இறுதிப் பேரழிவை பார்க்க முள்ளிவாய்க்கால் செல்கிறார் நவநீதம்பிள்ளை!

23.6.13

வருகின்ற ஓகஸ்ட் மாதம் இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை (நவிப்பிள்ளை) இறுதிப்போர் இடம்பெற்ற தமிழர்கள் பெரும் அவலத்தைச் சந்தித்த முள்ளிவாய்க்கால்ப் பகுதிக்கும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைக்கான பயணம் பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டு இப்போதே அதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் நிலைமைகளை அவதானிப்பார்.
இலங்கைப் பயணத்தின் போது கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வடபகுதிக்கான பயணத்தை ஆரம்பிக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளார்.
மூன்று மாவட்டங்களிலும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை அவர் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவார். இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களையும் சந்திப்பார்.
இந்தப் பயணத்தின்போது அவர் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்லவுள்ளார்.

0 கருத்துக்கள் :