இந்தியாவில் இனி பயிற்சிகள் இல்லை; கொழும்பு அதிரடி!

26.6.13

இலங்கைப் பாதுகாப்புப் படையினரைப் பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான விடயத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இந்தியாவுக்கு பயிற்சிகளுக்காகச் செல்லும் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவரும் அதேசமயம், இதனால் பயிற்சிகளுக்குச் செல்லும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புத் தொடர்பில் அச்சுறுத்தல்களும், உளவியல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படுவதாக இலங்கை அரசு கருதுவதாகத் தெரிகிறது.
இதனால், பாதுகாப்பு அதிகாரிகளைப் பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பும் விடயத்தை மீள்பரிசீலனை செய்யவும், அவர்களுக்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கை அரசு உத்தேசித்திருப்பதாக அறியமுடிகின்றது.
இந்தியாவில் வெலிங்ரனில் பாதுகாப்புச் சேவைகள் உத்தியோகத்தர் பயிற்சிநெறியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த இரண்டு இராணுவ அதிகாரிகளை வேறு பயிற்சி நிறுவனத்துக்கு மாற்ற இந்தியா கேட்டபோதும் அந்தக் கோரிக்கையை அன்புடன் மறுத்துவிட்டதாக இலங்கை நேற்றுக் கூறியுள்ளது.
தமிழ் நாட்டில் தமக்கு எதிராக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எதிர்ப்புக் காரணமாக இந்த இரண்டு அதிகாரிகளும் பயிற்சியை நிறைவு செய்யாமல் இலங்கைக்குத் திரும்பினர்.
பாதுகாப்பு காரணமாக இந்த இரண்டு இலங்கை அதிகாரிகளையும் ஆந்திர பிரதேசத்திலுள்ள உயர் அதிகாரிகளைப் பயிற்றுவிக்கும் நிறுவனமொன்றுக்கு மாற்றுவதற்கு இந்தியா கோரிக்கையொன்றை முன்வைத்தபோதும் அதனை இலங்கை மறுத்துள்ளது.
இந்த இரண்டு அதிகாரிகளையும் இந்தியாவுக்குப் பயிற்சிக்காக அனுப்பியிருந்த நோக்கத்தைப் புதிய பயிற்சி நிறைவேற்றாது என்பதனால் இந்தியாவின் முன்மொழிவை அன்புடன் மறுத்துவிட்டதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இந்த இரண்டு அதிகாரிகளையும் மீளப்பெற்றமை இந்திய மற்றும் இலங்கை ஆயுதப் படைகளிடையேயான பயிற்சி ஒத்துழைப்புக்கு எவ்விதத்திலும் பாதகமாகாது என்றும் அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :