சிங்களத்தின் தூர நோக்குத் திட்ட வரைபுகள்!

5.6.13

திட்டமிட்ட இனவழிப்பை சிங்களம் நேற்று முந்தையநாள் தொடங்கிய நிகழ்ச்சித் திட்டமல்ல. தமிழினம் சிங்களம் என்ற அடையாளத்தையும் மீறி சகல வழியாலும் தங்களைப் பின்தள்ளப் போகின்றது என்ற எதிர்கால சிக்கல்களை மனதில் கொண்டு ... தனது நகர்த்தலை நூற்றாண்டு காலங்களுக்கும் மேலாக நடாத்தி வந்து முள்ளிவாய்க்காலில் முக்கால் பங்கை நிறைவேற்றி பின் மிகுதி பங்கை சர்வதேசத்தின் துணையுடன் நிறைவேற்றி வைக்க மீண்டும் தனது தொடர் பயணத்தை ஆரம்பித்து விட்டது.

 இவற்றையெல்லாம் பாதிப்புக்குள்ளாகும் தமிழினமும், தமிழின அரசியல் தலைமைகளும் எப்போது உணர்வார்கள் என்பது தான் பெரிய கேள்வி! காலம் காலமாக தமிழினத்தின் மேல் பாய்ச்சிவரும் வன்முறைகளை சற்று ஆய்வுக்குட்படுத்தினால் ஓரளவு புரிந்து கொள்ளலாம். கிழக்கின் மேலாதிக்கம் 1963 ம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து அம்பாறை என்ற தமிழருக்கு சொந்தமான நகரத்தை புதிய மாவட்டமாக பிரிந்தமை ஒரு உற்று நோக்கக்கூடிய சிங்களத்தின் வன்முறை. அம்பாறை மாவட்டத்திற்குள் மட்டக்களப்பில் இருந்து பிரித்து இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ்பேசும் கிராமங்கள் அனைத்தும் வளம்மிக்கவை. அதன் செல்வங்களை தம் பால் ஈர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்குள் சேர்க்கப்பட்டன.

 அத்தோடு தமிழினத்தின் செறிவைக் குறைப்பதும் ஒரு நோக்கமாக இருந்தது. இதன் முழு விபரங்களை பிறிதொரு கட்டுரையில் பார்ப்போம். இதே போன்று திருக்கோணமலை மாவட்டத்தில் கொட்டியாபுரப் பற்று என்ற முற்றுமுழுதான தமிழ்ப்பேசும் மக்களின் பூர்வீக மண்ணிலிருந்து பிரித்து சேருவில என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. கடல்வளமும் விவசாய வளமும் மிக்க பல கிராமங்கள் சேருவில என்ற பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டது. அதைவிட குறித்துரைக்கப்படவேண்டியது யாதெனில், தற்போதைய சேருவிலப் பிரதேசத்தினுள் வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட மிகப்பழமைமிக்க தமிழர் ஆலயமான வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயமும், பிராமணர் குடியிருப்பு என்ற பெயர் பெற்ற பழமைமிக்க தமிழர் பிரதேசமான கந்தளாய் சிவனாலயமும் சேருவில என்ற சிங்களத் தொகுதியினுள் அடங்குகின்றது.(இதற்கு தமிழ்த்தலைமைகள் எப்படி நடந்து கொண்டார்க்ளால் என்ற வரலாற்றுத்தகவல் வெகு விரைவில் வெளியிடப்படும்.

சிங்களம் தமது மேலாதிக்கத்தை கோலோச்சுவதற்கு எடுத்த இரண்டாவது பெரிய நடவடிக்கை. தமிழர் பூர்வீகங்கள் வெளிப்படுத்தப்படுமாயின் சிங்களத்தின் இருத்தலில் நிலைகுலைவு ஏற்படலாம் என்பதை முன்னுணர்ந்த சிங்களம் தமிழ்மக்களின் பூர்வீக வரலாற்றை தமிழ் மக்களுக்கே தெரியப்படுத்தவிடாமலும், வெளிப்படுத்த முயலும் சந்தர்ப்பங்களிலெல்லாம் முளையிலே கிள்ளி தடை போடுவதில் இன்றுவரை கவனமாக உள்ளார்கள். தமிழர்களின் பூர்வீக வரலாறு கூறும் இடங்களிலெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்டு நடைபெறுகின்றது.

அதாவது குடியேற்றங்களை மேற்கொள்ளுமிடத்தில் பலபக்கமாக தமிழர்களின் தொண்டைக்குழியை அமுக்கி உண்மைகள் வெளிவராமல் முற்றுமுழுதாக சிங்களப்பிரதேசமாக பிரகடனப் படுத்த இலகுவாக இருக்கும் என்ற சிங்களத்தின் நம்பிக்கை இன்றுவரை வீண்போகவில்லை. வடக்கின் மேலாதிக்கம் உலகில் எந்தவொரு இடத்திலும் மதத்தினூடாக இனத்தை வன்முறைக்குள் தூண்டி அரசியலில் கோலோச்சும் மேலாதிக்க நிகழ்வு இலங்கையை தவிர வேறெங்குமில்லை. வடக்கிலே உள்ள நாக விகாரை இதற்கொரு சான்று. இலங்கையின் ஆதிக்குடிகளாகிய நாகர் இனம் வாழ்ந்த அந்த இடம் மிகப்பெரிய சான்றாக அமைந்துவிடும் என்ற அச்சத்தில் அங்கே ஒரு பெளத்த விகாரைய ஸ்தாபித்து தங்கள் பிரதேசமென வெளிப்படுத்தி நாகர் வழித்தோன்றல்களையும், தமிழர்களையும் ஐதாக்கி மெளனிக்க வைத்திருக்கின்றார்கள்.

யாழ்ப்பாண நகரில் பிரதான சந்திகளையும் இடங்களையும் உற்று நோக்கின் அவ்வவ்விடங்களிலெல்லாம் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி(குறிப்பாக பாண் பேக்கரிகள், மோட்டார் கராஜ்சுகள்) தமிழ் மக்களை ஐதாக்கி சிங்களம் தனது காரியங்களை இலகுவாக நிறைவேற்றிக்கொண்டுள்ளது. இலங்கையின் கண்களாக இருப்பது யாழ் கல்வி என்பது உலகறிந்த உண்மை. கல்விக்கூடாக வெளிச்சத்திற்கு வரும் புத்திஜீவிகளை தடுத்து நிறுத்தவேண்டிய ஒரு வரலாற்றுத்தேவை சிங்களத்திற்கு இன்றுவரை உள்ளது.

 அதன் ஒரு பகுதிதான் 1981 இல் யாழ் நூலக எரிப்பு. அந்நூலகத்தினுள் தமிழர் சார்ந்த புரான வரலாற்று உண்மைகள் பொதிந்து கிடந்தமை சிங்களத்தின் மேலாதிக்கத்திற்கு இடையூறு ஏற்படலாம் என்ற தூரநோக்கு சிந்தனையில் செயலாக்கம் பெற்றதுதான் அந்த நூலக எரிப்பு. இப்படி ஏராளமாகச் சொல்லலாம். ஆனால் ஒன்றுமட்டும் உண்மை தமிழரின் பூர்வீகம் பற்றி தமிழருக்கு தெரிந்ததை விட சிங்களத்திற்கு அதிகமாக தெரியும் என்பதே! இதற்கான பிராயச்சித்த ஆய்வுகளை தமிழர்கள் ஒன்றுகூடி செயற்படுத்த முன்வரவேண்டும் என்பதைத்தவிர பூர்வீகத்தமிழர்களுக்கு நாம் செய்யும் கைமாறு வேறொன்றுமில்லை.

தியாகராசா முரளிநடேசன் tmnadesan@gmx.ch0 கருத்துக்கள் :