கும். தமிழீழத்துக்குக் குறைந்த எதையும் பெறுவதற்காக உயிர் துறக்கவில்லை, நமது ஒன்றரை லட்சம் சொந்தங்கள். அந்தக் கனவுடன்தான் முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்தார்கள், அந்தக் கனவுடன் தான் புதைந்தார்கள். 13வது சட்டத் திருத்தம் - என்கிற மோசடி வாதங்களைத் தூக்கிப்பிடித்து, அந்த உறவுகளின் கனவுகளுக்குத் துரோகம் செய்யக்கூடாது எவரும்!
வடக்கு மாகாண சபை, காவல்துறை - நிலம் - நிதி அதிகாரம், 13வது திருத்தத்தின்படி அதிகாரப்பரவல் ...... இப்படியாக சுற்றிவளைத்து மூக்கைத் தொடும் எந்த முயற்சியும், தமிழீழக் கோரிக்கையைக் குழிதோண்டிப் புதைக்க முயன்ற ராஜீவின் நயவஞ்சக பார்முலாவின் தொடர்ச்சிதான் என்பதை உணரவேண்டும் நாம். நம்பிக்கை வாயிலில்தான் நிற்கிறோம் என்றாலும், தமிழீழத்தைக் குழிதோண்டிப் புதைக்க முயலும் ஓநாய்களுக்குப் பாடம் கற்பிக்க, கதவுக்கு இந்தப் புறம் கத்திரிக்கோலுடன்தான் நிற்கவேண்டும் எப்போதும்! தாய் ஆடு வெளியே இருக்கும் நிலையில், இந்தத் தற்காப்பு பார்முலா மிகமிக முக்கியம்.
நம்முடைய முதல் முக்கியக் கடமை இனப்படுகொலையின் போது கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் சொந்தங்களுக்கும் நீதி கேட்பது.... இனப்படுகொலை குறித்து சர்வதேச சுதந்திர விசாரணைக்கு வழிவகுப்பது... இனப்படுகொலை செய்தவர்களைக் கூண்டில் ஏற்றுவது. இதையெல்லாம் ஒன்றுபட்டு நின்று நாம் சாதித்துவிட்டால், 13வது திருத்தம் - என்கிற பசப்பு வார்த்தை வரலாற்றின் குப்பைத்தொட்டியில் எறியப்படும்.
"படுகொலை செய்யப்பட்ட ஒரு இனம் பிரிந்துபோவதைத் தடுக்கக்கூடாது, தமிழீழம் ஒன்றுதான் அவர்களுக்கான தீர்வாக இருக்கும்" - என்பதை, அதன்பிறகு நாம் சொல்ல வேண்டியதில்லை.... சர்வதேசமும் சொல்லும்! 'ஈழம்  வெல்லும், அதைக் காலம் சொல்லும்' என்று என் பழைய நண்பர்கள் இதைத்தான் குறிப்பிடுகிறார்களோ என்னவோ!

0 கருத்துக்கள் :